under review

வேடல் பெண் பள்ளி

From Tamil Wiki

வேடல் பெண் பள்ளி (பொ.யு. 781) (விடால்) தென்னாற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய சமண குகைப்பள்ளி. இது பெண்களுக்கான கல்விநிலையமாக இருந்துள்ளது. விளாப்பாக்கம் பெண் பள்ளி அருகே உள்ள இன்னொரு சமணப் பெண்பள்ளி

(பார்க்க பள்ளி)

வேடல்

இடம்

வந்தவாசியிலிருந்து ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தென்மேற்கில் தென்னார்க்காடு மாவட்டத்தின் வட எல்லையை ஒட்டியமைந்துள்ள சிற்றூர் வேடல் ஆகும். இவ்வூரை அடுத்துள்ள மலையில் இரண்டு குகைகள் உள்ளன, இவை பொ.யு. 8-ம் நூற்றாண்டில் சமணப் பள்ளியாய்த் திகழ்ந்திருக்கின்றன.

வேடல்

குகைகள்

இக்குகைகளுக்கு அருகில் பிற்காலத்தில் எழுப்பப்பட்ட இரண்டு மண்டபங்களும் காணப்படுகின்றன இவற்றை 'ஆண்டார் மடம்’ என அழைப்பது வழக்கமாகும். இங்குள்ள குகைகளில் கற்படுக்கைகளோ அல்லது சமண சமயச் சிற்பங்களோ உருவாக்கப்படவில்லை.

வேடல்

கல்வெட்டுக்கள்

குகைக்கு எதிர்புறத்திலுள்ள பாறையொன்றில் பல்லவ, சோழ மன்னர்களது சாசனங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். காலச்சுழலில் இவற்றின் பெரும்பகுதி அழிந்துள்ளமையால் இத்தலத்தின் முழுமையான வரலாற்றினை அறியமுடியாமற் போய்விடுகிறது. இரண்டாம் நந்திவர்ம பல்லவனது ஆட்சியின் போது (பொ.யு. 781) இங்குள்ள குகைப்பாழி விடால் பள்ளி என அழைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தின் அப்போதைய பெயராகிய விடால் என்பது தான் காலப்போக்கில் வேடல் என மாற்றம் பெற்றிருக்கிறது.

"ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரிபர்மர்க்கு யாண்டு பதினாலாவது சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆரந்திமங்கல முடைய குணகீர்த்தி படாரர் வழி மாணாக்கியார் கனகவீரக்குரத்தியாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபாஸிகள் நானூற்றுவர்க்கும் கொள்ளாதமையில் இக்கோயிற் பிள்ளைகள் ஐந்நூற்றுவர்க்கு வழிஇலாரும் காத்தூட்டு வோமானோம் எங்களுடைய ஸ்வரஷை. இது இரஷிப் பார் அடிநிலை, எங்கள் தலைமேலென மாதேவி ஆரந்தி மங்கலமுடைய கனகவீரக் குறத்தியார்த் தங்க..ர் மகளா தனமையில்... முக்கியருமிது காப்பார் அவர்கள் ஸ்வரஷை இதனை இரஷிப்பாரடி நிலை என் தலை மேலென...டறுங் காழாறும் முதலாகிய மாதேவி ஆராந்தி மங்கலமுடைய கனகவீரக் குரத்தியார் தங்கள் மகளாராதினமையில் இது வெல்லாந் தங்கள் காவில் இதனை தீங்கு நினைத்தாற் கங்கையிடைக் குமரியிடை எழுநூற்றுக் காதமும் செய்த பாவங் கொள்வார். காவலனுக்கு பிழைத்தாராவார்" என்பது இக்கல்வெட்டு

1908-ம் ஆண்டு இந்திய கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளது. "கனகவீரக் குறத்தி வழி வந்த ஐநூறு பேருக்கும், இப்பள்ளியுடன் தொடர்பு கொண்ட நானூறு பெண் துறவியருக்கும் இந்தப் பள்ளி போதிய இடவசதி உடையதாக இல்லாமலும், அவர்களுக்கு உணவளிக்கிற நிலையில் இல்லாமலும் இருந்ததால், விடால் ஊர்மக்கள் அவர்களுக்கு உணவளித்துக் காப்பதற்கு முன்வந்தனர் என்பது தெளிவாகிறது.

பெண்பள்ளி

இங்கு பெண் துறவியருக்கெனத் தனியாக பள்ளி இருந்திருக்கிறது. இதனைச் சோழ மன்னனாகிய முதலாவது ஆதித்தனது ஆட்சியின் போது (பொ.யு. 885) பொறிக்கப்பட்டுள்ள சாசனம் தெரிவிக்கிறது. இந்த பெண் பள்ளி இங்குள்ள குகைப்பாழிகளன்றித் தனியாகக் கட்டப்பட்ட பள்ளிகளல்ல. இந்த பள்ளியின் அமைப்பு, நிர்வாகம், செயல்பட்ட விதம் போன்றவை பற்றிய செய்திகள் எவையும் தெரியவில்லை. மாறாக பொ.யு. 885-ம் ஆண்டில் இங்கிருந்த கனக வீரகுரத்தியாரும், அவரைப் பின்பற்றியொழுகிய 500 மாணாக்கியருக்கும், மற்றொரு பிரிவினராகிய 400 பெண் துறவியருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் பிணக்கு ஏற்பட்டிருக்கிறது அச்சமயத்தில் மாதேவி ஆரந்தி மங்கலமாகிய விடாலைச் சார்ந்த மக்கள் கனக வீரகுரத்தியையும், அவரது மாணாக்கியரையும் பாதுகாத்து உணவளிக்க வழிவகை செய்திருக்கின்றனர். இந்த கனகவீரகுரத்தி குணகீர்த்தி பட்டாரர் என்னும் துறவியரின் மாணவி எனவும் அறிய வருகிறது.

வேடலிலுள்ள பெண் பள்ளியில் பெண் துறவியரிடையே என்ன காரணத்தினால் பிணக்கு ஏற்பட்டதென்றும், அது எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டதென்றும் அறிவதற்கில்லை. இங்கு பெண் துறவியருக்கென பொ.யு. 8-ம் நூற்றாண்டிலேயே பள்ளி இருந்தது உறுதியாகிறது. இப்பள்ளியின் நிர்வாகத்தினை மிக்கவாறும் கனகவீரகுரத்தியார் கண்காணித்து வந்திருக்க வேண்டும். இதனுடன் 400 பெண் துறவியரும், 500 மாணாக்கியரும் தொடர்புடையவராகத் திகழ்ந்திருப்பதை நோக்கும் போது, இது மிகப்பெரிய சமயக்கல்வி அமைப்பாகத் திகழ்ந்திருக்க வேண்டும் ஆனால் இந்த பெரும் பள்ளியின் முழுமையான வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை.

கனகவீரகுரத்தியாரின் குருவாகிய குணகீர்த்தி வேடல் ஊரைச் சார்ந்தவர் என்பதனைத் தவிர அவரைப் பற்றி செய்திகள் இல்லை. பண்டைக் காலத்தில் இத்தலத்திற்கு விடால் என்றும் மாதேவி ஆரந்தி மங்கலம் என்றும் இரு பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒரே சமயத்திலேயே இவ்விரு பெயர்களும் சற்று பிற்காலம் வரை இருந்தமையை இங்குள்ள வேறொரு சாசனமும் குறிப்பிடுகிறது.

தொண்டை மண்டலத்தில் வேடலிலும், விளாப்பாக்கத்திலும் பெண் பள்ளிகள் இருந்திருக்கின்றன. திருப்பான் மலையின் ஒரு பகுதியாகிய விளாப்பாக்கத்தில் அரிஷ்டநேமி பட்டாரரின் மாணாக்கியாகிய பட்டினிக்குரத்திகள் கிணறு ஒன்று வெட்ட ஏற்பாடு செய்து அதனையும், அதனுடன் கூடிய நிலத்தினையும் பெண் பள்ளிக்கு வழங்கியிருக்கிறார். இந்த பள்ளியைப் பற்றிய விரிவான செய்திகளும் நமக்குத் தெரியாமற் போய்விட்டது. இவ்விருபள்ளிகள் மட்டுமின்றி காமராஜர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளிமடம் என்னும் ஊரிலும் "கன்னிமாரின் காட்டாம் பள்ளி" ஒன்று இருந்ததாகத் தெரிய வருகிறது. இப்பள்ளியின் அமைப்பினையும், நிர்வாகத்தினையும் பற்றிய எந்த விதமான தகவல்களும் இல்லை. எவ்வாறாயினும் தமிழகத்தில் பெண் துறவியருக்கென வேடல், விளாப்பாக்கம், பள்ளி மடம் ஆகிய மூன்று இடங்களில் பள்ளிகள் இருந்தமை அறியற்பாலதாகும். ஆர்யாங்கனைகள் எனவும் குரத்தியர் எனவும் அழைக்கப்பட்டு வந்த பெண் துறவியரும் அருகன் அருள் நெறிபோற்றியும், சமயக் கருத்துகளைப் போதித்தும் பெருந்தொண்டாற்றியிருக்கின்றனர் என்பதனை இச் செய்திகள் காட்டுகின்றன (ஏ.ஏகாம்பரநாதன்)

உசாத்துணை


✅Finalised Page