under review

வேற்றுப்பொருள் வைப்பணி

From Tamil Wiki

வேற்றுப்பொருள் வைப்பணி: தமிழில் கவிதையில் பயன்படுத்தும் அணி வகைகளில் ஒன்று. கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த இன்னொரு பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணி எனப்படும். பொதுப்பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்பொருளையும் விளக்குவது வேற்றுப்பொருள் வைப்பணி.

தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை

முன்ஒன்று தொடங்கி மற்றுஅது முடித்தற்குப்
பின் ஒருபொருளை உலகுஅறி பெற்றி
ஏற்றிவைத்து உரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே -(தண்டி. 46)

என்று வகுக்கிறது.

விளக்கம்

முதலில் ஒரு பொருளினது திறத்தைத் தொடங்கிய கவிஞர் பின்னர் அதனைச் சிறப்பாக முடிப்பதற்கு ஏற்ற, வலிமை வாய்ந்த உலகறிந்த வேறு ஒரு பொருளை ஏற்றி வைத்துச் சொல்வது வேற்றுப்பொருள் வைப்பு அணி. இவ்வாறு கவிஞன் தான் சொல்லத் தொடங்கிய பொருளை உறுதிப்படுத்துவதற்காக வேற்றுப் பொருளைச் சொல்லி முடிப்பதால் இவ்வணிக்கு இப்பெயர் அமைந்தது.

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு-1

புறம்தந்து இருள்இரியப் பொன்நேமி உய்த்துச்
சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் - மறைந்தான்
புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்?

பொருள்: உலகைக் காத்து, இருளை ஓடச்செய்து, அழகிய சக்கரத்தைச் செலுத்திச் சிறந்த ஒளியைப் பரப்பும் தேரை உடையவனாகிய கதிரவன் மறைந்தான். புறத்தே கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பிறந்து இறவாமல் வாழ்பவர் யார்?

அணிப்பொருத்தம்

'இருளை ஓடச்செய்து ஒளிபரப்பிய கதிரவன் மறைந்தான்' என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் பொருள். 'கடல் சூழ்ந்த உலகில் பிறந்து, இறவாமல் வாழ்வோர் யார்?' என்பது அச்சிறப்புப் பொருளை முடிப்பதற்காகக் கூறிய உலகறிந்த பொதுப்பொருள். பொதுப் பொருள் கொண்டு சிறப்புப் பொருள் விளக்கப்பட்டமையால் இது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று. பிறந்தவர் இறத்தல் என்பது உலகம் முழுவதிற்கும் பொருந்திய பொதுப்பண்பு.

எடுத்துக்காட்டு-2

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க் கணி.
- பழமொழி நானூறு

பொருள்: நெறித்துக்கொண்டிருக்கும் பூ மடல்களை உடைய தாழை செழித்திருக்கும் நீர்வளம் மிக்க சேர்ப்பு நில வேந்தனே,யாரும் சூடாமல் கிடக்கும் காட்டு முல்லைக்குப் பாரி தன் தேரை அளித்தான். மழை கண்டு மகிழ்ந்தாடும் மயிலை குளிரில் நடுங்குவதாக எண்ணிப் பேகன் தன் ஒப்பில்லாப் போர்வையை அளித்தான். இவை தெரிந்தே செய்த மடமைத் தன்மையை உடைய கொடைகள். சொல்லப்போனால், இப்படி அறிந்தே செய்யும் மடச்செயலும் சான்றோர்க்கு அணிகலனாகப் போற்றப்படுகிறது.

அணிப்பொருத்தம்

அறிமடமும் சான்றோர்க் கணி' என்னும் பொதுப்பொருளை பாரி முல்லைக்குத் தேர் தந்ததும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்ததுமான சிறப்புப் பொருளால் விளக்கியமையால் இது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று.

எடுத்துக்காட்டு-3

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்
–பழமொழி 216

பொருள்: ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே! மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!

(நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும். மற்றவர்களையும் நெருங்க விடாது. கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே)

அணிப்பொருத்தம்

நாய் பெற்ற தெங்கம் பழம் எவருக்கும் பயன் படாது என்ற சிறப்புப் பொருளால் லோபிகளிடம் உள்ள செல்வம் எவருக்கும் பயன்படாது என்ற பொதுப் பொருளை விளக்கியதால் இது வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.

வேற்றுப்பொருள் வைப்பணியின் வகைகள்

  • முழுவதும் சேறல்
  • ஒருவழிச் சேறல்
  • முரணித் தோன்றல்
  • சிலேடையின் முடித்தல்
  • கூடா இயற்கை
  • கூடும் இயற்கை
  • இருமை இயற்கை
  • விபரீதப்படுத்தல்

உசாத்துணை

தமிழ் இணையக் கல்விக் கழகம்


✅Finalised Page