மா. பாலசுப்ரமணிய முதலியார்
- பாலசுப்பிரமணியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)
மா. பாலசுப்ரமணிய முதலியார் (மார்ச் 8, 1899 - மார்ச் 14, 1958) கட்டுரையாளர், உரைநடையாசிரியர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், அரசியலாளர், சுதந்திரப் போராட்டவீரர் என பன்முகம் கொண்டவர். சைவ சித்தாந்த நூல்களை எளிதில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தவர்.
பிறப்பு, கல்வி
சென்னை திருமயிலையில் மார்ச் 8, 1899-ல் மாசிலாமணி முதலியாருக்கும், அன்னம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திருமயிலை கபாலீஸ்வரரின் அருளால் பிறந்ததால் பாலசுப்ரமணியன் என்ற பெயர் இடப்பட்டது. தாயாரின் பாட்டி ஞானக்கண் என்று அழைத்தார்.
இவர் இளமைக்கல்வியை பெங்களூர், நீலகிரி, உதகமண்டலத்தில் படித்தார். 1909-ல் சென்னை பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் இரண்டாவது பாரம் படித்தார். 1911-ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வென்றார். தமிழ் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்காக பரிசு பெற்றார். 1917-ல் பி.எல் தேர்ச்சி பெற்றார். பின் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரிடம் வக்கீல் தொழில் பயின்றார்.
தனிவாழ்க்கை
இருபத்தியைந்து வருடங்கள் வழக்கறிஞராக தொழில் பயின்றார். 1926-ல் பார்வதியம்மாளை மணந்தார். 1921-ல் சைவசமாஜத்தின் தொடர்பு ஏற்பட்டது. அதன் செயலாளராக இருபத்தியிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். சைவ வைணவக் கோயில்களுக்கு அறநிலைக்காவலராகப் பணியாற்றினார். கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு பத்தாண்டுகள் அறங்காவலராகப் பணியாற்றினார். திருவிடந்தை நித்யகல்யாணிப் பெருமாள் கோயிலுக்கு ஐந்தாண்டுகள் அறங்காவலராகப் பணியாற்றினார்.
அரசியல்
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். ஜனவரி 8, 1930 முதல் சட்டசபை உறுப்பினராக பணி புரிந்தார். உப்புச் சத்தியாகிரகத்தில் அரசின் கொடுமைகளை எடுத்துச் சொல்லும் தரப்பாக சென்னை மாகாண சபை ஏற்படுத்திய மூவர் குழுவில் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சித்தாந்தம் மாத இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். சங்க விழாக்கள் பல நிகழ்த்தி சொற்பொழிவாற்றினார். தேவாரம், திருவாசகம், சீவக சிந்தாமணி போன்ற நூல்களை அச்சிட்டார். 1950-ல் காசிப்பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் சைவசித்தாந்த சொற்பொழிவுகள் செய்தார். திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல நூல்களுக்கு உரை எழுதினார். சித்தாந்தம் இதழில் பல கட்டுரைகள் எழுதினார்.
மறைவு
மார்ச் 14, 1958-ல் தன் அறுபத்தியிரண்டாவது வயதில் காலமானார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Oct-2023, 12:33:21 IST