under review

மா.திருநாவுக்கரசு

From Tamil Wiki

மா.திருநாவுக்கரசு (பிறப்பு-10-10-1932) நவீன காலத்தில் சிற்றிலக்கியங்கள் இயற்றி அம்மரபை உயிர்ப்புடன் வைத்திருக்கும் புலவர். திருமுறை போன்ற மரபிலக்கியங்களை சொல்லித்தருவது, அப்பர் வள்ளுவர் போன்ற மரபிலக்கிய சான்றோர் புகழ் பரப்புவது ஆகிய செயல்பாடுகளில் முனைப்புடன் இருக்கிறார்

பிறப்பு,கல்வி

மா. திருநாவுக்கரசு தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டையில் மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக அக்டோபர் 10, 1932-ல் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றார்.

தனி வாழ்க்கை

துணைவியார் சுகந்தம் அம்மையார். இவர்களுக்கு இரு மகன்களும் மூன்று மகள்களும். அரசுப் பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியராக 32- ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்து ஓய்வு பெற்றார்.

இலக்கியப் பணி

மா.திருநாவுக்கரசு சிற்றிலக்கியங்களின் மீதுள்ள புலமையாலும், ஆர்வத்தாலும் தற்காலத் தமிழறிஞர்களை பாடுபொருளாகக் கொண்ட பல சிற்றிலக்கியங்களைப் படைத்திருக்கிறார். குடந்தை. ப. சுந்தரேசனாரின் மீது கொண்டிருந்த அன்பும் பற்றும் காரணமாக இவர் உருவாக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் அன்னம் விடு தூதுஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.

இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன, இவற்றின் மீது ஆய்வுகள் நடந்துள்ளன. தமிழாசிரியர் மற்றும் திருமழபாடி தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். திருமழபாடி ஆலயத்தில் திருமுறை வகுப்புகள் நடத்தினார்.

அப்பர் அருள்நெறிக் கழகத்தின் வாயிலாக 44- கிலோ எடையுள்ள அப்பரின் ஐம்பொன் சிலையை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தார். திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700- கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தார்.

படைப்புகள்

  • பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனார் அன்னம்விடுதுதூது(1991)
  • மருத்துவ வள்ளல் விசுவநாதம் கொண்டல்விடு தூது (1998)
  • திருமகள் மலர்விடு தூது(1994)
  • நல்லாசிரியர் இரத்தினசபாபதியார் சங்குவிடு தூது(1997)
  • திருப்பூசை செல்வர் மூக்கப்பிள்ளை சந்தனவிடு தூது(2003)
  • அருள்மிகு பழநியப்பர் பொன்விடு தூது
  • அருள்மிகு அழகம்மை பிள்ளைத்தமிழ்(2004)
  • பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ்(2003)
  • கப்பலோட்டிய தமிழன் பிள்ளைத் தமிழ்(அச்சில்)
  • பெருந்தலைவர் காமராசர் மயில்விடு தூது
  • நேரு மாமா பாடல்கள்
  • பழங்கதைகளும் புதிய பாடல்களும்
  • முத்துக்குமார் இலக்கண வினா-விடை(1991)

பரிசுகள், விருதுகள்

  • தூதிலக்கியத் தோன்றல்(1997) - அரியலூர் மணிமன்றம்
  • மரபுக்கவிமணி -திருத்தவத்துறை அறநெறிக் கழகம் (1989)
  • புலவர் மாமணி-திருவையாறு ஔவைக்கோட்டம் (2009)
  • சிற்றிலக்கியச் செல்வர்-குடந்தை புனிதர் பேரவை (2008)
  • சைவத் தமிழறிஞர் -திருச்சிராப்பள்ளி திருமுறை மன்றம்
  • சிவநெறி வித்தகர்-சூரியனார் கோயில் ஆதீனம் (2012)

உசாத்துணை


✅Finalised Page