முன்னிலா (சிறுகதைத் தொகுப்பு)
அ.மாதவையாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு முன்னிலா. தினமணி காரியாலயம் இந்த நூலை 1944-ல் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர் பி.ஸ்ரீ.
பதிப்பு விவரம்
அ.மாதவையாவிற்கு மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், முத்துலக்ஷ்மி அம்மாள், சரஸ்வதி அம்மாள் என ஐந்து மகள்களும் மா.அனந்தநாராயணன், மா. யக்ஞ நாராயணன், மா. கிருஷ்ணன் என மூன்று மகன்களும் உண்டு. இவர்களில் மா.அனந்தநாராயணன், மா. கிருஷ்ணன், மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், சரஸ்வதி அம்மாள் ஆகியோர் சிறுகதை ஆசிரியர்கள். மா.கிருஷ்ணன் தவிர்த்துப் பிறர் அனைவருமே மாதவையா நடத்திய 'பஞ்சாமிர்தம்’ இதழுக்குப் பங்களிப்புச் செய்தவர்கள். இவர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை தினமணி காரியாலயம் 1944-ல் பிரசுரம் செய்தது. தினமணி காரியாலயம் வெளியிட்ட ஒன்பதாவது நூல் இது. இதன் விலை அணா 12. பக்கங்கள் 112.
புத்தக விளம்பரம்
’முன்னிலா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த விளம்பரத்தில்,
" தமிழ் வாசகர்களுக்குப் புது விருந்தான சிறு கதைகள்.
படித்துப் படித்து, ரஸித்து ரஸித்து அனுபவிக்க வேண்டிய நூல்.
தமிழ்க் கதை - உலகில் புது வழிகாட்டும் ஆறு ஆசிரியர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதி இது.
ஸ்ரீ எம். அனந்த நாராயணன், ஐ.ஸி.எஸ்.,
ஸ்ரீ எம்.கிருஷ்ணன், எம்.ஏ.
ஸ்ரீமதி லக்ஷ்மி அம்மாள், எம்.ஏ., ஃரொஃபெஸர், குவின்மேரிஸ் காலேஜ்,
ஸ்ரீமதி மீனாம்பாள்,
ஸ்ரீமதி விசாலாக்ஷி அம்மாள் (காசினி)
ஸ்ரீமதி டாக்டர் ஸரஸ்வதி அம்மாள்
-ஆகிய இந்த ஆசிரியர்கள் அறுவரும் பிரசித்தி பெற்ற 'பத்மாவதி’ என்ற தமிழ் நாவலை எழுதிய ஸ்ரீ. அ.மாதவையாவின் புதல்வரும், புதல்வியரும் ஆவர். எத்தனையோ புதுமை புதுமையான வழிகளில் சிறு கதைகளை எழுதித் தமிழுக்கு வளமும் தமிழர்களுக்கு நல்லின்பமும் அளிக்கலாம் என்பதற்கு பிரசித்தி பெற்ற இந்த ஆசிரியர்களின் கதைத் தொகுதி ஓர் அருமையான சாட்சி
.- என்று குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளடக்கம்
இந்நூலில் மொத்தம் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
எண் | சிறுகதை | ஆசிரியர் |
---|---|---|
1 | முன்னிலா | மா.அனந்தநாராயணன் |
2 | மாசி பிறந்த நாள் | மா.கிருஷ்ணன் |
3 | தூரத்துப் பச்சை | வி.விசாலாக்ஷி அம்மாள் |
4 | கிராமவாசம் | எம்.லக்ஷ்மி அம்மாள் |
5 | கெரஸொப்பா நீர்வீழ்ச்சி | எம்.சரஸ்வதி அம்மாள் |
6 | மயிலாப்பூர் வக்கீல் | மா.அனந்தநாராயணன் |
7 | மகாராசாவின் வெள்ளநாக்குட்டி | மா.கிருஷ்ணன் |
8 | அபஸ்வரம் | எம்.சரஸ்வதி அம்மாள் |
9 | இராவணனின் தினசரிக் குறிப்புகள் | மா.கிருஷ்ணன் |
10 | சித்திராப் பௌர்ணமி | எம் மீனாம்பாள் |
11 | மலைப்பச்சிலை | எம்.லக்ஷ்மி அம்மாள் |
12 | சிபார்சு | கிருஷ்ணன் |
சிறுகதை பற்றிய குறிப்புகள்
இச்சிறுகதைகளுள் முன்னிலா, கெரஸொப்பா நீர்வீழ்ச்சி, அபஸ்வரம், மலைப்பசிலை போன்ற கதைகள் அதுவரை (1944 வரை) அச்சில் வெளியாகாதவை. நேரடியாக முன்னிலா தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. பிற கதைகள் பஞ்சாமிர்தம், கலைமகள், சில்பஸ்ரீ இதழ்களில் வெளிவந்தவை.
வி.விசாலாக்ஷி அம்மாள் எழுதியிருக்கும் ’தூரத்துப் பச்சை’ சிறுகதை பஞ்சாமிர்தம் இதழில் 1924-ல் வெளியான கதை. இக்கதையை தமிழின் முதல் அறிவியல் கதையாக மதிப்பிடலாம். தமிழில் வெளியான அறிவியல் கதையாக மதிப்பிடப்படும், ந.பிச்சமூர்த்தி எழுதிய 'சயன்ஸுக்குப் பலி’ 1933-ல் தான் கலைமகளில் பிரசுரமாகியது. ஆகவே, வி.விசாலாக்ஷி அம்மாளின் கதையை முன்னோடி முயற்சியாகக் கொள்ளலாம். ’தூரத்துப் பச்சை’ சிறுகதையில் வேற்றுக் கிரக மனிதன் ஒருவன் பாத்திரமாக வருகிறான். அவன் அவர்கள் உலகிலிருந்து, அவர்களால் 'தீயா’ என்று அழைக்கப்படும் பூமி கிரகத்திற்கு மிக விரும்பி வருவதாகவும், வந்த பின்பு இங்கு அவன் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
'மயிலாப்பூர் வக்கீல்' ,'சில்பஸ்ரீ’ இதழில் வெளியான ஒரு நகைச்சுவைக் கதை. வழக்கறிஞர்களைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட கதை. யமதர்மராஜனின் அவையில் மயிலாப்பூரைச் சேர்ந்த வக்கீல் வாமனாவதாரமையர் என்பவர் விசாரிக்கப்படுகிறார். அவர் குற்றவாளி என்று சித்திரகுப்தனும் எமனும் சுட்டிக்காட்ட, அவர்களை எதிர்த்து தனது வாதத் திறமையால் எதிர் வழக்காடுகிறார் வக்கீல் வாமனாவதாரமையர். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை மிகவும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் மா. அனந்தநாராயணன்.
கிராமவாசம், சித்திரா பௌர்ணமி போன்றவை பெண்கள் கூடிப் பேசும் தன்மை கொண்ட சிறுகதைகள். இவை பஞ்சாமிர்தம் இதழில் வெளியானவை.
மா.கிருஷ்ணன் எழுதிய 'மகாராசாவின் வெள்ளநாக்குட்டி’ சில்பஸ்ரீ இதழில் வெளியான சிறுகதை. மா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் பிற சிறுகதைகளில் இருந்து சற்றே மாறுபட்ட மொழிநடையில் வெளியாகியிருக்கும் இச்சிறுகதை, புலிவீரப்பட்டி ஜமீன்தாரைப் பற்றியும், அவரிடம் இருந்த 'சாக்கி’என்னும் வெள்ளை நாய்க்குட்டியின் பெருமையைப் பற்றியும் பேசுகிறது. இதன் மொழிநடை, மா.கிருஷ்ணன் எழுதிப் பிற்காலத்தில் வெளியான 'கதிரேசன் செட்டியாரின் காதல்’ நாவலைப் பெரிதும் ஒத்திருக்கிறது. இச்சிறுகதையை காலச்சுவடு இதழ் ஜனவரி 2022-ல் மறு பிரசுரம் செய்துள்ளது[1].
மா.அனந்தநாராயணன், மா.கிருஷ்ணன், விசாலாக்ஷி அம்மாள் எழுதிப் புத்தகமாகத் தொகுக்கப் பெறாத சிறுகதைகளும் உள்ளன.
ஆவணம்
அச்சில் இல்லாத 'முன்னிலா’ சிறுகதைத் தொகுப்பின் பிரதி, ரோஜா முத்தையா நூலகத்திலும், ஞானாலயா ஆய்வு நூலகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Aug-2023, 06:45:38 IST