வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை
- வேதாரண்யம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வேதாரண்யம் (பெயர் பட்டியல்)
- குப்புசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குப்புசாமி (பெயர் பட்டியல்)
வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை (1850-1901) ஒரு நாதஸ்வரக் கலைஞர். இலங்கையிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தி புகழ்பெற்றிருந்தார்.
இளமை, கல்வி
கோடிக்கரை குழகர் கோவிலில் இசை கைங்கர்யம் செய்து வந்த சின்னஸ்வாமி பிள்ளையின் மூத்த மகனாக குப்புஸ்வாமி பிள்ளை 1850-ம் ஆண்டு பிறந்தார்.வேளாங்கண்ணிக்கு அருகே திருப்பூண்டி என்னும் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர்களது குடும்பம் சின்னஸ்வாமி பிள்ளையின் காலத்தில் வேதாரண்யத்துக்குக் குடி பெயர்ந்தது. குப்புஸ்வாமி பிள்ளையின் தம்பி அருணாசலம் பிள்ளையும் நாதஸ்வரம் வாசிப்பதில் வல்லவர்.
தனிவாழ்க்கை
குப்புஸ்வாமி பிள்ளை ராஜாமடத்தை சேர்ந்த நாகம்மாள் என்பவரை மணந்தார். இவர்களது ஒரே மகன் கோடிக்கரை பழனிவேல் பிள்ளை, அவரும் நாதஸ்வர இசைக்கலைஞர். பழனிவேல் பிள்ளை சிறிய தந்தை அருணாசலத்திடம் நாதஸ்வரம் பயின்றார்.
இசைப்பணி
சௌக கால வர்ணங்கள், பதங்கள் வாசிப்பதில் வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை புகழ் பெற்றவர். இளையவர் அருணாசலம் பிள்ளை சிட்டைதானங்கள் சிறப்பாக வாசிப்பார்.
'எக்காலத்தில் காண்பேனோ’ என்ற ஹுஸேனி ராகப் பதம் குப்புஸ்வாமி பிள்ளையின் வாசிப்பில் மிகச் சிறப்பானது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் குப்புஸ்வாமி பிள்ளையின் நிகழ்ச்சி நடைபெறும். அதில் 'ஆனந்த நடனப்பிரகாசம்’ என்ற கேதார ராகக் கீர்த்தனையை தவறாமல் வாசித்துவந்தார். ஒருமுறை குப்புஸ்வாமி பிள்ளையின் இசையின் இனிமையில் அனைவரும் நேரம் அறியாது நின்று ஸ்வாமியின் ஆலயப்பிரவேசம் இரண்டு மணி நேரம் தாமதமாக ஆகியிருக்கிறது.
இலங்கை, யாழ்ப்பாணத்து நல்லூரில் குப்புஸ்வாமி பிள்ளையின் கச்சேரி அடிக்கடி நடைபெறும். இவருடைய ராக ஆலாபனை, பதங்களுக்கு அவ்வூரில் பெரும் ரசிகர்கள் இருந்தனர். அவ்வூர் மக்கள் தங்க நாதஸ்வரம் ஒன்றை குப்புஸ்வாமி பிள்ளைக்கு பரிசாக அளித்தனர்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளைக்குத் தவில் வாசித்த கலைஞர்களில் ஸ்ரீவாஞ்சியம் கோவிந்த பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.
மறைவு
வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை 1901-ம் ஆண்டு, தன் 51-ஆவது வயதில் மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Sep-2023, 10:19:05 IST