under review

விழுக்கம் ஆதிநாதர் கோயில்

From Tamil Wiki
விழுக்கம் ஆதிநாதர் கோயில் (நன்றி பத்மாராஜ்)

விழுக்கம் ஆதிநாதர் கோயில் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டம் விழுக்கம் எனும் ஊரில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திண்டிவனத்திலிருந்து செஞ்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள தீவனூருக்குச் சற்றுத் தொலைவில் வடக்கு நோக்கிப்பிரிந்து செல்லும் சிறிய சாலை வழியாக ஒரு கிலோமீட்டரில் விழுக்கம் ஆதிநாதர் கோயில் உள்ளது.

வரலாறு

விழுக்கம் ஆதிநாதர் கோயில் பொ.யு. 16-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

அமைப்பு

விழுக்கம் ஆதிநாதர்

விழுக்கம் ஆதிநாதர் கோயில் கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. இதனைச் சுற்றி பிரகாரச் சுவரும், அதன் முன்பகுதியில் நுழைவாயிலும் உள்ளன. கோயிலின் அடித்தளம் உபானம், ஜகதி, குமுதம் போன்ற பிரிவுகளாக இல்லாமல் ஒரே வரிசையான அதிஷ்டானமாக உள்ளது. இதற்கு மேலுள்ள சுவர்ப்பகுதியில், அரைத் தூண்களும், தேவகோட்டங்களும் உள்ளன. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் கூரைவிளிம்பாகிய கொடுங்கை அலங்கார வேலைப்பாடுடைய கூடு அமைப்புகளைக் கொண்டு, சற்றுப் பின்தங்கியதாக உள்ளது. இதற்கு மேற்பகுதியில் யாளிவரிசை சிறியதாகச் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிச்சுவர்களில் இடம் பெற்றிருக்கும் தேவகோட்டங்களின் இருமருங்கிலும் சிறிய அரைத்தூண்களும் அவற்றின் மேற்பகுதியில் சாலை எனப்படும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும் உள்ளன. இந்த தேவகோட்டங்களில் தற்போது தீர்த்தங்கரர் சிற்பங்கள் எவையும் இடம் பெறவில்லை. மேற்கூறப்பட்ட கட்டடக்கலை அனைத்தும் பொ.யு. 16-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

கருவறைக்கு மேலுள்ள விமானப்பகுதி இரண்டு தளங்களைக் கொண்டது. இந்தத் தளங்களில் கூடம், சாலை எனும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும், அவற்றிற்கிடையில் தீர்த்தங்கரர்கள், யக்ஷன், யக்ஷி முதலியோரது சுதை வடிவங்களும் உள்ளன. இரண்டாவது தளத்திற்குமேல் சிறிய கோட்டங்களையுடைய கிரீவமும், அதற்குமேல் உருண்டை வடிவ சிகரமும் உள்ளன. கிரீவப்பகுதியிலுள்ள சிறிய கோட்டங்களிலும் தீர்த்தங்கரர்களது சுதையுருவங்கள் காணப்படுகின்றன. கருவறையின் கூரைக்கு மேலாகவுள்ள விமானப்பகுதி செங்கல், சுதை ஆகியவற்றால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் அண்மைக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

விழுக்கம் கோயில் கருவறை

கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் கூரையைக் காட்டிலும் முகமண்டபத்தின் கூரை சற்று உயரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் வெளிப்புறச்சுவர்களிலும் அரைத்தூண்கள். தேவகோட்டங்கள் முதலியன காணப்படுகின்றன. இந்த மண்டபம் சற்று உயரமாக இருப்பதால் தனியாகக்கட்டப்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கலாம். ஆனால் இம்மண்டபத்தின் கலைப்பாணியும், தூண்களிலுள்ள கலையம்சங்களும் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றிலிருந்து மாறுபடாமலுள்ளது.

குணசாகரர் திருவடிகள்

ஆதிநாதர் கோயிலுக்குச் சற்று தொலைவில் குணசாகர முனிவரது திருவடிகள் பீடம் ஒன்றில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வூர் குளக்கரையில் இடம் பெற்றிருக்கும் இத்திருவுருவங்களை உள்ளடக்கியவாறு மண்டபம் ஒன்றும் உள்ளது. இப்பாதங்களை ஒட்டி குணசகாகரதேவர் எனக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சாசனம் பொ.யு. 17-18 -ம் நூற்றாண்டைய வரிவடிவம் பெற்றது. இவர் பதினேழாவது அல்லது பதினெட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலுக்கு உரையாசிரியர்.

விழுக்கம் கோயில் சிலைகள்

வழிபாடு

தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதியின் போது இவ்வூரிலும், அண்மையிலுள்ள ஜைனத் தலங்களிலும் வாழ்ந்து வரும் சமண மக்கள் குணசாகரரது திருவடிகளுக்கு வழிபாடு செய்கின்றனர். அப்போது விழுக்கம் கோயிலிலுள்ள தீர்த்ததங்கரர்களது உலோகத்திருமேனிகளை வைத்து சிறப்பு வழிபாடுகளை நிகழ்த்தியும், குணசாகரர் திருவடிகளுக்குப் பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தும் வழிபடுகின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page