under review

வி. செல்வநாயகம்

From Tamil Wiki
வி. செல்வநாயகம் (நன்றி: மெளனகுரு)

வி. செல்வநாயகம் (ஜனவரி 11, 1907 - ஜூன் 14, 1973) ஈழத்தமிழறிஞர், ஆசிரியர், திறனாய்வாளர், தமிழிலக்கிய வரலாற்றாசிரியர். ஈழத்திலிருந்து முதன் முதலில் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதியவர். ஈழத்தில் முக்கியமான இலக்கிய விமர்சகர்களை உருவாக்கியவர்.

பிறப்பு, கல்வி

வி. செல்வநாயகம் இலங்கை கொழும்புத்துறை வினாசித்தம்பி, அலங்காரம் இணையருக்கு ஜனவரி 11, 1907-ல் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணப் புனித ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். கொழும்பு பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று 'கலைமாணி' பட்டம் பெற்றார். சி. கணேசையரிடமும், வேதநாயகத்திடமும் மரபுவழிக் கல்வி கற்றார். 1932-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று மூன்று ஆண்டுகள் பி.ஏ. சிறப்புக் கற்கை நெறியைப் பயின்றார்.

வி. செல்வநாயகம்

ஆசிரியப்பணி

வி. செல்வநாயகம் 1935-ல் இடைக்காடு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1942-ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்தில் ஆறுமுக நாவலர் மரபு வழிவந்த கல்வி மரபு, இலங்கைப் பல்கலைக் கழகம் வழிவந்த கல்வி மரபென்ற இரு பிரிவுகளில் வி. செல்வநாயகம் இரு கல்வி மரபுகளையும் சார்ந்தவர். கந்தசாமிப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடமும் கல்வி பயின்றவர். தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு நச்சினார்க்கினியருடைய உரையினை நுண்ணாய்வு செய்து கற்பித்தார். இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகவும் பதவி வகித்தார்.

இலக்கிய வாழ்க்கை

வி. செல்வநாயகம் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலை எழுதினார். 'சிலப்பதிகாரம், மணிமேகலையின்'காலம் என்னும் ஆங்கிலக் கட்டுரையில் சிலப்பதிகாரம் மணிமேகலையிலும் பார்க்க காலத்தில் முற்பட்டது எனக் கூறினார். ’உரைநடை வரலாறு’ என்ற நூலில் தமிழில் உரை எவ்வாறு இலக்கிய வாகனமாக படிப்படியாக வளர்ச்சி பெற்றது என்பதைக் கூறினார்.

இலக்கியத் திறனாய்வு குறித்து பல கட்டுரைகள் எழுதினார். இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க மலரான 'இளங்கதிர்' இவரது பல கட்டுரைகளை வெளியிட்டது. ‘சொல்லும் பொருளும்’, ‘பாட்டும் ஓசையும்’, ‘வழக்குஞ் செய்யுளும்’ ‘கடலோசை’, ‘கடல்’, ‘ஞானப்பிரகாச சுவாமிகள்’ ‘கண்ணுற்றான் வாலி’, ‘தமிழிலக்கியமும் பக்திப் பாடல்களும்’, ‘கம்பனில் ஒரு பாட்டு’ ‘புறநானூற்றில் ஒரு பாட்டு’, ‘பழந்தமிழ் செய்யுள் மரபு’ ‘பாஞ்சாலி சபதத்தின் புதுமையும் பழமையும்’ ‘உவமையும் உருவகமும்’ முதலிய இலக்கிக் கட்டுரைகள் முக்கியமானவை. இவை ‘பேராசிரியர் வி. செல்வநாயகம் கட்டுரைகள்’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. சங்க இலக்கிய மரபினை ‘Tradition in Early Tamil Poetry’ (University of Cyclone Review) என்னும் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார்.

இலக்கிய இடம்

வி. செல்வநாயகம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூல் தமிழ்நாட்டில் பலரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு முன் மாதிரியாக அமைந்தது.

“தமிழ் இலக்கியப் பரப்பினை தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பாகுபாடு செய்து, அப்பாகுபாட்டுக்கான அடிப்படைகளுள் அரசியல் மாற்றங்களை முதன்மைப்படுத்தி, ஒவ்வொரு பகுதியினையும் சார்ந்த இலக்கியங்களின் பொருளமைதிக்கான காரணிகளைச் சுட்டி, அவ்விலக்கியங்களின் வடிவ அமைதி, மொழிப் பிரயோகம் ஆகியவற்றையும் விளக்கி எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு ஆசிரியராக அமைந்தவர் பேராசிரியர் வி. செல்வநாயகம் ” என அ. சண்முகதாஸ் வி.செல்வநாயகம் நினைவுப் பேருரையில் பதிவு செய்துள்ளார்.

விருதுகள்

  • இவர் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றமைக்காக சர். பொன். அருணாசலம் நினைவுப் பரிசைப் பெற்றார்.

மறைவு

வி. செல்வநாயகம் ஜூன் 14, 1973-ல் தன் 66-ஆவது வயதில் காலமானார்.

நூல்கள்

  • தமிழ் இலக்கிய வரலாறு
  • தமிழ் உரைநடை வரலாறு
  • Tradition in early Tamil Poetry

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page