under review

முருகடியான்

From Tamil Wiki
பாத்தென்றல் முருகடியான்
பாத்தென்றல் முருகடியான்

முருகடியான்(வே. பழநி, முருகதாசன்) (பிறப்பு- ஜூலை 15, 1944 - இறப்பு அக்டோபர் 11, 2023) சிங்கப்பூரின் விருதுபெற்ற மூத்த கவிஞர்களில் ஒருவர். மரபுக் கவிஞர். சிந்து பாடுவதில் புகழ்பெற்ற அவரது 'சீர்மேவும் எட்டுக்குடி வாழும் - வேல் வேல்' திருமுருகன் காவடிச் சிந்து' பாடல்கள் இன்றும் தைப்பூசத் திருநாளின்போது பாடப்படுகிறது.

பிறப்பு, கல்வி

முருகடியானின் இயற்பெயர் வே. பழனி. ஜூலை 15, 1944 அன்று தஞ்சை மாவட்டம் பூம்புகாருக்கு அருகிலுள்ள வாணகரியில் வேல்முருகன்- அமுதச்செல்வம் இணையருக்குப் பிறந்தார். கீழக்கரையில் வளர்ந்தார். அங்கு மேல்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார்.

தனி வாழ்க்கை

முருகடியான் 1957-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கத்தில் சிங்கப்பூர் படகுத்துறையில் படகு கட்டுமானம், பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் மின்னியல் துறைப் படிப்பில் தேர்ச்சி பெற்று ஓய்வுபெறும் வரையில் மின்னாளுநராகப் பணியாற்றினார்.

முருகடியான் மணமானவர். மனைவி: சரோஜா. மகன்: நிலவழகன். மகள்கள்: அமுதா, புனிதா, குமுதா. பேரப்பிள்ளைகள் இருவர்.

நீரும் நெருப்பும் - கவிதை நூல்

இலக்கிய வாழ்க்கை

இளம் வயது முதலே கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த முருகடியான், தனது பதின்மூன்றாம் வயதில் இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கினார். கதை, கட்டுரை, கவிதை எனப் பல பங்களிப்புகளைத் தந்தார். பாடல், நடிப்பு, சொற்பொழிவு போன்ற துறைகளிலும் பங்களித்தார். பல மேடைகள், வானொலி, தொலைக்காட்சிகளில் இவருடைய படைப்புகள் இடம்பெற்றன. புராணம், இதிகாசம், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு பொருள்களில் 25 வில்லுப்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றினார். பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார்.

சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தில் மாதந்தோறும் மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்புகளை நடத்தினார். கவிச்சோலை நிகழ்ச்சிகளில் மாதந்தோறும் இலக்கண வகுப்புகளை நடத்தினார். இதுவரை 15-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிஞர் முருகடியானுக்கு (வலமிருந்து நான்காவது) 2019-ம் ஆண்டின் கணையாழி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான அப்போதைய நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இர்ஷாத் விருதை வழங்கினார். அருகில் முருகடியானின் துணைவியார் திருவாட்டி தாமரை. படத்தில் இடமிருந்து: வளர்தமிழ் இயக்க முன்னாள் தலைவர் ஆர்.ராஜாராம், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரன், திரைப்படப் பாடலாசிரியர் சிநேகன். (வலக்கோடியில்) கவிமாலை அமைப்பின் முன்னாள் தலைவர் இறைமதியழகன்.

கவிதைக் காப்பியங்கள்

அழகோவியமும் சங்கமமும் இவரது முக்கிய கவிதைக் காப்பியங்கள்.

அன்றைய மலாயாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே ஏற்பட்ட போரைக் களமாகக்கொண்டு எழுதப்பட்ட குறுங்காவியம் 'அழகோவியம்'. 1963-ல் எழுதப்பட்ட இந்நூல் கோலாலம்பூர் தமிழ் இளையர் மணி மன்றத்தின் குறுங்காவியப் போட்டியில் முதற் பரிசாக தங்கப் பதக்கம் வென்றது. 2008-ல் வெளிவந்த சங்கமம் (கூடுகை) சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் இலக்கியப் பரிசை வென்றது.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் காவியம் 'சங்கமம்'. இந்நூலில், சிங்கப்பூரின் வரலாறு, நகரச் சித்தரிப்பு, பல இன மக்களின் வாழ்க்கை முறை, தமிழர் திருநாள், விழாக்கள், சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு, சிங்கப்பூரில் தமிழ் வளர்த்த பெரியார்களின் பணிகள் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மிகம்

முருகடியான், இளம் வயதிலிருந்தே நாத்திகச் சிந்தனை கொண்டவராக இருந்தார், வே.பழநி என்ற பெயரிலேயே எழுதி வந்தார். பின்பு முருகன்பால் பக்தி கொண்டு முருகதாசன் என்ற புனைபெயரில் எழுதினார். பின்னர் அதைத் தனித்தமிழில் முருகடியான் என மாற்றிக்கொண்டார்.

தமிழவேள் விருது

பொறுப்புகள்

  • சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றச் செயலாளர்.
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் துணைச் செயலாளர்.
  • சிங்கப்பூர் தமிழர் இயக்கத் துணைத் தலைவர்.
கரிகாலன் விருது

விருதுகள்/ பட்டங்கள்

  • சிங்கப்பூர் தமிழர் இயக்கம் 1976-ல் இவருக்கு 'பாத்தென்றல்' பட்டம் வழங்கியது. சுத்தானந்த பாரதியார் இவ்விருதை வழங்கினார்.
  • சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றம் 1993ல் 'வில்லிசை வேந்தர்' எனும் பட்டத்தை வழங்கியது.
  • கோலாலம்பூர் தமிழ் இளையர் மணிமன்றம் வழங்கிய குறுங்காவியத்திற்கான முதல் பரிசு..
  • 1998- மோண்ட் பிளாங்க் இலக்கிய விருது.
  • 2003 - சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது.
  • 2004- தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருக்குறள் விழா விருது.
  • 2008 - முஸ்தபா அறக்கட்டளை - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கிய கரிகாலன் விருது.
  • 2010 - தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (சங்கமம் நூலுக்காக)
  • 2019 -சிங்கப்பூர் கவிமாலை வழங்கிய கணையாழி விருது

இலக்கிய இடம்

மரபுக் கவிதைகளை எழுதும் முருகடியானின் பாடல்கள் சந்த நயம் மிக்கவை.

முருகடியான் ஒரு தலைசிறந்த மரபுக்கவிஞர். அவருடைய காவடிச் சிந்து தொகுப்பை சிங்கப்பூரின் தைப்பூசத் திருவிழாவின்போது பயன்படுத்துகிறார்கள்.. தீமிதித் திருவிழாவில் அவருடைய வில்லுப்பாட்டு நிகழ்வுகள் இன்றளவும் நினைவிலுள்ளது- அவருடைய பல்வேறு நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சுப. திண்ணப்பன்.

தேம்பாவை

நூல்கள்

  • திருமுருகன் காவடிச் சிந்து
  • தேன்மலர்கள்
  • முருகதாசன் கவிதைகள்
  • அழகோவியம் (குறுங்காவியம்)
  • மழலை மருந்து (சிறார் பாடல்கள்)
  • வாழ்வருள்வாள் வடகாளி (பக்திப் பாடல்கள்)
  • சூரியதாகம் (கவிதைத் தொகுப்பு)
  • நெற்றிக்கண் (கவிதைத் தொகுப்பு)
  • வானவில் (கவிதைத் தொகுப்பு)
  • தேம்பாவை
  • நீரும் நெருப்பும்
  • வாடா மலர்கள்
  • பாத்தென்றல் முருகடியானின் சங்கமம் : கூடுகை (காப்பியம்)
  • பேராசிரியர் முனைவர் திண்ணப்பர் பிள்ளைத் தமிழ்
  • விழி! எழு! விரைந்து வா!

இறப்பு

முருகடியான் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி 79வது வயதில் காலமானார். நினைவாற்றல் இழப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஒரு மாத காலம் சிங்கப்பூர் செங்காங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்ற அவர் வீட்டிலேயே தூக்கத்தில் உயிரிழந்தார்.

உசாத்துணை


✅Finalised Page