under review

முடத்திருமாறன்

From Tamil Wiki

முடத்திருமாறன் சங்க காலப் புலவர். பாண்டிய மன்னர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

குமரி ஆற்றுக்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் இடைப்பட்ட பாண்டிய நாட்டு நிலப்பகுதியை கபாடபுரத்தை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களில் ஒருவர். கபாடபுரத்திலிருந்த இடைச்சங்கத்தை வளர்த்த ஐம்பத்தியொன்பது மன்னர்களில் இறுதி மன்னர் முடத்திருமாறன். இவர் காலத்தில் பெருங்கடல்கோள் நிகழ்ந்தது. இதில் பாண்டிய நாட்டின் நிலப்பரப்பும், கபாடபுரமும் அழிந்தது. அதன்பின் சில காலம் மணலூரிலும், கூடன்மாவிலும் புலவர்களோடு வாழ்ந்ததாக தமிழறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

புலவர்களை ஆதரித்த மன்னர். இவர் பாடிய பாடல்கள் நற்றிணையில் (105, 228) உள்ளன. இதில் பாலை, குறிஞ்சி நிலத்தின் பண்புகளைப் பற்றி பாடினார். குட்டுவனையும், அவரின் குடைவரையிலுள்ள சுனையையும் வாழ்த்திப் பாடினார்.

பாடல் நடை

  • நற்றிணை 105

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்,
கடு நடை யானை கன்றொடு வருந்த,
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண்
பட்டனை, வாழிய- நெஞ்சே!- குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.

  • நற்றிணை 228

என் எனப்படுமோ- தோழி!- மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான்கொல்லோ தானே- கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Oct-2023, 00:36:27 IST