under review

முனகால வேங்கடராமையா

From Tamil Wiki
முனகால வேங்கடராமையா
Talks With Sri Ramana Maharshi - Book.jpg
ரமணர், அன்பர்களுடன்

முனகால வேங்கடராமையா - ரமணானந்த சரஸ்வதி (1882- பிப்ரவரி 1963) ரமண மகரிஷியுடனான ஆர்வலர்களின் உரையாடல்களை நாட்குறிப்புடன் ஆங்கிலத்தில் Talks with Ramana Maharashi என்ற நூலாக தொகுத்து எழுதியவர். மொழிபெயர்ப்பாளர் - தமிழ், வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆன்மிக நூல்களை மொழி பெயர்த்தார். திரிபுர ரகசியம், அத்வைத போத தீபிகை, கைவல்ய நவநீதம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

பிறப்பு, கல்வி, பணி

முனகால எஸ். வேங்கடராமையா (முனகால சுப்பிரமணியன் வேங்கடராமையா) மதுரை மாவட்டம் சோழவந்தானில் 1882 -ம் ஆண்டு பிறந்தார். ஏழு உடன் பிறந்தோரில் ஒருவரான இவர் மட்டுமே ஆங்கிலக் கல்வி பெற்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்றார். பின்னர் மும்பை சென்று முன்னோடி தொழில்துறை வேதியிலாளார் திரிபுவனதாஸ் கஜ்ஜார் என்பவரது ஆய்வகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். 1908-ல் சென்னை திரும்பிய அவர் 1910-ல் வேதியியலில் இறுதித் தேர்வு எழுதினார் அத்தேர்வினை நிறைவு செய்த சென்னை மாகாணத்தின் முதன்மை மாணவர்களுள் ஒருவராக விளங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியின் இயற்பியல்-வேதியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆரணி ஜாகிர்தார் தங்கப்பதக்கத்தைப் பெற்றார் (Jagirdar of Arni Gold Medal) (இப்பதக்கத்தை நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமன், எஸ். சந்திரசேகர் இருவரும் வேறு வேறு ஆண்டுகளில் பெற்றுள்ளனர்) 1911-ல் மசூலிப்பட்டினம் நோபல் கல்லூரியில் வேதியியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1912-1918 ஆண்டுகளில் சென்னை கிறிஸ்துவ கல்லூரிலும் பச்சையப்பன் கல்லூரியிலும் பணியாற்றினார்.

தனி வாழ்கை

முனகால எஸ். வேங்கடராமையா தன் பதிமுன்றாவது வயதில் தனது மாமாவின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆன்மீக ஈடுபாடு, தத்துவக் கல்வி

ஸ்ரீ பாபா நாராயண் குரு என்ற வங்காள சாதுவுடன் தொடர்பிலிருந்த முனகால வேங்கடராமையா அவரது வழிகாட்டுதலுடன் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரங்கள் ஆகிய மெய்யியல் நூல்களைப் பயின்றார். 1919-ல் சென்னை விட்டுச் சென்ற அவர் உதகமண்டலத்தில் மதராஸ் அரசின் சிறு தொழில்கள் துறையில் வேதியியலாளராக பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு பணியிடமாற்றம் பெற்ற அவர் நாள்தோறும் பணிக்குப்பின் மாலைநேரத்தை ஸ்ரீ பாபா நாராயண் குருவுடன் செலவிட்டார். 1922 முதல் 1927 வரையிலான ஆண்டுகளில், வேங்கடராமையா அக்காலம் வரையில் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட அத்வைத வேதாந்தம் குறித்த நூல்கள் அனைத்தையும் வாசித்தறிந்தார். பள்ளி, கல்லூரியில் தமிழ் மற்றும் லத்தின் மொழி கற்றிருந்த வேங்கடராமையா அத்வைதத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக, மூலநூல்களைப் படிப்பதற்காக சமஸ்கிருத மொழியைக் கற்றார்.

ரமணருடனான சந்திப்பு, மொழிபெயர்ப்பு பணி

முன்னதாக 1918-ம் ஆண்டில் வேங்கடராமையா தனது மகளின் மறைவுக்குப் பின், தனது உலகியல் ஆர்வங்களை இழந்தவராக ஆனார். 1918-ம் ஆண்டு முதன் முறையாக திருவண்ணாமலை சென்று ஸ்கந்தாஸ்ரமத்தில் ரமணரைக் கண்டார். இரண்டாம் முறையாக 1927-ல் ரமணரை சந்தித்த அவர் பின்னர் கோடைவிடுமுறைகளில் குடும்பத்துடன் சென்று அவரைக் காண்பதும் ஒரு மாதம் ஆசிரமத்தில் தங்குவதுமான வழக்கத்தை மேற்கொண்டார். 1932-ல் பணியைவிட்டு நீக்கப்பட்ட வெங்கடராமையா முழுமையான ஆசிரமவாசியானார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆங்கில கடிதங்களுக்கு ரமணரின் பதில்களை எழுதும் பணியை மேற்கொண்டார். ரமணருடனான பக்தர்களின் கேள்வி பதில்களை - தமிழ்-ஆங்கில மொழிகளிடையே மொழிபெயர்க்கும் நேரடி மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார். ரமணரின் வழிகாட்டுதலின் படி தமிழ் சைவ நூல்களையும் ,ஆதி சங்கரரின் நூல்களையும் பயின்றார். அத்துடன் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.

ரமணருடனான இக்காலகட்டம் வேங்கடராமையாவின் படைப்பூக்கம் மிக்க காலகட்டமாக அமைந்தது. 1935 முதல் 1939 வரையிலான நான்கு ஆண்டுகளில் ரமணருடனான அன்பர்களின் கேள்வி-பதில்களாக அமைந்த உரையாடல்களை நாட்குறிப்புடன் ஆங்கிலத்தில் தொகுத்தார். Talks With Ramana Maharishi என்ற நூல் ரமணர் குறித்த நம்பகத்தன்மை கொண்ட நூல்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படுகிறது. பெரும்பாலும் கேள்விகளை எழுப்பியவர்களிடம் அவர்களது கேள்விகளை உறுதி செய்து கொண்டும் ரமணரின் பதில்களை அவரிடம் உறுதி செய்து கொண்டும் தினசரி நிகழ்வுகளின் போக்கில் தொகுக்கப் பெற்றது இந்நூல். ரமணரின் போதனைகள், வழிமுறைகள் பற்றிய அறிதலில் இந்நூல் முக்கிய இடம் வகிக்கிறது. இது விஸ்வநாத சுவாமி என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ரமணாசிரமத்தால் 'ஸ்ரீ பகவத் வசனாம்ருதம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பிற இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுபட்டுள்ளது. இந்நூல், நாள்தோறும் ரமணாசிரமத்தின் கூடத்தில் அவருடன் அன்பர்கள் நடத்திய உரையாடல்களின் நேரடி பதிவுகள் என்றபோதும் சில சமயம் வேங்கடராமையா அங்கு நேரடியாக இல்லாதபோது பின்னர் அங்கிருந்த பிறரிடம் கேட்டு பதிவு செய்தவற்றையும் உள்ளடக்கியது. அத்துடன் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு வடமொழி அறிந்த அவர், அவர் அறிந்திராத மலையாள மொழியில் ரமணர் பேசிய சந்தர்ப்பங்களில் பிறரிடம் அல்லது ரமணரிடமே கேட்டறிந்து பதிவு செய்யப்பட்டவற்றையும் கொண்டது. நான்கு ஆண்டுகளின் நாட்குறிப்புகள் என்றபோதும் முழுவதுமாக தொடர்ச்சியானதாக அல்லாமல் இடையே கால இடைவெளிகள் கொண்டதாக உள்ளது. மேலும் உரையாடல்கள் ஏதுமற்ற நாட்களில் கூடத்தின் சூழலையும், அங்கிருந்தவர்களையும், காட்சிகளை பதிவு செய்துள்ளார். வேங்கடராமையாவின் தத்துவக் கல்வி ரமணர் பல்வேறு நூல்களை மேற்கோள் காட்டி பேசியபோது அவற்றை அதன் சரியான பொருத்தப்பாடுகளோடு உள்வாங்கி குறிப்புகளுடன் பதிவு செய்ய உதவியாக அமைந்தது. இந்நூலின் சமீபத்திய பதிப்புகளில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக ரமணாசிரமத்தின் பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர்.

வேங்கடராமையா 'திரிபுர ரகசியம்', 'அத்வைத போத தீபிகை', 'கைவல்ய நவநீதம்', ரமணரின் சில நூல்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 'திரிபுர ரகசியம்' நூலை அவ்வபோது மேற்கோள் காட்டிவந்த ரமணர் அந்நூல் ஆங்கிலத்தில் இல்லை என்று கூறியதன் பொருட்டு அந்நூலை ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் வேங்கடராமையா. 1950-ல் ரமணர் மறைந்தார். 1954-ல் மாரடைப்புக்கு உள்ளாகி மீண்ட வேங்கடராமையா துறவு பூண்டு, சுவாமி ரமணானந்த சரஸ்வதி என்று பெயர் கொண்டார். 1955-ல் கல்கத்தா சென்று பத்ரிநாத் சங்கராச்சாரியார் கிருஷ்ணபோதராம்ஜி அவர்களைச் சந்தித்தார். மீண்டும் ரமணாசிரமம் திரும்பி அங்கேயே வாழ்ந்த வேங்கடராமையா 1963-ல் மறைந்தார்.

உசாத்துணை


✅Finalised Page