யாழ்ப்பாணன்
யாழ்ப்பாணன் (நவம்பர் 2,1908 - மே 10, 1968 ) (வே. சிவக்கொழுந்து). ஈழத்து மரபிலக்கியக் கவிஞர், இலக்கியவாதி.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணன் என்னும் புனைபெயரில் எழுதிய வே.சிவக்கொழுந்து நவம்பர் 2, 1908-ல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வியாபாரிமூலை என்னும் ஊரில் பிறந்தவர். ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கியவாழ்க்கை
யாழ்ப்பாணனின் முதல் கவிதைத் தொகுதி க. கணபதிப்பிள்ளை முன்னுரையுடன் 1948-ல் வெளிவந்தது. இதில் நாமக்கல் கவிஞர் மரபு வகையிலான மரபுக்கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
யாழ்ப்பாணன் பள்ளிப்பிள்ளைகளுக்கான பாடநூல்களையும் எழுதியிருக்கிறார்.
இலக்கிய இடம்
பாரதி ,நாமக்கல் கவிஞர் மரபிலான நவீன மரபுவழிச் செய்யுள்களை எழுதியவர். நினைவேக்கம், சமூகப்பிரச்சினைகளை கவிதைகளாக எழுதினார். யாழ்ப்பாணன் அவர்களின் கவிதைகள் எளிய நடையில் உயர்ந்த கருத்துக்கள் அழகுறப் பொதிந்தவையாக உள்ளன என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பாராட்டியிருக்கிறார். யாழ்ப்பாணர் கவிதையில் அழகும் ஆர்வமும் உள்ளன என்று சுத்தானந்த பாரதியார் பாராட்டினார்.
மறைவு
யாழ்ப்பாணன் மே 10, 1968-ல் மறைந்தார்.
பாடல் நடை
பெண்ணுயர் வதனம் தன்னில்
பிரமனின் நாவுதன்னில்
எண்ணிலடங்கா இன்பம்
ஏந்திய மழலை தன்னில்
கண்ணிய மக்கள் காட்டும்
கருணைசேர் இதயந்தன்னில்
பண்ணிறை பாடலோதும்
பக்தர்கள் குழாம்தன்னில்
அழகினைச் சொட்டும் பூக்கள்
ஆடியே திரியும் மஞ்ஞை
எழிலுறு திங்கள் வானம்
எழுந்திடும் பரிதிச் சோதி
மழைமுகிற் படியும் குன்றம்
மாநில நதிகளெங்கும்
விழைவுறு சக்தி அன்னை
வீற்றிருந்து அரசு செய்வாள்
(சக்தியின் இருப்பிடம். மாலைக்கு மாலை தொகுப்பு)
நூல்கள்
- மாலைக்கு மாலை
- தேசபக்தன் சபதம்
உசாத்துணை
- மாலைக்கு மாலை- யாழ்ப்பாணன். இணையநூலகம்
- தமிழ் ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம் : இணையநூலகம்
- கேத்திர கணிதம் இணையநூலகம்
- தோத்திரப் பாடல்களும் அமரர் திரு.வே.சிவக்கொழுந்து அவர்கள் மீது பிரிவுப் பாக்களும்
- யாழ்ப்பாணச் செய்திகள் இணையப்பக்கம்
- யாழ்ப்பாணன் (திரு.வே.சிவக்கொழுந்து) கவிதை அவரது கையெழுத்தில்
- கவிஞர் யாழ்ப்பாணன் திரு.வே.சிவக்கொழுந்து
- ஜீவ இரக்கம் யாழ்ப்பாணன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-May-2025, 03:31:27 IST

