வானம்பாடி நாவல்கள்
- வானம்பாடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வானம்பாடி (பெயர் பட்டியல்)
வானம்பாடி நாவல்கள் வானம்பாடி (மலேசியா) வார இதழைத் தொடங்கிய அதன் ஆசிரியர் ஆதி. குமணனால் தொடங்கப்பட்ட திட்டத்தின்படி வெளிவந்த தமிழ் நாவல்கள். மாதம் ஓர் எழுத்தாளரின் நாவலை வெளியிடுவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் பிப்ரவரி 1980-ல் தொடங்கி 1981-ல் நிறைவு கண்டது. இத்திட்டத்தின் வழி மாதம் ஒரு நாவலை வானம்பாடி நிறுவனம் வெளியிட்டது. அவ்வகையில் மொத்தம் பதினோரு நாவல்கள் வெளியீடு கண்டன.
வானம்பாடி
ஆதி. குமணன், அக்கினி சுகுமார், ஆதி. இராஜகுமாரன், பாலு ஆகியோர் இணைந்து 1977ல் உருவாக்கியது வானம்பாடி (மலேசியா) வார இதழ். தமிழகத்தில் அக்காலக்கட்டத்தில் எழுந்த வானம்பாடி கவிஞர்களின் முழக்கங்களில் இருந்து அக்கினி சுகுமார் இத்தலைப்பை அவ்வார இதழுக்கு வைத்தார்.
நோக்கம்
எண்பதுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியதை புத்தகமாக்க பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தமிழகத்தில் புத்தகத்தை அச்சடித்து, இங்கே கொண்டு வந்து வாசகர்களிடம் சேர்ப்பதில் பொருட்செலவை எதிர்க்கொண்டனர். உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புகளைப் புத்தகமாக்குவது குறித்து ஆதி. குமணன் வகுத்தத் திட்டமே மாதம் ஒரு எழுத்தாளரின் நாவல். வானம்பாடி வெளியிட்ட இந்நாவல்களை, வானம்பாடி நாவல்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
திட்ட நடைமுறை
வானம்பாடி நாவல் திட்டத்தின்படி மாதம் ஒரு எழுத்தாளரிடம் நாவல் பெற்றுக்கொள்ளப்பட்டது. இருதரப்பும் ஒப்புக்கொண்ட தொகை எழுத்தாளருக்கு வழங்கப்பட்டது. நாவலின் பதிப்புரிமை பெறப்பட்டு வானம்பாடி நிறுவனத்தின் செலவிலேயே அந்நாவல் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. வானம்பாடி வார இதழுடன் இணைந்து விநியோகிக்கப்பட்டதால் தோட்டப்புறங்களிலும் இந்த நாவல்கள் சென்று சேர்ந்தன. உள்நாட்டு எழுத்துகள் பரவலாக வாசகர்களை அடைய இத்திட்டம் உதவியது.
வெளிவந்த நாவல்கள்
- தூரத்து நிலவு - ஆதி. குமணன் (1980)
- நேரம் வந்துவிட்டது - எம். துரைராஜ் (1980)
- தெருக்கூத்து - துறவி (1980)
- மோகங்கள் - எம்.ஏ. இளஞ்செல்வன் (1980)
- புதிய வாரிசு - நா. மகேஸ்வரி (1980)
- விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை - சீ. முத்துசாமி (1980)
- வெளிச்சம் வெளிவருவதில்லை - எல். முத்து (1980)
- இதயங்கள் - எஸ். வேலுமதி (1980)
- பட்டுப்புழுக்கள் - அக்கினி சுகுமார் (1980)
- ராத்திரிப் பூக்கள் - இராஜகுமாரன் (1980)
- சங்கமம் - மெ. அறிவானந்தன் (1981)
பலன்கள்
வானம்பாடி நாவல் திட்டத்தினால் அன்றைய இளம் எழுத்தாளர்களின் முதல் நாவல்கள் பல வெளிவந்தன. இதனால் எழுத்தாளர்கள் மத்தியில் நாவல் எழுதும் ஆர்வம் அதிகரித்தது. மேலும் உள்ளூர் படைப்புகள் பரவலாக வாசகர்களிடம் சென்று சேர்ந்தன என அக்கினி சுகுமார் தன் நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
நிறுத்தம்
வானம்பாடி குழுவினர் 1981-ல் வானம்பாடியில் இருந்து வெளியேறி 'தமிழ் ஓசை' எனும் தினசரியை நடத்தத் தொடங்கியபோது இத்திட்டம் நிறுத்தப்பட்டது.
உசாத்துணை
- மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் - மா. இராமையா
- நேர்காணல் - நான் ஒரு திரிபுவாதி - அக்கினி சுகுமார்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Sep-2023, 13:06:43 IST