under review

முன்னவிலக்கணி

From Tamil Wiki

தண்டியலங்காரத்தில் ஆறாவதாகக் கூறப்படும் அணி முன்னவிலக்கணி (முன்ன விலக்கு அணி). முன்னம் என்பதற்குக் 'குறிப்பு' என்று பொருள். பாடலில் கவிஞர் ஒரு பொருளை விவரித்து, பின் விலக்குதல் முன்னவிலக்கணி எனப்படும். தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை

முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
மூவகைக் காலமும் மேவியது ஆகும் (தண்டி. 42)

என்று குறிப்பிடுகிறது.

விளக்கம்

ஒரு பொருளை (ஒரு கருத்தை அல்லது ஒரு செயலை) குறிப்பினால் விலக்கினால் (மறுத்தால்) அது முன்னவிலக்கு என்னும் அணியாகும். அது இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்னும் மூன்று காலத்தோடும் தொடர்பு படலாம்,மூன்று காலப்பொருள்களும் மறுக்கப்படலாம். குறிப்பினால் அல்லாமல் கூற்றினால் (வெளிப்படையாக) மறுப்பதும் முன்னவிலக்கு அணியேயாகும். முன்னவிலக்கு அணி இறந்தவினை விலக்கு, நிகழ்வினை விலக்கு, எதிர்வினைவிலக்கு என மூவகைப்படும்

இறந்தவினை விலக்கு

இறந்த காலத்தில் நிகழ்ந்ததை மறுத்து விலக்குவது இறந்த வினை விலக்கு.

எடுத்துக்காட்டு

பாலன் தனது உருவாய், ஏழ்உலகுஉண்டு,-ஆல்இலையின்
மேல் அன்று கண்துயின்றாய், மெய்என்பர்; -ஆல்அன்று
வேலைநீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலைசூழ் குன்றுஎடுத்தாய் சொல்

பொருள்:சோலை சூழ்ந்த கோவர்த்தக் குன்றை குடையாகப் பிடித்த திருமாலே! நீ ஊழிக்காலத்தில் ஏழு உலகத்தையும் உண்டு, குழந்தை வடிவம் கொண்டு, ஆல் இலையில் துயின்றாய் என்று கூறப்படுவது உண்மையென்பர்.அவ்வாறாயின் நீ உறங்கிய ஆலிலை கடலின் உள்ளே இருந்ததோ? விண்ணுலகில் இருந்ததோ? மண்ணுலகில் இருந்ததோ? சொல்வாய்.

அணிப்பொருத்தம்

உலகம் ஏழும் உண்டதும் திருமால் குழந்தை வடிவம் கொண்டு ஆலிலையில் துயின்றது மெய்யே என இறந்த காலத்தில் நிகழ்ந்ததை சொல்லி விட்டு, அப்படியானால் அந்த ஆலிலை எங்கே இருந்தது , விண்ணிலா, மண்ணிலா?(உலகமே விழுங்கப்பட்டதால், விண்ணேது, மண்ணேது?) என அவ்வுண்மையை விலக்கியதால் இறந்தவினை விலக்கணியாகிறது.

நிகழ் வினை விலக்கு

நிகழ்கால நிகழ்ச்சியை மறுத்து விலக்குவது நிகழ்வினை விலக்கு.
எடுத்துக்காட்டு

திருமுகத்தில் தொங்கி தெளிவின்றி ஆடும்
சுருள்கொண்ட கார்குழலும் சொல்லும் – அரும்பே
அழகென்று சூட்டினாய்! அஃதிலும் மேலாம்
விழல்போன்ற கூந்தலன்றோ! வீண்!
  

அணிப்பொருத்தம்

பாடலில் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் மலரைவிட அந்தக் கூந்தல் மிக அழகாக இருக்கிறது. அதனால் மலர் வேண்டாம் என்று நிகழ்காலத்தில் நடப்பதை விலக்குவதால் இது நிகழ்வினை விலக்கு ஆகியது.

எதிர்வினை விலக்கு

எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வினை ஒன்றை மறுத்து விலக்குவது எதிர்வினை விலக்கு.

முல்லைக் கொடிநடுங்க, மொய்காந்தள் கைகுலைப்ப,
எல்லை இனவண்டு எழுந்து இரங்க, - மெல்லியல்மேல்
தீவாய் நெடுவாடை வந்தால் செயல் அறியேன்
போவாய், ஒழிவாய், பொருட்கு

பொருள்:பொருள்தேடப் பிரிந்து செல்லவிருக்கும் தலைவனுக்குத் தோழி கூற்று: "முல்லைக்கொடி நடுங்கவும், நெருங்கிய காந்தள் மலர்கள் கைகளைப் போலப் பூப்பவும், ஒளி பொருந்திய வண்டின் கூட்டம் எழுந்து ஒலிக்கவும், தீயின் தன்மையை உடைய நெடிய வாடைக் காற்று தலைவியின் மேல் வீசினால் பின் என்ன நடக்கும் என நான் அறியமாட்டேன். ஆதலின், தலைவியைப் பிரிந்து பொருள் தேடப் போவதோ அல்லதுபிரியாது உடன் இருப்பதோ உன் விருப்பம் "

அணிப்பொருத்தம்

தலைவன் பிரிந்து சென்றால் தலைவி பிரிவுத் துயரால் மிக வாடுவாள் எனச் சொல்லி தலைவன் செல்லும் எதிர்கால நிகழ்வை விலக்கியதால் இது எதிர்வினை விலக்கு.

உசாத்துணை

தமிழ் இணையக் கல்விக் கழகம்-முன்னவிலக்கணி

நிகழ் விலக்கணி-பாவலர் அருணா செல்வம்


✅Finalised Page