under review

மாதை வேங்கடேசேந்திரன் பணவிடு தூது

From Tamil Wiki
மாதை வேங்கடேசேந்திரன் பணவிடு தூது

தூது நூல்களுள் ஒன்று, பணவிடு தூது. வறுமையில் வாழும் புலவர்கள் தங்களை ஆதரிக்க வேண்டி வள்ளல்கள், புரவலர்கள், அரசர்களிடம் பணத்தைத் தூதாக அனுப்புவதே பண விடு தூது. மாதை வேங்கடேசேந்திரனிடம் பரிசல் பெற்ற புலவர் ஒருவர், தன் மனம் கவர்ந்த கணிகை ஒருத்தியிடம் பணத்தைத் தூதாக விடுப்பதே மாதை வேங்கடேசேந்திரன் பண விடு தூது. இதன் காலம் பொ.யு. 16- ஆம் நூற்றாண்டு.

நூலின் தோற்றம்

சோழ நாட்டின் தஞ்சாவூரில் உள்ள மாத்தூர் என்றும் ஆமாத்தூர் என்றும் மாதை என்றும் அழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்தவர் திருவேங்கடநாதையன். இவர் திருமலை நாயக்கரின் கீழ் சிற்றரசராக தஞ்சாவூர்ப் பகுதியை ஆண்டு வந்தார். அவரது புதல்வர்களுள் ஒருவரே மாதை வேங்கடேசேந்திரன். இவர், அரங்ககிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கரின் மந்திரியாகவும் , அவர்களின் ஆட்சிக்குட்பட்ட திருநெல்வேலிக்கு ராஜப் பிரதானியாகவும் இருந்தார். அவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெயர் அறிய இயலாத புலவர் ஒருவரால் இயற்றப்பட்டதே மாதை வேங்கடேசேந்திரன் பணவிடு தூது. இதன் காலம் பொ.யு. 16-ம் நூற்றாண்டு.

நூல் கூறும் கதை

திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்த வேங்கடேசேந்திரனின் ஆட்சித் திறனைக் கண்டு வியந்த புலவர் ஒருவர், வேங்கடேசனைப் பாராட்டி, அவர்மீது தாம் இயற்றிய வண்ணத்தை அரங்கேற்றினார். அதனைக் கேட்டு மகிழ்ந்த வேங்கடேசன், அவருக்குப் பல பரிசுகளைத் தந்து, பண உதவி செய்தார்.

அதனைப் பெற்றுக்கொண்ட புலவர் நெல்லையப்பர் கோயில் சென்றார். நெல்லையப்பருக்கும் காந்திமதி தேவிக்கும் நிகழ்ந்த திருக்கல்யாண உற்சவத்தைக் கண்டார். அங்கே தட்டேந்தி நின்ற குங்குமப் பூங்கோதை என்னுக் கணிகையைக் கண்டு காமம் கொண்டார். பூங்கோதையிடம் தனது காதலைச் சொல்ல, தான் பெற்ற செல்வப் பொருட்களை விளித்து, அவளை அழைத்து வருமாறு தூது விடுக்கிறார். இதுவே மாதை வேங்கடேசேந்திரன் பண விடு தூது நூலின் கதை.

நூலின் அமைப்பு

மாதை வேங்கடேசேந்திரன் பண விடு தூது நூல் கலிவெண்பாக்களால் பாடப்பட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் 372 பாடல்கள் உள்ளன. இவற்றில் 99-ஆவது பாடல் தொடங்கி மீதி நூல் முழுவதும் தூதுப் பொருளான பணத்தின் பல்வேறு ஆற்றல்களை, பெருமையை, சிறப்பை, உயர்வைப் பேசுவதாக அமைந்துள்ளது. சிலேடை நயங்களும், உவமைச் சிறப்புகளும், சொற்சுவையும் கொண்டதாக, இயல்பு நவிற்சியாக இந்நூல் உள்ளது.

நூலின் மூலம் அறிய வரும் செய்திகள்

வேங்கடேசேந்திரனின் ஆட்சிச் சிறப்பைப் பல பாடல்களில் கூறியிருக்கும் புலவர், பின்னர் பணத்தின் சிறப்பை விரிவாகக் கூறியுள்ளார்.

பாமாலை பெற்ற விலைக்குப் பதின் மடங்காச்
சீமான் கொடுத்த திரவியமே! - நாமம்
பணமே எனப் படைத்த பாக்கியவா னே! வங்
கணமே!என் ஆருயிரே! கண்ணே! - குணநிதியே

- என்று விளித்து பலவாறாகப் பணத்தின் பெருமையைக் குறிப்பிட்டுள்ளார்.

கணக்கிலே துண்டுவிழும் பகுதியை நிரப்புவதற்காக, கணக்கப்பிள்ளைமார்கள் செய்யும் கள்ளக் கணக்கு விவகாரங்களை பின்வரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அட்டவணைச் சீட்டுப் பதிவைத் திரும்பக் கூட்டித் துரைமுன்
கேட்டுக் கழித்ததெல்லாம் கிண்டிப் பார்த்து - ஏட்டுக்கு
இலக்காத் தொகை இட்டெழுதியே நெஞ்சைக்
கலக்காத வண்ணங் கலக்கி - அலக்கழிக்கும்
பிள்ளைமார் சற்றே உன் பேர் கேட்குமுன்னரந்தக்
கொள்ளை யெல்லாம் தீராதோ கோமானே!

பணத்திற்கு வழங்கிய பழைய மரபுப் பெயர்களை கீழ்காணும் பாடலில் விரிவாகப் புலவர் விளக்கியுள்ளார்.

பல்லங்கிக் காசு, பழையசம்பங் கிக்காசு,
புல்லவட்டக் காசு, புலக்காசும் - அல்லாமல்
சந்தமிக் காசு, தருசுலுத்தான் காசுமுதல்
அந்தமோடு ஆளிட்டான்கா சென்றும் - செந்தீக்கு
உருகுபவ ளக்காட்டில் உள்ள வராகன்,
வருபிரதி புண்ய வராகன் - பெருகுமொரு
சென்னபட்ட னத்தான், சிவராயன், மம்மதுகான்
மன்னு நிசானி வராகனுடன்,-சொன்னகிரிச்
சீரங்க ராயனெனும் செம்பொன் வராகன்...”

- என்று தொடங்கி,

குதிரைக் குளம்பன், கொங்குமுளை, குணுங்கலூர் வெட்டு, வெங்கன் அழகாத்திரி வெட்டு, தூற்றுக்குடியான் வெட்டு, சுழிமுல்லா வெட்டு, புது வெட்டு, சோழியன் வெட்டு, ராமச்சந்திரன் வெட்டு, எம்பெருமான் வெட்டு, சிகாபதியான் வெட்டு, வாழ்குருகன் வெட்டு, இராமையன் வெட்டு, கொப்பரை வெட்டு, குறுநண்டுக் கால் வெட்டு, மெய்ப்புள காரேட்டி வெட்டு, மைக்காட்டு வெட்டு, மத்தகிரிக் கண்டிராயன் திரு, கோட்டு மின்னல், மாற்றுக் குறைச்சல், வெந்துருகல், கோழி விழுங்கல், இருப்பூறல், புதுமங்கலக் குடியான் செப்பாடல், புள்ளறுதல், வேவல், புழுங்கல், வெள்ளியிற் பொன்பூச்சு, பூச்சைய நாய்க்கன் பணம், தேய்ச்ச உரை, முழுச்செம்பு, மூர்த்தி செட்டி வெட்டு, மயிலாப்பூர் வெட்டு, ஆண்டான் வெட்டு, வீரராயன் பணம், ஓசைப் பணம், கிச்சம்மாள் வெட்டு, சங்கர செட்டிபுது மின்னல், நாகப்பன் வெட்டு, நஞ்சய்யன் வெட்டு, விசுவநாத செட்டி வெட்டு, சின்ன ராவுத்தன் வெட்டு, கோபாலச் சக்கரம், உளூந்தூர்ச் சக்கரம், திருவையாற்றுச்சக்கரம், திருச்சிராப்பள்ளிச் சிறுசக்கரம் - என்று, பணம் பல மரபுப் பெயர்களைப் பெற்று வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தின் தன்மை மற்றும் இயல்புகள் பற்றிக் கூறும்போது, பணம், மேருமலையை அணுவாகவும், அணுவை மேருமலை யாகவும் செய்யும்; உறவிலே பகையை உண்டாக்கும்; பகையிலே உறவை உண்டாக்கும். காட்டை நாடாக்கும்; நாட்டைக் காடாக்கும். தேடுங்கால் வாராது; வலியவரும்; வந்தாலும் தங்காது. ஒருவன் பணத்தைப் புதைத்து இறந்துபோக, ஆடு முதலியன பலிகொடுத்து அதை ஒருவன் தோண்டிப் பார்த்தால், கல்லாகவும் கரியாகவும் காட்சி தரும். - என்று குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

பண விடு தூதின் மூலம் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜப் பிரதானிகளின் வாழ்க்கை முறை, அவர்களுள் ஒருவரான மாதை வேங்கடேசேந்திரன் செய்த நற்பணிகள் போன்றவற்றையும், அந்தக் காலத்தில் எத்தனை விதமான காசுகள் இருந்தன, அவற்றின் பெயர்கள், பணத்தின் மரபுப் பெயர்கள், அந்தப் பணத்தை புழக்கத்தில் விட்டவர் பெயர்கள், கணக்காளர்களாகப் பணியாற்றியவர்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிய முடிகிறது. பணம் என்பதை பற்றிப் பலவாறாக விரித்துக் கூறும் முதன்மை நூலாக ‘மாதை வேங்கடேசேந்திரன் பணவிடு தூது' நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page