under review

வசந்தா சியாமளம்

From Tamil Wiki
வசந்தா சியாமளம் (இளம் வயதுப் படம்)
கணவர் காசியபனுடன்
Muthu meenatchi

வசந்தா சியாமளம் (முத்துமீனாட்சி, வசந்தா, வசந்தா ஷ்யாமளம்) (பிறப்பு: 1942) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

வசந்தா என்னும் இயற்பெயரை உடைய முத்துமீனாட்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடியில் 1942-ம் ஆண்டு பிறந்தார். தந்தையின் பணி நிமித்தம் நாக்பூருக்குச் சென்று வசித்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை நாக்பூரில் பயின்றார். தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றார். ஹிந்தியில் எம்.ஏ., பி.எட் பட்டம் பெற்றார். 60 வயதுக்குப் பிறகு, நாக்பூரில் உள்ள கவிகுரு காளிதாஸ் பல்கலைக்கழகத்தில் முழுநேர மாணவியாகச் சேர்ந்து சம்ஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

முத்துமீனாட்சி நாக்பூரில் உள்ள அரசு நிறுவனத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றினார். 19 வயதில் ‘ஷ்யாமளம்’ என்னும் ’காசியபனு’டன் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் மதுரைக்கு வந்து வசித்தார். மதுரை மகாத்மா காந்தி பள்ளியில் ஹிந்தி ஆசிரியை ஆகப் பணியாற்றினார். மகன் சத்தியமூர்த்தி (அமரர்); மகள் ஹன்ஸா, வழக்குரைஞர். (கணவர் காசியபன் 2018-ல் காலமானார்)

இலக்கிய வாழ்க்கை

முத்துமீனாட்சியின் கணவர் காசியபன் ஓர் எழுத்தாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடக்கிய முன்னோடிகளுள் ஒருவர். அவரது ஊக்குவிப்பால் முத்துமீனாட்சி எழுதத் தொடங்கினார். கணவரது இயற்பெயரைத் தன் பெயருடன் இணைத்து ‘வசந்தா ஷ்யாமளம்’ என்ற பெயரில் எழுதினார். பின் தனது பாட்டியின் பெயரான ‘முத்துமீனாட்சி’ என்ற பெயரில் எழுதினார். இவரது முதல் சிறுகதை ‘அடி’, ‘வஸந்தஸ்யாம்’ என்ற பெயரில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து தாமரை, செம்மலர், தின பூமி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின.

முத்து மீனாட்சி நூல்கள் ஹிந்தி மொழிபெயர்ப்பு
முத்துமீனாட்சி தமிழ் மொழிபெயர்ப்புகள்

மொழிபெயர்ப்பு

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த முத்துமீனாட்சி, மொழிபெயர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சுதந்திரப் போராட்ட வீரரும், முற்போக்கு இயக்கம் சார்ந்த எழுத்தாளருமான கோதாவரி பருலேகரின் (godavari parulekar) கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதுதான் தமிழுக்கு இவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சி. முத்துமீனாட்சியின் முதல் ஹிந்தி-தமிழ் மொழிபெயர்ப்பாக ‘அஜிமுல்லாகான்’ நூல் வெளிவந்தது. முதல் சுதந்திரப் போராட்டம் எப்படி, யாரால் நிகழ்ந்தது என்பதை மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஆர்.ஆர்.யாதவ் ஆய்வு செய்து ஒரு நூலாக வெளியிட்டார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பே ‘அஜிமுல்லாகான்.’

முத்துமீனாட்சி தொடர்ந்து பல படைப்புகளை ஹிந்தியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தார். ஸரிதா, காதம்பரி (ஹிந்துஸ்தான் டைம்ஸ் துணை இதழ்) போன்ற ஹிந்தி இதழ்களில் இவரது சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின. பிரேம்சந்த், யஷ்பால், வியோகிஹரி, இஸ்ராயில், ராம்தரஸ் மிஸ்ரா, கேசவ தேவ் ஆகியோரின் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

ஹிந்தியைத் தொடர்ந்து முத்துமீனாட்சி சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்திற்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். காசியபனின் சிறுகதைகளையும், செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் வெளியான சிறுகதைகளையும், கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘போன்ஸாயின் நிழல்கள்’ என்ற கதையையும் ஹிந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்தார். இவர் எழுதிய மற்றும் மொழிபெயர்த்த சம்ஸ்கிருதச் சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம், ரசனா, ஸம்ஸ்க்ருத பவிதவ்யம், சம்பாஷண சந்தேஷா போன்ற இதழ்களில் வெளியாகின. முத்துமீனாட்சி ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய ‘BEAT’ என்ற சிறுகதை ‘Transfire’ இதழில் வெளியானது.

விருதுகள்

  • சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான ‘நல்லி திசை எட்டும் விருது’
  • ஷப்னா ஆஸ்மி ஃபவுண்டேஷன் வழங்கிய ‘சிறந்த பெண்மணி’ விருது
  • சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசின் விருது
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது

இலக்கிய இடம்

முத்துமீனாட்சி, கணவருடன் இணைந்து முற்போக்கு இயக்கம் சார்ந்து இயங்கினார். இவரது படைப்புகள், மத்தியதர மக்களின் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகின்றன. மிகுந்த கவனத்துடன் நூல்களை மொழியாக்கம் செய்தார். நேரடியாகத் தமிழிலேயே வாசிக்கும் உணர்வை இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் அளித்தன. சரஸ்வதி ராம்நாத், சிவசங்கரி போன்றோர் வரிசையில் முத்துமீனாட்சி இடம் பெறுகிறார்

நூல்கள்

மொழிபெயர்ப்புகள்

(ஹிந்தியிலிருந்து தமிழுக்கு)

  • அஜிமுல்லா கான்
  • நரபட்சணி (மூலம்: நானக்சிங்கின் ஆதம்கோர்)
  • வால்கா முதல் கங்கை வரை (மூலம்: ராகுல சாங்கிருத்தியாயன்)
  • புதிய உலகம் (பன்மொழிச் சிறுகதைகளின் தொகுப்பு)

(தமிழிலிருந்து ஹிந்திக்கு)

  • ஜகதா (காச்யபன் மற்றும் சில எழுத்தாளர்களது சிறுகதைகள்)

(ஹிந்தியிலிருந்து சம்ஸ்கிருதத்திற்கு)

  • ஜகதா (காச்யபன் மற்றும் சில எழுத்தாளர்களது சிறுகதைகள்)

உசாத்துணை


✅Finalised Page