ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி
- ராஜா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜா (பெயர் பட்டியல்)
தேசிய வகை ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி.
வரலாறு
1912-ம் ஆண்டு ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. இப்பள்ளி ஆரம்பக்காலக்கட்டத்தில் கோல சிலாங்கூர் பட்டணத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ராஜா மூசா தோட்டத்தில் இயங்கியது. ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் ம. வள்ளியப்பன்.
கட்டிடம்
1912-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி மரப்பலகைகளாலும் தகரக் கூரையினாலும் கட்டப்பட்ட கட்டிடத்தில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டது. 1928-ம் ஆண்டு ஆறு வகுப்பறைகள் நடத்துவதற்கான போதிய இட வசதியில்லாமையால் 1946-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை இப்பள்ளி காலை, மாலை என இருவேளைப் பள்ளியாக இயங்கியது.1970-ம் ஆண்டில் இடப்பற்றாக்குறையினால் நான்காம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் ராஜா மூசா தோட்டதிற்கு அருகில் உள்ள, ரிவர் சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றனர்.
1988-ம் ஆண்டில் மீண்டும் இப்பள்ளியில் நான்காம் வகுப்பு தொடங்கப்பட்டது. 1989-ல் நாடாளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகார அமைச்சருமான அபு ஹாசான் ஹாஜி ஒமாரிடம் 3000 ரிங்கிட் மலேசியா மானியமாகப் பெறப்பட்டது, மரப்பலகையினால் ஒரு வகுப்பறையைக் கொண்ட இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. 1990-ல் ஐந்தாம் ஆண்டு வகுப்பும், 1991-ல் ஆறாம் ஆண்டு வகுப்பும் பள்ளியில் செயல்படத் தொடங்கின.
1990-ம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர், பொதுப்பணித் துறை அமைச்சர் ச.சாமிவேலு ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டிடத்தைச் சீர் செய்ய 30,000 ரிங்கிட்டை மானியமாகக் கொடுக்க ஏற்பாடு செய்தார். ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டுவதற்குத் தோட்ட நிர்வாகத்திடம் நிலம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் சாமிவேலுவால் செய்யப்பட்டன. இதன் வழி, தோட்ட நிர்வாகமும் பள்ளிக்கென 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டது.
தோட்ட நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட 1.5 ஏக்கர் நிலத்தில் ச.சாமிவேலுவிடமிருந்து கிடைக்கப்பெற்ற மானியத் தொகையான 30,000 ரிங்கிட்டின் துணையோடும் லிம் ஆ லெக் வழங்கிய மானியத் தொகையான 10,000 ரிங்கிட் துணையோடும் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. கல்வி அமைச்சிடமிருந்து பெறப்பட்ட 5,000 ரிங்கிட்டும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியில் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 5000 ரிங்கிட்டும் இக்கட்டிடம் கட்டுவதற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. வகுப்பறைகளோடு அலுவலகம், ஆசிரியர் அறை, தலைமையாசிரியர் அறை, கிடங்கு போன்ற போதிய அடிப்படை வசதிகளுடன் இக்கட்டிடம் கட்டப்பட்டது. டிசம்பர், 1990-ம் ஆண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் புதிய கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
தொடர்ந்து, பள்ளியில் மேலும் பல சீரமைப்புகள் கொண்டு வரப்பட்டன. தஞ்சோங் காராங் தொகுதி காங்கிரஸின் வழி கிடைக்கப் பெற்ற மானியத் தொகையோடு, சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய மானியத் தொகையையும் கொண்டு பள்ளி வளாகமும் கட்டிடமும் மேலும் தரப்படுத்தப்பட்டன.
ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை
1928-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு காலக்கட்டம் வரை ஜே.சி.ஞானபிரகாசம் தலைமையில் இயங்கிய ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 60 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் இருந்தனர். 1946-ல் 105 மாணவர்களைக் கொண்டு இயங்கிய இப்பள்ளியில், 1968-ம் ஆண்டில் சுமார் 210 மாணவர்கள் பயின்றனர். பின்னர் ஆண்டுதோறும், பட்டணத்தை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததால், ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு கண்டது.
பள்ளியில் படித்த முக்கிய பிரமுகர்
மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் வெ. மாணிக்கவாசகம்.
இன்றைய நிலை
இன்றளவும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்டுள்ள பள்ளி எனும் பிரிவில் ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி இயங்குகின்றது.
உசாத்துணை
- க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
- மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Jun-2024, 09:53:27 IST
