under review

முத்தாலங்குறிச்சி காமராசு

From Tamil Wiki
முத்தாலங்குறிச்சி காமராசு

முத்தாலங்குறிச்சி காமராசு (பிறப்பு: அக்டோபர் 8, 1966) எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், ஆய்வாளர், ஆன்மிக நூல்கள் எழுதி வருபவர். சித்தர்கள் பற்றியும் ஜமீன்கள் பற்றியும் ஆராய்ந்து எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

முத்தாலங்குறிச்சி காமராசு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தை அடுத்துள்ள முத்தாலங்குறிச்சி கிராமத்தில், சங்கரசுப்பு - சொர்ணம்மாள் இணையருக்கு, அக்டோபர் 8, 1966 அன்று மகனாகப் பிறந்தார். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்தார். உயர் கல்வியை பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியிலும், கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்த பின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். குடும்பச் சூழல் காரணமாக மும்பைக்குச் சென்று பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு வந்தார். மதுரை தினத்தந்தியில் பிழை திருத்துநர் ஆகப் பணி செய்தார். அதற்குப் பின் செங்கல் சூளை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து பேருந்து நடத்துநராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ மணிநாடாரிடம் சில ஆண்டுகாலம் உதவியாளராகப் பணி புரிந்தார்.

1996-ல் பொன் சிவகாமியுடன் திருமணம் நிகழ்ந்தது. மகன் அபிஷ் விக்னேஷ், மகள் ஆனந்த சொர்ண துர்கா. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதழியல் வாழ்க்கை

முத்தாலங்குறிச்சி காமராசு, தன் வாழ்க்கை அனுபவங்களையும் தான் கண்டதையும் கேட்டதையும் துணுக்குகளாக, கதை, கட்டுரைகளாக எழுத ஆரம்பித்தார். முதல் படைப்பு, மார்ச் 6, 1987-ல் 'தேவி’ வார இதழில் வெளியானது. அது முதல் தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், துணுக்குகள், சிறுகதைகளை எழுதி வந்தார். மும்பையிலிருந்து வெளியாகும் 'மராத்திய முரசு, 'போல்டு இந்தியா’ போன்ற இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின.

நாடக முயற்சிகள்

முத்தாலங்குறிச்சியில் 'தேன்கூடு இளைஞர் மன்றம்’ சார்பாக நடந்த இரண்டு நாடகங்களில் கதாநாயகியாகப் பெண் வேடமிட்டு நடித்தார் காமராசு. தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வந்தார். கூடவே நாடகங்களுக்குக் கதை வசனமும் எழுதினார். இவரது நாடகங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் அரங்கேறி இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன.

வானொலி நாடகங்கள்

திருநெல்வேலி வானொலி நிலையத்தில் அக்டோபர் 3, 1988-ல் முத்தாலங்குறிச்சி காமராசின் 'குருவை மிஞ்சிய சீடர்’ என்னும் உரைச் சித்திரம் ஒலிபரப்பானது. இவர் எழுதிய 'கண்டிஷன் கண்டிஷன்’ என்னும் நாடகமும் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து இவரது நாடகங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. நாளடைவில் நெல்லை வானொலியின் முக்கிய நாடக எழுத்தாளர்களுள் ஒருவரானார்.

திரைப்படப் பங்களிப்புகள்

முத்தாலங்குறிச்சி காமராசு திரைப்படங்களிலும் பங்களித்திருக்கிறார். 'எட்டுத்திக்கும் மதயானை’, 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’, 'அப்பாவின் மீசை’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ’பொருநை சுடர்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்களித்து வருகிறார்.

வல்லநாடு சித்தர் வரலாறு
ஆன்மிகப் படைப்புகள்

முத்தாலங்குறிச்சி காமராசின் எழுத்துப் பாதையை ஆன்மிகத்தின் பக்கம் திருப்பினார் மனைவி பொன் சிவகாமி. தமிழ் முரசு இதழில் 'வல்ல நாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்" பற்றிய தொடரை எழுதினார் காமராசு. அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அந்த நூலை திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் புத்தகமாக வெளியிட்டனர். அச்சில் வெளியான முத்தாலங்குறிச்சி காமராசின் முதல் நூலைத் தொடர்ந்து, சித்தர்கள், ஆலயங்கள், சிறு தெய்வங்கள், ஜமீன்கள், மலைத்தலங்கள் என்று கட்டுரைகள், நூல்களை எழுதத் தொடங்கினார்.

ஆதிச்சநல்லூர், கொற்கை, தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள பகுதிகளுக்கு களப்பணியாளராகச் சென்று ஆய்வுகள் நடத்தி ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார்.

தாமிரபரணி ஆய்வுகள்

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய முக்கிய நூல்களுள் ஒன்று 'தலைத் தாமிரபரணி.’ இது முதலில் 'நதிக்கரையோரத்து அற்புதங்கள்’ என்ற தலைப்பில் நெல்லை தமிழ் முரசு நாளிதழில் தொடராக வெளியானது. காவ்யா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது. 1000 பக்கங்கள் கொண்ட 'தலைத் தாமிரபரணி’ நூல், தாமிரபரணி நதியின் சிறப்பை, அதன் பெருமையை, அதனை ஒட்டியுள்ள மக்களின் வாழ்வியலை, ஆலயங்களை, விழாக்களைப் பற்றிப் பேசுகிறது. குறிப்பாக, 'தாமிரபரணி மகா புஷ்கரம்’ என்ற ஒரு விழா நடந்ததே இல்லை என்ற கருத்து சிலரால் முன் வைக்கப்பட்ட நிலையில், அந்தக் கூற்றை மறுத்து, விழா கொண்டாடப்பட்டதற்கான ஆதாரத்தை இந்த நூல் முன் வைத்தது.

முத்தாலங்குறிச்சி காமராசுவின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த நூல், 'நவீன தாமிரபரணி மகாத்மியம். இந்த நூலில் தாமிரபரணிக் கரையில் இருக்கும் 144 தீர்த்தக் கட்டங்களுக்கும் நேரில் சென்று படமெடுத்து, அவற்றின் வரலாற்றை எழுதியிருக்கிறார்.

திருநெல்வேலி பற்றிய ஆய்வு நூல்கள்
ஜமீன் பற்றிய ஆய்வுகள்

தென் பகுதி ஜமீன்தார்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி முத்தாலங்குறிச்சி காமராசு எழுதியிருக்கும் 'தென்னாட்டு ஜமீன்கள்’ நூல் குறிப்பிடத்தகுந்தது. 1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அந்த நூலில் ஊர்க்காடு ஜமீன்தார், சிங்கம்பட்டி ஜமீன்தார், எட்டையபுரம் ஜமீன்தார், சிவகிரி, சொக்கம்பட்டி, ஊத்துமலை, சாப்டூர், சேத்தூர், கடம்பூர், சாத்தான்குளம், நட்டாத்தி, குளத்தூர் ஜமீன் என சுமார் 18 ஜமீன்தார்களின் வாழ்க்கையை, வரலாற்றை, அப்பகுதியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்.

தென்பாண்டிச் சீமையிலே...

ஆதிச்சநல்லூர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டவர் முத்தாலங்குறிச்சி காமராசு.

பிரசுரங்கள், பிற பணிகள்

முத்தாலங்குறிச்சி காமராசுவின் நூல்களை திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், காவ்யா பதிப்பகம், விகடன் பிரசுரம், தினத்தந்தி, சூரியன் பதிப்பகம், இந்து - தமிழ் திசை, தினமலர் - தாமரை பிரதர்ஸ் மீடியா போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

முத்தாலங்குறிச்சி காமராசு, தன் தாயின் பெயரில் 'பொன்சொர்ணா ஸ்டுடியோ' என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன், 'பொன்சொர்ணா பதிப்பகம்’ என்ற புத்தக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

தமிழ்ச் செம்மல் விருது
பாரதி புரஸ்கார் விருது
முத்தாலங்குறிச்சி காமராசு விருதுகள் பெறும் படம்

விருதுகள்

  • தமிழக அரசு வழங்கிய 'தமிழ்ச்செம்மல்’ விருது
  • நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அளித்த 'தமிழ் ரத்னா’ விருது
  • திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய 'தமிழ்க்கலைசெல்வர் விருது’
  • காஞ்சி சங்கர மடம் வழங்கிய, 'தன்பொருநை கலைச்செல்வர்’ விருது
  • பாரதி கலை இலக்கிய மன்றம் வழங்கிய 'சிறந்த எழுத்தாளர்’ விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் அளித்த 'நாட்டுப்புறவியல் மேதை’ விருது
  • 'தமிழ்மாமணி’ விருது
  • 'பொருநை புதல்வன்’ விருது
  • 'பதிவுச்செம்மல்’ விருது
  • 'எஸ்.டி. ஆதித்தனார்’ விருது
  • 'எழுத்து சித்தர்’ பட்டம்
  • பாரதி புரஸ்கார் விருது

இலக்கிய இடம்

சித்தர்கள் பற்றி, ஜமீன்கள் பற்றி, புனித மலைத் தலங்கள் மற்றும் நதிகள் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு. இவரது படைப்புகளைப் பற்றி எம்.பில் மற்றும் பிஹெச்.டி. பட்டங்களுக்காக மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுகதைகள், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகங்கள், ஆன்மிக நூல்கள், ஆய்வு நூல்கள், மலர்கள், தொகுப்பு நூல்கள், பத்திரிகைத் தொடர்கள் என்று 150-க்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார். 1987-ல் எழுதத் தொடங்கி 35 வருடங்களில் இவர் படைத்திருக்கும் ஒட்டு மொத்தப் படைப்புகளின் எண்ணிக்கை மூவாயிரத்துத்துக்கும் மேலாகும். "முத்தாலங்குறிச்சி காமராசு தென்னாட்டுக்குக் கிடைத்த வரம்" என்பது டாக்டர் காவ்யா சண்முகசுந்தரத்தின் கருத்து.

நூல்கள்

ஆலய வரலாறுகள்
சிறுதெய்வங்கள் பற்றிய நூல்கள்
ஆலய வரலாறுகள்
  • நெல்லை வைணவத் தலங்கள்
  • நெல்லை சைவக் கோயில்கள்
  • நெல்லை பெண் தெய்வங்கள்
  • சீவலப்பேரி சுடலை
  • ஸ்ரீகுணவதியம்மன் அற்புதங்கள்
  • ஸ்ரீபெரும்படை சாஸ்தா வரலாறு
  • குலசேகர நத்தம் கரும்புளி சாஸ்தா வரலாறு
  • செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தா வரலாறு
  • ஜமீன் கோயில்கள்
  • நெல்லைக் கோயில்கள்
சித்தர் வரலாற்று நூல்கள்
சித்தர் வரலாறுகள்
  • வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்
  • தாமிரபரணி கரையில் சித்தர்கள்
  • சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை
  • அத்ரி மலை யாத்திரை
  • தோரணமலை யாத்திரை
  • அருள்தரும் அதிசயச் சித்தர்கள்
ஜமீன் வரலாறுகள்
  • நெல்லை ஜமீன்கள்
  • குளத்தூர் ஜமீன் கதை
  • சேத்தூர் ஜமீன் கதை
  • சிங்கம்பட்டி ஜமீன் கதை
  • தேரிக்காட்டு ஜமீன்தார்கள்
  • தென்னாட்டு ஜமீன்கள்
  • கரிசல் காட்டு ஜமீன்தார்கள் வரலாறு
தாமிரபரணி பற்றிய நூல்கள்
மலை யாத்திரை பற்றிய நூல்கள்
தாமிரபரணி பற்றிய நூல்கள்
  • தாமிரபரணி கரையினிலே
  • தலைத்தாமிரபரணி
  • பொதிகை மலை அற்புதங்கள்
  • தரணிபோற்றும் பரணி நதி
  • நவீன தாமிரபரணி மகாத்மியம் ( வீடியோ டிஜிட்டல் நூல்)
நாடகங்கள்
  • முடிச்சு மேலே முடிச்சு
  • முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள்
நாவல்கள்
  • என்னுயிரே விட்டுக் கொடு
  • கொன்றால் தான் விடியும்
  • முத்துகிளி
சிறுகதைத் தொகுப்புகள்
  • கண்ணாடி மாப்பிள்ளை
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
கட்டுரை நூல்கள்
  • ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
  • ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
  • பொருநை பூக்கள்
  • என் கிராமத்தின் கதை
  • நம்ம ஊரு அதிசயம்
  • பனி மலையும் அபூர்வ கண்டமும்
  • நெல்லை துறைமுகங்கள்
  • நெல்லை வரலாற்று சுவடுகள்
  • படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு
  • எனது பயணங்கள்
  • தென் பாண்டி சீமையிலே (இரண்டு பாகங்கள்)

உசாத்துணை


✅Finalised Page