under review

மு. செல்லையா

From Tamil Wiki
மு. செல்லையா

மு. செல்லையா (அக்டோபர் 7, 1906 - டிசம்பர் 9, 1966) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர், ஜோதிடர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு அருகிலுள்ள அல்வாயூரில் அக்டோபர் 7, 1906-ல் வ. முருகர்-குஞ்சரம் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். க. மயில்வாகண பண்டிதரிடம் நன்னூல் முதலிய இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருவாதவூர் அடிகள் புராணம் ஆகியவற்றை பயின்றார். 1925-ல் கோப்பாய் ஆசிரியகாலாசாலை பிரவேசப் பரிச்சையில் தேறி ஆசிரியப்பயிற்சி பெற்றார். யாழ்ப்பாணம் ஆரிய-திராவிட பாஷா விருத்திச்சங்க பிரவேச பரிட்சையில் தேறினார். ஜோதிடத்தில் தன் ஒன்றுவிட்ட பாட்டனார் க. வேலுச்சாமி ஜோதிடர் போல புகழ்பெற்றார். நாடி பார்ப்பதில் திறனுடையவர். சுகாதார சாஸ்திரங்களைக் கற்றார். சங்கீத ஞானம் கொண்டவர்.

ஆசிரியப்பணி

மு. செல்லையா 1927-ல் தான் கல்வி கற்ற வதிரி தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அல்வாயூர் வித்தியாசாலையை நிறுவினார்.

ஆன்மிக வாழ்க்கை

'ஆலயப் பிரவேசம்' இயக்கத்தை எதிர்த்து ”சைவ சமய சமரச சங்கம்” ஆரம்பித்தார். அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். டிசம்பர் 11, 1966-ல் வத்தீஸ்வரர் கல்லூரியில் கூட்டம் ஏற்பாடு செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

மரபுக் கவிதைகள் எழுதினார். 1933-ல் குடல் நோய் வருத்திய காலத்தில் படுக்கையில் இருந்தவாறு கந்தவன முருகனை வேண்டி பாடல்கள் பாடினார். கட்டளைக் கலித்துறையில் அமைந்த அப்பாடல்கள் ’கந்தவனநாதர் காரிகை' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. கல்கியைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் வார இதழ்களில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த காலத்தில் மு. செல்லையா ஈழ கேசரி வாரஇதழில் 'அநுசுயா' என்ற புனைப்பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதினார். இலங்கை வானொலித் துறையினரால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில், இவர் இயற்றிய 'புதிய வண்டுவிடு தூது’ கவிதை முதல் பரிசைப் பெற்றது. 'வளர்பிறை', 'குமாரவேள் பதிகம்' ஆகிய நூல்களை வெளியிட்டார்.

மறைவு

மு.செல்லையா டிசம்பர் 9, 1966 அன்று காலமானார்

நூல் பட்டியல்

கவிதை
  • புதிய வண்டுவிடு தூது
பிற
  • வளர்பிறை
  • குமாரவேள் பதிகம்
  • கந்தவனநாதர் காரிகை

உசாத்துணை


✅Finalised Page