under review

வி. சிவசாமி

From Tamil Wiki
வி. சிவசாமி

வி. சிவசாமி (செப்டம்பர் 16, 1933 - நவம்பர் 8, 2014) ஈழத்து தமிழ் எழுத்தாளர், பேராசிரியர். வரலாறு, தொல்லியல், இசை, கலை சார்ந்த நூல்களை எழுதினார்.

பிறப்பு, கல்வி

வி. சிவசாமி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரில் விநாயகமூர்த்திக்கு மகனாக செப்டம்பர் 16, 1933-ல் பிறந்தார். தந்தை நாட்டு வைத்தியத்திலும், ஜோதிடக் கலையிலும் ஈடுபட்டவர். தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை புங்குடுதீவில் அமெரிக்கமிஷன் பாடசாலை, ஸ்ரீ சுப்ரமண்ய வித்தியாசாலை ஆகியவற்றில் கற்றார். 1950-ல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் கற்றார். 1955-ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் நேரடிப் பிரவேசம் பெற்று, சமஸ்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு, தொல்லியல், நுண்கலைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார். 1961-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமஸ்கிருதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

வி. சிவசாமி

ஆசிரியப்பணி

வி. சிவசாமி 1958-ல் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். 1966-ல் மீண்டும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு திரும்பி வந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதம், வரலாறு கற்பித்தார். 1967-ல் இலங்கைப் பல்கலைக்கழகம் நடத்திய முதுகலைமாணித் தேர்வில் வெற்றி பெற்றார். பொ.யு 5-ம் நூற்றாண்டு வரையுள்ள சமஸ்கிருதப் பிரதிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். 1974-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது அங்கு விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார்.

தொல்லியல்

வி. சிவசாமி 1969-ல் கொழும்பில் நடைபெற்ற அனைத்து ஆசியத் தொல்பொருளியல் மாநாட்டில் கலந்து கொண்டார். 1971-ல் நிறுவப்பட்ட யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தை நிறுவினார். அதன் தலைவரும், செயலாளருமாக செயல்பட்டார். ஐந்து சாசனவியல் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தினார். 'பூர்வகலா' என்ற இதழையும் வெளியிடார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இது. ப. புஷ்பரத்தினம் இவரது மாணவர்.

வி. சிவசாமி

இலக்கிய வாழ்க்கை

வி. சிவசாமி யாழ்ப்பாண கல்லூரி மாணவர் சஞ்சிகையான இளஞாயிறில் கட்டுரைகள் எழுதினார். 'இளஞாயிறு' இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். நெப்போலியன் காலத் தொடக்கமுள்ள ஐரோப்பிய வரலாறு பற்றி டேவிட் தாம்சன் எழுதிய நூலின் ஒரு பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிலும் 1981-ல் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1973-ல் ’திராவிடர் ஆதி வரலாறும் பண்பாடும்’ நூலை எழுதினார். தனிநாயகம் அடிகள் இந்நூலுக்கு முன்னுரை எழுதினார். தொல்லியல், நாணயவியல் பற்றிய சிறு பிரசுரங்கள் செய்தார். 1976-ல் ’ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும்’ நூலை எழுதினார். சாசனவியல், வரலாறு, இந்து சமயம் பற்றிய கட்டுரைகள் எழுதினார்.

இசை, பரத நாட்டியம் தொடர்பான கட்டுரைகள் எழுதினார். இவை தொகுக்கப்பட்டு ‘கலாமஞ்சரி’ என்ற நூலாக வெளிவந்தது. 1987-ல் பரதக்கலை என்ற நூலை எழுதினார். 'தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (South Asian Classical Dances - A Historical Perspective) எனும் தலைப்பிலே நூலொன்றினை வெளியிட்டார். இந்நூலில் தென்னாசிய சாஸ்திரிய நடனங்களின் பொது அம்சங்கள், பரதம், கதகளி, மோகினி ஆட்டம், குச்சிப்புடி, பாகவதமேளா, யட்சகானம், ஒடிசி, சௌ, கதக், மணிப்புரி, கண்டிய நடனம் ஆகியன பற்றிய பன்னிரண்டு கட்டுரைகள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டன.

விருதுகள்

  • வி. சிவசாமியின் ’சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள்’ இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைப் பெற்றது.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1999-ல் நடைபெற்ற வெள்ளிவிழாப்பட்டமளிப்பு விழாவில் இவருக்குக் கௌரவ இலக்கியக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மறைவு

வி. சிவசாமி நவம்பர் 8, 2014-ல் காலமானார்.

இலக்கிய இடம்

வி.சிவசாமி சம்ஸ்கிருதம்- தமிழ் இலக்கியங்கள் மற்றும் மெய்யியல் சார்ந்த ஒப்பீட்டாய்வுக்காக புகழ்பெற்றவர். சம்ஸ்கிருத அறிஞர்கள் பலர் இருந்தாலும் இணையான தமிழறிவுடன் ஒப்பீட்டாய்வைச் செய்தவர்கள் அரிதானவர்கள். அவர்களில் ஒருவர் சிவசாமி. ஈழத்துத் தமிழ்க்கலைகளை ஆய்வுசெய்து முன்வைத்தவர் என்றும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973)
  • தென்னாசியக் கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு (1992)
  • தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (1998)
  • தமிழும் தமிழரும் (1998)
  • இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005)
  • தொல்பொருளியல்-ஓர் அறிமுகம் (1972)
  • ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும் (1974)
  • யாழ்ப்பாணக் காசுகள் (1974)
  • ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் (1976)
  • கலாமஞ்சரி [1983]
  • பரதக்கலை (1988)
  • சமஸ்கிருதம்- தமிழ் சிற்றகராதி (1987)
  • தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு (1990)
  • சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள்
  • காலத்தால் முந்திய நல்லூர்ச் சிலைகள்
ஆங்கிலம்
  • One Hundred years of Epigraphical Studies in Sri Lanka (1975, Revised 1988)
  • Some Aspects of South Asian Epigraphy (1985)
  • Some Facets of Hinduism (1988)
  • Tha Sanskrit Tradition of the Sri Lanka Tamils (1992)

உசாத்துணை


✅Finalised Page