under review

மாருதி (ஓவியர்)

From Tamil Wiki
ஓவியர் மாருதி

ஓவியர் மாருதி (வி. ரங்கநாதன்) (ஆகஸ்ட் 28, 1938 - ஜூலை 27, 2023) ஓவியர். இதழ்களில், புத்தகங்களில், காமிக்ஸ்களில் வரைந்தார். மாநாட்டு மலர்கள் உள்படப் பல சிறப்பு மலர்களில் பங்களித்தார். ‘வீர மங்கை வேலு நாச்சியார்' நாடகம், ’உளியின் ஓசை', ‘பெண்சிங்கம்’ போன்ற திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

வி. ரங்கநாதன் என்னும் இயற்பெயரை உடைய மாருதி, ஆகஸ்ட் 28, 1938 அன்று, புதுக்கோட்டையில், டி.வெங்கோப ராவ் - பத்மாவதி பாய் இணையருக்குப் பிறந்தார். புதுகோட்டையில் குலபதி பாலையா பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இடைநிலை வகுப்பு படித்தார். ஓவிய ஆர்வத்தால் இடை நின்றார்.

தனி வாழ்க்கை

மாருதியின் மனைவி பெயர் விமலா. மகள்கள் சுபாஷிணி, சுஹாசினி.

மாருதியின் ஓவியம்
தனது ஓவியங்களுடன் மாருதி (படம் நன்றி: தென்றல் இதழ், வட அமெரிக்கா)

ஓவிய வாழ்க்கை

தொடக்கம்

மாருதியின் தந்தை பள்ளி ஆசிரியர். அவர், வரலக்ஷ்மி விரதத்தின் போது, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கலசத்தில் லக்ஷ்மி முகத்தைப் படமாக வரைந்து தருவார். அதைப் பார்த்து ஓவிய ஆர்வமுற்றார் மாருதி. சுவரில், வீட்டின் தரையில் பல ஓவியங்களை வரைந்தார். பின் நோட்டுப் புத்தகங்களில் வரைந்தார். விகடன், கல்கியில் வெளியான சில்பி, கோபுலு, மணியம் படங்களைப் பார்த்து அதை அப்படியே வரைந்து ஓவியப் பயிற்சி பெற்றார்.

சென்னையில் ஓவிய வாழ்க்கை

ஓவிய ஆர்வத்தால் மாருதி சென்னைக்கு வந்தார். மைலாப்பூரில் ஒரு திரைப்பட விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினார். ஓவிய நுணுக்கங்களைக் கற்றார். பேனர் ஆர்டிஸ்ட், வரைகலைஞர் எனப் பல பணிகளைச் செய்து அனுபவம் பெற்றார். போர்ட்ரெய்ட், ஆயில் பெயிண்டிங் கற்றார். ஓவியர் மாதவன், ஓவியர் நடராஜன் இருவரையும் அணுகி, அவர்கள் வரையும் நுணுக்கங்களைப் பார்த்து ஓவியம் கற்றார்.

பத்திரிகை ஓவியர்

பத்திரிகைகளுக்கு வரைவதில் விருப்பம் கொண்டிருந்த மாருதி, குமுதம் இதழாசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையை அணுகி வாய்ப்புக் கேட்டார். மாருதியின் திறமையை அறிந்த எஸ்.ஏ.பி. அவருக்கு வாய்ப்பளித்தார். அதுவரை வி. ரங்கநாதன் என்ற பெயரில் வரைந்து கொண்டிருந்தவர், ‘மாருதி’ என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டு வரைந்தார். மாருதியின் முதல் பத்திரிகை ஓவியம், ஏப்ரல் 20, 1959 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியானது. தனக்கென ஒரு தனிப்பாணியை ஏற்படுத்திக் கொண்டு வரைந்தார். குண்டு முகம், புசு புசு கன்னங்கள், சுருள் முடிகள், அழகான பெரியவிழிகள் என உயிரோட்டம் உள்ளதாக மாருதியின் ஓவியங்கள் அமைந்தன.

ஓவியப் பங்களிப்புகள்

குமுதம், விகடன் தொடங்கி கல்கி, சுதேசமித்திரன், அமுதசுரபி, தீபம், தினமணி என மாருதி வரையாத வெகுஜன இதழ்களே இல்லை என்னுமளவிற்குப் பல இதழ்களில் வரைந்தார். காமிக்ஸ் இதழ்கள், நூல்களின் அட்டைப்படங்கள் எனப் பல பங்களிப்புகளைத் தந்தார். தீபாவளி மலர், பொங்கல் மலரின் சிறப்பு இதழ்களுக்கு இவர வரைந்த ஓவியங்கள் வாசக வரவேற்பைப் பெற்றன.

ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, லக்ஷ்மி, அனுராதா ரமணன், வாஸந்தி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, பாலகுமாரன் எனப் பலரது படைப்புகளுக்கு மாருதி ஓவியம் வரைந்தார். தனிநபர்களுக்கும் அவர்கள் விரும்பும் நபர்களின் போர்ட்ரெய்ட் ஓவியங்களை வரைந்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பால் வெளிநாடுகளுக்குப் பல போர்ட்ரெயிட் ஓவியங்களை வரைந்தனுப்பினார். ‘கண்மணி’ மாதமிருமுறை இதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அட்டைப்பட ஓவியம் வரைந்தார்.

ராஜராஜன் 1000 விழா மலரில் மாருதியின் ஓவியங்கள் இடம் பெற்றன. செம்மொழி மாநாட்டு விழா மலரில் பங்களித்துள்ளார். செம்மொழி மையத்திற்காகப் பல ஓவியங்களை வரைந்துள்ளார்.

திரைப்படம்/நாடகம்

  • மாருதி, ‘வீர மங்கை வேலு நாச்சியார்’ என்ற ஓரங்க நாடகத்திற்கு ஆடை வடிவமைப்புச் செய்தார்.
  • மாருதி, ‘உளியின் ஓசை’ திரைப்படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்தார்.
  • மாருதி, ‘பெண் சிங்கம்‘ படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.

விருதுகள்

  • புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ஓவியக் கலைமாமணி விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • தூரிகை வேந்தர் விருது

மறைவு

ஓவியர் மாருதி, ஜூலை 27, 2023 அன்று, தனது 85-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

ஓவியக் கல்லூரிக்குச் சென்று பயிலாமல், பாரம்பரிய ஓவியர்களிடம் ஓவியம் கற்றவர் மாருதி. ஓவியர் நடராஜன், ஓவியர் மாதவன் ஆகியோரைத் தனக்கு முன் மாதிரியாகக் கொண்டு வரைந்தார். தூரிகையை மட்டுமே கொண்டு அனைத்து ஓவியங்களையும் வரைந்தார். ‘மாருதியின் ஓவியம் இது’ என ஒருவர் பார்த்தவுடனேயே சொல்லுமளவுக்கு தனிப் பாணியினைக் கையாண்டார். போட்டோ பினிஷிங்கில் அமைந்த மாருதியின் ஓவியங்கள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. பெண்களின் தத்ரூப ஓவியத்தைச் சிறப்பாக வரைந்தவராக அறியப்பட்டார். ‘மாருதியின் ஓவியங்கள் தனித்துவமானவை’ என்பது பல பிரபல ஓவியர்களின் கருத்து.

உசாத்துணை


✅Finalised Page