under review

மா. இளங்கண்ணன்

From Tamil Wiki
மா இளங்கண்ணன் (2017)

மா.இளங்கண்ணன் (பிறப்பு: செப்டம்பர் 18, 1938) சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தனித்தமிழ் ஆர்வலரான இவர் ஐம்பது ஆண்டு காலம் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். கதைகள், நாவல்கள் என பல தளங்களில் எழுதி சிங்கப்பூர் தமிழிலக்கியத்திற்கு அடித்தளம் அமைத்த முன்னோடி தமிழ்ப்படைப்பாளி.

பிறப்பு, கல்வி

ஒருங்கிணைந்த மலாயாவில் 18 செப்டெம்பர் 1938-ல் பிறந்த இளங்கண்ணனின் இயற்பெயர் மா.பாலகிருஷ்ணன். தந்தை பெயர் மாயாண்டியம்பலம், தாயார் பெயர் பொன்னம்மாள். உடன் பிறந்தவர்கள் கண்ணம்மா, ஆறுமுகம். சிங்கப்பூர் குடிமகன்.

உலகப்போர் மூண்டபோது இரண்டு வயதாக இருந்த மா.இளங்கண்ணன் தாய் வழிப் பாட்டி, பாட்டன் நாகம்மாள், முத்தையா மற்றும் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் சுண்ணாம்பிருப்பு என்ற ஊருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு, தந்தை வழி பாட்டன், பாட்டி ஆறுமுகம், கருப்பாயிடமும் தாய்வழி பாட்டியிடமும் தமிழைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இளங்கண்ணன் மலாயாவுக்குத் திரும்பினார். சிங்கப்பூர் குடிமகனாகி கலைமகள் தமிழ்ப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். தொடக்க கால சிங்கப்பூரின் அரசியல் நிலையின்மையால் அவரது குடும்பம் பெரும்பாலும் வாடகை இல்லங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. இந்த நகர்வுகள் அவரது பள்ளிப்படிப்பை சீர்குலைத்ததால் இளங்கண்ணன் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

தனிவாழ்க்கை

மா.இளங்கண்ணனின் மனைவி அமராவதி. நான்கு பிள்ளைகள், ஆறு பேரப்பிள்ளைகள். இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறார்.

மா இளங்கண்ணன் இளவயதில்

மா.இளங்கண்ணன் 1957 முதல் 1967 வரையில் சிங்கப்பூரில் தளம் அமைத்திருந்த பிரிட்டிஷ் இராணுவப் படையில் சரக்குக் கிடங்குக் காப்பாளாராகப் பணியாற்றினார். பின்னர் அன்றைய கலாச்சார அமைச்சின் (இன்றைய தொடர்பு, தகவல் அமைச்சு) மொழிபெயர்ப்பு துறையில் தமிழ்த் தட்டச்சராக இணைந்தார். ஓய்வுபெறும் வரை, 1997 வரை 30 ஆண்டுகள் அப்பணியிலேயே சேவை செய்தார்.

எழுத்துப்பணி

மா.இளங்கண்ணன் 1964-ம் ஆண்டில் தொண்டன் என்ற இலக்கிய இதழின் ஆசிரியரானார், 1966-ம் ஆண்டில் முதல் சிறுகதை 'தீவலி' தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் அதிகம் ஈடுபாடுகாட்டி வந்த இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இளங்கண்ணன் அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்களை வெளியிட்டுள்ளார். இளங்கண்ணன் எழுதிய சிறுகதைகள் வானொலியில் ஒளிபரப்பாகியுள்ளன. ஆங்கிலம், மலாய், சீனம், துருக்கி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மா.இளங்கண்ணன் கதைகள் சிங்கப்பூர் பள்ளிகளில் துணைப் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. வானொலி, தொலைக்காட்சி நாடகங்களாக்கப்பட்டுள்ளன.

1975இல் மா இளங்கண்ணனின் முதல் நூலாக வழிபிறந்தது (சிறுகதைத் தொகுப்பு) வெளியீட்டு விழாவின்போது.

மா.இளங்கண்ணன் படைப்புகள் 'சிங்கப்பூர் இலக்கியக் களச் சிறுகதைகள் 1977, 1981 சிங்கப்பூர் புனைகதைத் தொகுப்பு தொகுதிகள் II, IIa & III - ஆசியான் இலக்கியத் தொகுப்பு (1990), சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் (1992), நான்கு குரல்கள்-நான்கு மொழி வாசிப்பு (1995), பாலத்தின் மீது மனிதர்கள் (ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும்) - தென் கிழக்கு ஆசிய எழுத்து விருது பெற்றவர்களின் ஆசியான் சிறுகதைகள், தேவான் பஹாசாடான் புஸ்தகா, மலேசிய வெளியீடு (2001), கண்ணில் தெரியுது வானம், அனைத்துலக எழுத்துக்களின் தொகுப்பு, வித்தியா வெளியீடு (லண்டன் 2001), ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன. இளங்கண்ணனின் சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் முரசு, தமிழ் நேசன், (மலேசியா), தமிழ் மலர், ஆனந்த விகடன் , மஞ்சரி , சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மன்ற வெளியீடான சிங்கா (SINGA) இதழிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர்த் தமிழ் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் இவர் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மா.இளங்கண்ணன் படைப்புகள் சிங்கப்பூரிலும் தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் உள்ள பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

அமைப்புப்பணிகள்

1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான மா. மா.இளங்கண்ணன், கழகத்தின் முதல் செயலவை உறுப்பினராக ஈராண்டுகள் பங்காற்றினார். 1975-ல் சிங்கப்பூர் இலக்கியக் களத்தை அமைத்த பத்து எழுத்தாளர்களுள் இளங்கண்ணனும் ஒருவர். சிங்கப்பூர் இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூர் எழுத்தாளர் விழாக்களில் பங்கேற்றிருக்கும் இளங்கண்ணன், படைப்பிலக்கியம் குறித்த பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

2008ஆம் ஆண்டு மா இளங்கண்ணனின் ஆறு நூல்களை சிங்கப்பூரின் அன்றைய அதிபர் எஸ்.ஆர்.நாதன் (வலது) வெளியிட்டார்
சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசார பதக்கத்தை 2005ஆம் ஆண்டு பெற்ற மா.இளங்கண்ணன் (இடமிருந்து இரண்டாவது) அந்த ஆண்டில் கலாசார பதக்கம் பெற்ற ஏனைய படைப்பாளர்களுடன்.
மா இளங்கண்ணன். படம்: தேசிய கலைகள் மன்றம்.

இலக்கிய இடம்

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் முக்கியமானவராகக் கருதப்படுபவர். பரந்த வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கும் இளங்கண்ணன், பல கலாசாரப், பல்லினச் சிங்கப்பூர்ச் சூழலில் தமிழர் வாழ்வின் அனுபவத்தை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தும் எழுத்தாளர். பிரிட்டிஷ் காலனித்துவம் ஜப்பானிய ஆதிக்க காலம் முதல் தற்காலச் சூழல்வரை சிங்கப்பூர்த் தமிழர்களது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை இவரது படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. 1970-களில் நாவல்களில் கவனம் செலுத்திய எழுத்தாளர். இவரது நாவல்கள் சிங்கப்பூரில் வாழும் அடித்தள மக்களின் பலவகைப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கின்றன.

"உளப்பூர்வமான லட்சியக் கனவுடன் முன்வைக்கப்பட்ட சீர்திருத்த குரல் என்றவகையில், மா.இளங்கண்ணன் சிங்கை இலக்கியத்தின் முக்கியமான முன்னோடி" என்று இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

விருதுகள்

  • தாய்லாந்தின் தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருது (1982)
  • கலாசார அமைச்சின் சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசு (1983, 1984)
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது (1999)
  • சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் சிங்கப்பூர் இலக்கிய விருது - தூண்டில் மீன் சிறுகதைத் தொகுப்பு (2004)
  • சிங்கப்பூர் அரசாங்கத்தின் கலை, இலக்கிய விருது கலாசாரப் பதக்கம் (2005)
  • கரிகலன் விருது, முஸ்தபா அறக்கட்டளை வழங்கியது (2013)

இளங்கண்ணன், தென் கிழக்காசிய வட்டாரத்தின் மதிப்புமிக்க தென் கிழக்கு ஆசிய எழுத்து விருதை 1982-ல் (SEA Write Award) பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்..

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • வழி பிறந்தது (1975)
  • குங்குமக் கன்னத்தில் (1977)
  • கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன (1978)
  • தூண்டில் மீன் (2001)
  • சிங்கை மா இளங்கண்ணனின் சிறுகதைகள் (2006)
நாவல்கள்
  • அலைகள் (1976)
  • வைகறைப் பூக்கள் (1990, இப்படைப்பு 2012-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது)
  • நினைவுகளின் கோலங்கள் (1993)
  • பொருத்தம், கன்னிகாதானம், எங்கே போய்விடும் காலம்? (2006)
  • குருவிக்கோட்டம் (2011)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:47 IST