under review

முத்துநாச்சி சண்டை (கதைப்பாடல்)

From Tamil Wiki
முத்து என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்து (பெயர் பட்டியல்)

முத்துநாச்சி சண்டை (18-ம் நூற்றாண்டு) ஒரு கதைப்பாடல் சுவடி நூல். கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் சகோதரியாகிய முத்துநாச்சி, ஆங்கிலேயரை எதிர்த்து தலைமையேற்று போர் நிகழ்த்திய செய்தியைக் கூறுகிறது. முனைவர் மோ. கோ. கோவைமணி, இச்சுவடியை ஆராய்ந்து ஆவணப்படுத்தினார்.

சுவடி விளக்கம்

முத்துநாச்சி சண்டை கதைப்பாடல் சுவடி நூல், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சேகரிப்பில் உள்ளது. முனைவர் மோ. கோ. கோவைமணி, இச்சுவடியை ஆராய்ந்து ஆவணப்படுத்தினார். இச்சுவடியை ஸ்ரீபுண்ணிய குமாரனாகிய திருமலைக்கொழுந்தா பிள்ளை என்பவர் தாழப்பட்டியில் இருக்கும் வீரமலைப் பிள்ளைக்கு எழுதிக்கொடுத்ததாக அறியப்படுகிறது.

உள்ளடக்கம்

முத்துநாச்சி சண்டை கதைப்பாடல் சுவடி நூலில் 892 பாடல் வரிகள் இடம் பெற்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் சகோதரியாகிய முத்துநாச்சி ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்ட செய்தி இந்நூலில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கதைப் பாடல் வடிவில் இச்சுவடி நூல் அமைந்துள்ளது. நாட்டுப்புற வழக்குச் சொற்களும், கொச்சைச் சொற்களும் இச்சுவடி நூலில் இடம்பெற்றுள்ளன.

கதைச் சுருக்கம்

முத்துநாச்சி பொ.யு. 1760-ல் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகள். கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா எனப்படும் துரைசிங்கம் ஆகியோருக்கு இளையவள். பொ.யு. 1791 முதல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை கட்டபொம்மன் ஆட்சி செய்து வந்தான். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் கீழ் இந்திய சிறைப்பட்டிருந்த காலம். கம்பெனியார் குறு நில மன்னர்கள் பலரும் கடும் வரிகளை விதித்தனர். சில பாளையக்காரர்கள் பிரிட்டிஷ் படைக்கு அஞ்சி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கப்பம் கட்டினர். கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்ததால் அவன் மீது போர் தொடுத்தனர். முதற் போரில் ஆங்கிலேயர்களின் தளபதி காலிசென்ஸ் இறந்தான். கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் அப்போரில் இறந்தான். பிரிட்டிஷ் படை தோற்றது. மேஜர் பானர்மேன் தலைமையில் நிகழ்ந்த இரண்டாவது போரில் கோட்டை வீழ்ந்தது. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். ஊமைத்துரை சிறையில் அடைக்கப்பட்டான்.

புலிக்குத்தி நாயக்கனால் சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரை ஒட்டப்பிடாரத்தில் கோட்டை ஒன்றை அமைத்தான். அதை மீண்டும் பிரிட்டிஷ் படை தாக்கியது. ஊமைத்துரை உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்தனர். அச்சமயம் தமக்கு ஏதும் நேர்ந்தால் தம் குலப் பெண்டிர் எதிரிகள் கையில் பட்டு இழிவு ஏற்படுமே எனும் கவலையில் ஊமைத்துரை தமது சிறியதாயார்கள், கட்டபொம்மன் மனைவியர்கள் என அரண்மனை மகளிர் 11 பேரை பலி கொடுத்தான். தமது மனைவியை வெட்ட முயன்று அவள் வயிற்றில் தன் வாரிசு வளர்வதால் அவளை விடுவித்து தன் தங்கை முத்துநாச்சியை வெட்டச் சென்றான்.

முத்துநாச்சி அவனிடம் வீணாக இவ்வாறு உயிர் விடுத்தலை விட கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வீர மரணமடைவது மேல் என்றும், தாம் அதற்குத் தயாராக உள்ளதாகவும் கூற ஊமைத்துரை அவளை விடுவித்தான். பின் முத்துநாச்சி குலதெய்வ வழிபாடு செய்து போர்க்கோலம் பூண்டாள். போருக்குப் புறப்படும் அவளுடன் உடன்கட்டையேறி மரணமடைய இருந்த வீர மகளிர் இரண்டாயிரம் பேர் இணைந்தனர். கோட்டைக்குள் புகுந்த முத்துநாச்சியும் இரண்டாயிரம் மகளிரும் பிரிட்டிஷ் படையை எதிர்த்து தீவிரமாகப் போரிட்டனர்.

பீரங்கி மூலம் கோட்டையைத் தகர்க்க முயன்று கோட்டைக்குள் புகுந்த படைத் தலைவனை முத்துநாச்சி தலையை வெட்டிக் கொன்றாள். மகளிர்கள் ஆங்கிலேயப் படையினர் மீது உலக்கைகளை வீசியும், செந்தணலை வாரி இறைத்தும், கொதிக்கும் கூழ்களை ஊற்றியும், கொள்ளை வறுத்துக் கொட்டியும் போர் செய்தனர். அதில் ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது. சிதறிப் போன ஆங்கிலேயப் படையின் தலைவன் சச்சத்துரையை முத்துநாச்சி கொன்றாள்.

இரண்டாம் நாள் போரில் மிகுதியாக ஆங்கிலேயப் படை வர அவர்களை எதிர்த்துப் போரிட்டாள். பிரிட்டிஷாருக்கு உதவியாக மேலும் சில பாளைக்காரர்கள் இணைந்து முத்துநாச்சியைத் தாக்கினர். அவர்களுடன் போரிட்டு அவர்களில் சிலரைக் கொன்ற முத்துநாச்சி, இறுதியில் நெஞ்சில் ஈட்டி மற்றும் வேலால் தாக்கப்பட்டு வீரமரணமடைந்தாள்.

அவள் உடல் ஈமச்சடங்கிற்காக எடுத்துச் செல்லப்படும்போது அம்பலக்காரன் ஒருவன் மேல் அருள் வந்தது. அதன் வாயிலாகத் தான் இறந்த இடத்திலேயே தம்மை வைத்துக் கும்பிடுமாறு கூறப்பட, அவ்வாறே முத்துநாச்சியும், அவளுடன் இறந்த ஏழு பெண்களும் எரியூட்டப்பட்ட இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. ஆலயத்தில் கன்னிகழியாத தன்னையும் பிற ஏழுபேரையும் ஒரே இடத்தில் சிலையாக வைக்க வேண்டாம் என அருள் வந்து முத்துநாச்சி கூற, அவ்வாறே உள்மண்டபத்தில் முத்துநாச்சி சிலையையும் வெளிமண்டபத்தில் பிற ஏழு பெண்களின் சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

பாடல்

முத்துநாச்சி தன் வீரம் பற்றிக் கூறுதல்

புலியின் கூடப்பிறந்து போட்டே யின்னம்
பூனையாய்ப் போவேனோ தங்கையரும்
சிங்கத்தின் கூடப்பிறந்து போட்டு யின்னம்
சிறுவ னாவனோ உன்பிறப்பு
நீயு மிருந்து பிறந்த வயிற்றிலே
நானு மிருந்து பிறந்த னண்ணே
உனக்கு முள்ள சவுரியமு மின்னம்
எனக்கில் லாமலிருந் திடுமோ
நீயுங் குடித்த தாய்முலைப் பாலிலே
நானுங் குடித்து வளர்ந்த னண்ணே
உனக்கு வார்த்த்தோர் சங்கிலே கொஞ்சம்
எனக்கு மெத்தவே வாத்திருப்பார்
முகத்திலே யுனக்கு மீசையடா அண்ணே
முழங்காலி லெனக்கு மீசையடா

பெண்கள் போருக்காக முத்துநாச்சியுடன் இணைதல்

உடன்கட்டை யேறிச் சாகிறதைப் பார்க்க
உற்றதோர் குண்டுலே மாண்டு போவோம்
இப்படிச் சாகிற குண்டு பட்டுச் செத்தால்
இதுகொண்டு மெத்தச் சேதமில்லை
என்று சொல்லிக் கொண்டு ஏழுபேர் கள்ளச்சி
இச்சினம் பின் ஓடி வந்து
ஒலிமுகம் போயிச் சேருமடி யுற்ற
முத்துனாச்சி பின்னே னாங்கள் வாறோம்
என்றுசொல்லிக் கொண்டு கள்ளச்சி ஏழுபேர்
இச்சினம் வீட்டுக்கு ஓடி வந்து
தலைக்குல்லாவுகள் தானுமிட்டு யின்னம்
தங்க அங்கரக்காயத் தொட்டிறுக்கி
புருசனுடைய யீட்டிகளெடுத்து
புறப்பட்டாளய்யா கள்ளச்சியும்
வாரபோ தங்கனே கள்ளச்சி ஏளுபேர்
வாய்க்கொழுப்பங்கனே சொல்லிக் கொண்டாள்
உம்பளஞ் சம்பளந்தின்கிற முண்டைகள்
ஓடி வாங்களடி சண்டை செய்ய
கட்டமன் தங்கையை பார்க்கவுங்களுக்கு
கனமரியாதைத் தானுமுண்டோ
என்றுசொல்லிப் போட்டு கள்ளச்சிமார் சொல்ல
இச்சினமே யந்த பெண்டுகளும்
அதிலே ரெண்டாயிரம் பேரு குமரிகள்
அச்சினம் வெளியில்பட்டு மங்கே
இந்தக் கட்டுடனே ஊமைச்சாமி னாட்டில்
எத்தினை னாளைக்கி னாமிருப்போம்
பிறாமுக யின்னம் பார்த்த மென்றாலவன்
பிளந்து வைப்பானே துண்டு ரெண்டாய்
இப்படி யிருக்கக் கூடாதடி னாமள்
இறந்து போவது உத்தமந்தான்

மதிப்பீடு

கட்டபொம்மன், ஊமைத்துரை வரலாற்றை அறிந்தாரும் அறியாத தகவலான அவன் சகோதரி முத்துநாச்சி பற்றிய வீர வரலாற்றை, முத்துநாச்சி கதைப் பாடல் மூலம் அறியமுடிகிறது. மகளிர் ஆயிரக்கணக்கில் திரளாகப் போரில் பங்கு கொண்டமையையும், அவர்களின் போர்முறைகளையும் இச்சுவடி நூல் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட மகளிர்களின் பங்கைக் கூறும் குறிப்பிடத்தகுந்த சுவடி நூலாக முத்துநாச்சி கதைப் பாடல் சுவடி நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2024, 18:48:49 IST