under review

முத்து காமிக்ஸ்

From Tamil Wiki
முத்து காமிக்ஸ் சின்னம்
முத்து காமிக்ஸ் உட்பக்கம்

முத்து காமிக்ஸ்: (1972) தமிழில் செயல்பட்டு வரும் படக்கதை வெளியீட்டகம். ஆங்கிலத்தில் இருந்து புகழ்பெற்ற படக்கதைகளை உரிமம் பெற்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறது. தமிழ் சித்திரகதைகளில் முத்து காமிக்ஸ் புகழ்பெற்றது

(பார்க்க: தமிழ்ச் சித்திரக் கதைகள் பட்டியல்)

முத்து காமிக்ஸ் அட்டைகளில் ஒன்று

தொடக்கம்

முத்து காமிக்ஸ் நிறுவனத்தை சிவகாசியைச் சேர்ந்த எம்.சௌந்தரபாண்டியன் 1971 ல் தொடங்கினார். ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த The Steel Claw என்னும் படக்கதையின் உரிமையை லண்டன் சென்று வாங்கிவந்து அதை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அதன் பொருட்டு முத்து காமிக்ஸ் என்னும் வெளியீட்டகத்தை சிவகாசியில் தொடங்கினார். இரும்புக்கை மாயாவி என்னும் படக்கதை 1972 ஜனவரியில் வெளியானது. 128 பக்கம் கொண்ட அந்நூல் 90 பைசா விலையில் விற்கப்பட்டது. பிரகாஷ் அச்சகம்- வெளியீட்டகம் சார்பில் இந்நூல்கள் வெளியாயின.

மக்கள் குரல் பத்திரிகையின் துணை ஆசிரியர் காமராஜுலு ஆங்கிலத்திலிருந்து அந்தக் கதையை தமிழுக்கு மொழிபெயர்த்தார்.தொடக்ககாலத்தில் முத்து காமிக்ஸின் பதிப்பாளராக முல்லை தங்கராசன் செயல்பட்டார்.

முத்து வாரமலர்

1980-ல் முத்து காமிக்ஸ் வார மலர் என்னும் வார இதழ் தொடங்கப்பட்டது. ஓரிரு ஆண்டுகளில் அது மூடப்பட்டது.

லயன் காமிக்ஸ்

1984ல் சௌந்தரபாண்டியனின் பதினேழு வயதான மகன் விஜயன் லயன் காமிக்ஸ் என்னும் வெளியீட்டகத்தை தொடங்கினார். ஜூனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ் என வெவ்வேறு படக்கதை வரிசைகள் அவரால் வெளியிடப்பட்டன. 1984ல் ராணி காமிக்ஸ் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்டு முத்து காமிக்ஸுக்கு கடுமையான போட்டியை அளித்தது.

கதைநாயகர்கள்

தொடர்ச்சியாக முத்து காமிக்ஸ் ஏராளமான படக்கதைகளை வெளியிட்டது. அதன் சாகச நாயகர்கள் தமிழில் சிறுவர்கள் நடுவே புகழ்பெற்றார்கள்.

  • இரும்புக்கை மாயாவி The Steel Claw
  • வேதாளர் Phantom
  • டார்ஜான்
  • ஜானி நீரோ
  • டேவிட்
  • டெக்ஸ் வில்லர்
  • மந்திரவாதி மாண்ட்ரெக்
  • ஸ்பைடர்
  • லக்கிலுக்

போன்ற கதைநாயகர்கள் முத்து காமிக்ஸ் வழியாக வெளியானார்கள்.

மீண்டு வருகை

தொண்ணூறுகளில் தொலைக்காட்சி வருகைக்குப் பின் படக்கதை வாசிக்கும் ஆர்வம் குறைந்தது. பெரும்பாலான காமிக்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆகவே முத்து காமிக்ஸ் பின்னடைவைச் சந்தித்தது. 2000 முதல் 2011 வரை பத்தாண்டுக்காலம் முத்து காமிக்ஸ் வெளிவரவில்லை. பிரகாஷ் பதிப்பகம் மூடப்பட்டது.

சௌந்தரபாண்டியனின் மகன் எஸ். விஜயன் இணையத்தை பயன்படுத்தி 2012-ல் முத்து காமிக்ஸுக்கு மீண்டும் ஒரு தொடக்கத்தை அளித்து நூல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். முத்து காமிக்ஸ் கிளாஸிக் வரிசை என அவர் வெளியிட்ட நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

2015 ஆகஸ்டில் முத்து காமிக்ஸ் தன் 350-வது நூலை வெளியிட்டது.

இலக்கிய இடம்

தமிழ்ச் சிறுவர்கள் வாசிப்புப் பழக்கத்தை நோக்கிச் செல்வதற்கான மிகச்சிறந்த தொடக்கமாக அரைநூற்றாண்டுக்காலம் படக்கதைகள் திகழ்ந்தன. அவற்றில் முத்து காமிக்ஸ் ஐரோப்பிய , அமெரிக்க கதைகளை மொழிமாற்றம் செய்து வெளியிட்டமையால் உலகம் நோக்கிய சாளரமாக அது திகழ்ந்தது. மேலைநாட்டுப் பண்பாட்டையும், வரலாற்றையும், நவீன அறிவியல் கருத்துக்களையும் துப்பறியும்கதைகள் மற்றும் சாகசக்கதைகள் வழியாக அது தமிழுக்கு அறிமுகம் செய்தது. தமிழில் ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காலிருந்தும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த ஒரே மொழியாக்கப் படைப்புகள் முத்து காமிக்ஸ் முன்வைத்தவையே.

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 21:12:30 IST