under review

வி.ஆர்.எம். செட்டியார்

From Tamil Wiki

வி.ஆர்.எம். செட்டியார் (வீர.முத்துக்கருப்பன் செட்டியார்) (ஜூலை 5, 1900 - ஆகஸ்ட் 22, 1969) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், திறனாய்வாளர். திருச்சி, பாலக்கரையில் ‘ஸ்டார் பிரசுரம்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம், தாகூரின் ’கீதாஞ்சலி’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

வீர.முத்துக்கருப்பன் செட்டியார் என்னும் வி.ஆர்.எம். செட்டியார், ஜூலை 5, 1900 அன்று, காரைக்குடியில், வீரப்பச் செட்டியார் - லட்சுமி ஆச்சி தம்பதியருக்குப் பிறந்தார். காரைக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்தார். திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வி.ஆர்.எம். செட்டியார். மணமானவர். குடும்பத் தொழில் நிமித்தம் சில ஆண்டு காலம் செய்கோனில் வசித்தார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றிருந்த வி.ஆர்.எம். செட்டியார், சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். மொழிபெயர்ப்பாளராகவும், திறனாய்வாளராகவும் பணியாற்றினார்.

குடும்பத் தொழில் நிமித்தம் செய்கோனில் வசித்தபோது அங்கு நண்பர்களுடன் இணைந்து ‘முருகானந்த வாசக சாலை’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் இலக்கிய நிகழ்வுகள் பலவற்றை ஒருங்கிணைத்தார்.

திறனாய்வு

இலக்கியத் திறனாய்வின் மீது ஆர்வம் கொண்டிருந்த வி.ஆர்.எம். செட்டியார், திறனாய்வுக் கொள்கைகள் சிலவற்றைத் தமிழில் அறிமுகப்படுத்தினார். திறனாய்வு நூல்கள் சிலவற்றை எழுதினார்.

வி.ஆர். எம். செட்டியார் நூல்கள்

பதிப்பு

வி.ஆர்.எம். செட்டியார், தனது நூல்களைப் பதிப்பிப்பதற்காக ‘ஸ்டார் பிரசுரம்’ என்ற பிரசுர நிறுவனத்தைக் திருச்சி, பாலக்கரையில் தொடங்கினார். அதன் மூலம் ஷெல்லி, ஆஸ்கார் ஒயில்ட் போன்றோரின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அவர்களைப் பற்றிய திறனாய்வு நூல்களையும் எழுதினார்.

வி.ஆர்.எம். செட்டியார், 1929-ல், செய்கோனில் வசித்தபோது தாகூரின் அறிமுகம் ஏற்பட்டது. வி.ஆர்.எம். செட்டியார், தனது நண்பர்களுடன் இணைந்து நடத்திவந்த முருகானந்த வாசக சாலை அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவுக்குத் தாகூர் தலைமை வகித்தார். அப்போது தாகூர் ஆற்றிய சொற்பொழிவை, வி.ஆர்.எம். செட்டியார், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதுமுதல் வி.ஆர்.எம். செட்டியார் மீது அன்பும் மதிப்பும் கொண்ட தாகூர், தமது கீதாஞ்சலியைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் உரிமையை வி.ஆர்.எம். செட்டியாருக்கு வழங்கினார். அவ்வாறே வி.ஆர்.எம். செட்டியார் முதலில் கீதாஞ்சலியையும் அடுத்தடுத்துத் தாகூரின் பல்வேறு நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்

வி.ஆர்.எம். செட்டியார், தனது ஸ்டார் பிரசுரம் மூலம் இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்தார். டோரதி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலரை எழுத்தாளராக அறிமுகப்படுத்தினார். வி.ஆர்.எம். செட்டியார் எழுதிய ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு நூல் லண்டனில் வெளியிடப்பட்டது. அது பல பதிப்புக்கள் விற்பனையானது. வி.ஆர்.எம். செட்டியார், அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். நூற்றுக்கணக்கான நூல்களைப் பதிப்பித்தார்.

மறைவு

வி.ஆர்.எம். செட்டியார் ஆகஸ்ட் 22, 1969, அன்று தனது 69-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

தாகூரின் படைப்புகளைத் தமிழர்களுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் வி.ஆர்.எம். செட்டியார் தான். ஒரே சமயத்தில் எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பதிப்பாளராகவும் திறனாய்வாளராகவும் செயல்பட்ட முன்னோடி அறிஞராக வி.ஆர்.எம். செட்டியார் மதிப்பிடப்படுகிறார்.

வி.ஆர்.எம். செட்டியார் நூல்கள்

வி.ஆர்.எம். செட்டியார் எழுதிய / மொழிபெயர்த்த/பதிப்பித்த நூல்கள்

  • இலக்கிய விருந்து
  • நான்கு கவிமணிகள்
  • கட்டுரைக் கரும்பு
  • பேராசிரியர் சாரநாதன் வாழ்க்கை வரலாறு
  • ஞானி எமர்ஸன் சிந்தனைகள்
  • கவிஞன் குரல் - இலக்கியக் கட்டுரைகள்
  • இயற்கையும் காதலும் (மூலம்: எமர்ஸன்)
  • கவிதையின் லட்சணம் (மூலம்: ஷெல்லி)
  • சிந்தனைச் செல்வம் (மூலம்: தாகூர்)
  • தாகூரின் கீதாஞ்சலி
  • தாகூரின் கனி கொய்தல்
  • தாகூரின் வளர்மதி
  • தாகூரின் கவிதைகள்
  • தற்காலத் தமிழ்க் கவிதை
  • விதியும் தன்னம்பிக்கையும் (எமர்ஸன் கட்டுரைகள்)
  • Lyric Festoons (ஆங்கில நூல்)
  • Literary Speculations (ஆங்கில நூல்)
  • Laughter of Beau (ஆங்கில நூல் – பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) மற்றும் பல.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணை ஆசிரியர்கள், கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், விரிவாக்கப் பதிப்பு, மே, 2002.


✅Finalised Page