under review

மாகபுராண அம்மானை

From Tamil Wiki
மாக புராண அம்மானை

மாகபுராண அம்மானை (மாக ஸ்நான புராண அம்மானை) (பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டு) அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று. தமிழ் விருத்தப்பாவில் இயற்றப்பட்ட இந்நூலில் 1412 பாடல்கள் உள்ளன. அதிவீரராம பாண்டியன் இயற்றிய மாகபுராணத்தை அடிப்படையாக வைத்து இந்நூல் இயற்றப்பட்டது. இதனை இயற்றியவர் வீரபத்திரனார்.

நூல் தோற்றம்

மாக புராணம் அதிவீரராம பாண்டியனால் பாடப்பட்டது என்றும் வரதுங்க பாண்டியனால் பாடப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இந்த மாக புராணத்திற்கு மீனாட்சி நாதர் என்பவர் உரை எழுதினார். அந்த உரை நூலை அடிப்படையாக வைத்து, அம்மானை இலக்கியமாக வீரபத்திரனார் இயற்றிய நூலே, மாகபுராண அம்மானை.

பிரசுரம், வெளியீடு

மாகபுராண அம்மானை இலக்கிய நூல், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தால், 1956-ல் பதிப்பிக்கப்பட்டது. விரிவான ஆய்வு மற்றும் விளக்கக் குறிப்புக்களுடன் இந்நூலைப் பதிப்பித்தவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம்.

ஆசிரியர் குறிப்பு

மாகபுராண அம்மானை நூலை இயற்றியவர் வீரபத்திரனார். இவருடைய தந்தை முத்து வீரப்பனார். வீரபத்திரனார் தனது ஊர் மணவை எனக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய ஆசிரியர் மீனாட்சி நாதர் எழுதிய மாக புராண உரை நூலை அடிப்படையாக வைத்தே மாகபுராண அம்மானை நூலை வீரப்பனார் இயற்றினார்.

நூல் அமைப்பு

விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட இந்நூலில் 1412 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.

முதல் பகுதி

முதல் பகுதியில் கீழ்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

  • பாயிரம்
  • திலீபதி மகாராசன் வேட்டை
  • விஞ்சையன் கதை
  • மிருகசிங்கன் கதை
  • பெண்கள் கதை
  • சுவாதத்தை கதை
  • சுவாதத்தை உயிர் பெற்ற கதை
  • புண்ணிய கதை
  • பாவ கதை
  • புக்கரன் கதை
  • சம்பு கதை
  • கிருஷ்ணன் கதை
  • மிருகசிங்கன் கலியாணம்
  • நித்திய கருமம்
  • மிருகண்டன் கதை
  • மார்க்கண்டு கதை
  • புண்ணிய தீர்த்த கதை
  • சுவாதன் கதை
  • வீமன் ஏகாதேசி கதை
  • வேடன் கதை
  • சிவனுடன் எமன் வழக்காடு கதை
  • சிவன் ராத்திரி மான்மியம்
இரண்டாம் பகுதி

இரண்டாம் பகுதியில் கீழ்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

  • அருச்சிகை கதை (பஞ்சாட்சர மகிமை)
  • குண்டல விகண்டலன் கதை
  • காஞ்சனமாலை கதை
  • காந்திருவப் பெண்கள் கதை
  • சித்திரசேனன் கதை
  • வண்டானபட்சி கதை
  • அக்கினிபன் கதை

மாகபுராண அம்மானையில் இடைநிறுத்தங்கள், உடைந்த வாக்கியங்கள், சில இடங்களில் எழுவாயும் பயனிலையும் இயைந்து வாராமை, பல இடங்களில் காலங்காட்டுதலில் தொடர்ச்சியின்மை போன்ற போக்குகள் அமைந்துள்ளன. 'குபீர்', 'கூமுட்டை', 'பீறி', 'வக்கனை', 'அகடியம்', 'ஆக்கினை', 'கூதல்', 'தூமை', 'அபிவாதை', 'அப்படியாக் கொத்த', 'மாந்தாதி மாந்தர்', 'தெண்டனை', 'வயறு', 'வஞ்சினை', 'ஈசுபரன்', 'பார்பதி' போன்ற பல மக்கள் பேசும் பேச்சுமொழிச் சொற்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வடமொழிச் சொற்களும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. ஆயுத எழுத்து இந்நூலில் இடம்பெறவில்லை.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாசி மாதம், வடமொழியில் மாக மாதம் எனப்படும். மாசி மாதப் பௌர்ணமி நாளில் முறைப்படி நீராடுவது ‘மாக நீராடல்’ ஆகும். மாக நீராடலின் மகத்துவங்கள், மாகபுராண அம்மானை நூலில் இடம் பெற்றுள்ளன. அதன்படி, மாக நீராடுதல் என்னும் மாக ஸ்நானம் மூன்று மாதங்களில் நீராடுவதைக் குறிக்கிறது. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியிலிருந்து மார்கழி வளர்பிறை ஏகாதசிவரை நீராடுவது தேவ மாகஸ்நானம்; மார்கழி ஏகாதசி முதல் தை ஏகாதசி வரை ஆடுவது ரிஷி மாகஸ்நானம்; தை ஏகாதசி முதல் மாசி ஏகாதசி வரை ஆடுவது பிதுர் மாகஸ்நானம்.

விஞ்சையன் கதை, மிருகசிங்கன் கதை, புக்கரன் கதை எனப் பல்வேறு கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நோன்பு நோற்கும் முறை, அறம் வளர்க்கும் முறை , அன்றாட வாழ்க்கை முறை போன்றவற்றைக் கூறும் அற நூலாக இந்நூல் அமைந்துள்ளது. புண்ணிய நதிகளின் பெருமை, அவற்றில் நீராடுவதால் கிடைக்கும் பயன்கள் எனப் பல செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல்கள்

விஞ்சையனின் முற்பிறப்பு

பாங்காக முற்பிறப்பில் பாராமல் செய்தவினை
தீங்காக இப்பிறப்பில் தேடிப் பிடித்ததுகாண்
மன்னாநீ முற்பிறப்பில் வளர்மாக மாசமதில்
அன்னாளில் மாகஸ்நானம் ஆடி ஏகா தேசிதனில்
தூயவிர தமிருந்து சொல்லுந்துவா தேசிதன்னில்
தீய்மையுடன் எண்ணையிட்டுத் தீர்த்தம் நீர் ஆடின தால்
அக்கொடிய தோசம் ஆன புலிமுகமாய்
இக்குவல யத்தில் இருந்தாய் நீ இவ்வினையும்
மனது அறியாமல் வரும் பவமென் றெண்ணாமல்
உனதுவினை நின்னை அய்யோ உள்ளசத்திப் போட்டுதுகாண்
ஆனதினால் விஞ்சையனே அன்று செய்த பாவவினை
கானப் புலிமுகமாய்க் கருத்தயர்ந்தே நீவாழ்ந்தாய்
இன்ன முனக்கு வினை யகத்த ஒன்று வுண்டு
நன்னயமாய்ச் சொல்லுகிறேன் நல்விஞ்சை மன்னவனே

நீராடுதலுக்கேற்ற புண்ணிய நதிகள்

தாட்சி இல்லா இந்நீரில் தழைக்குஞ் சிலாக்கியமாய்
மாட்சியுள்ள வேதம் வழுத்தும்நதி யைக்கேளாய்
நினைத்த கருமமொடு நீள்பதவி யுங்கொடுக்கும்
கனக்கும் பிரயாகை கருது கைம்ய சாரணியமாம்

இங்கிதஞ்சேர் அவந்திநதி இனிய சரையுநதி
சிங்காரப் புண்ணியநதி சேருஞ்சிவ கங்கைநதி
வரிசைத் துவரைநதி வாழ்த்தியகார் நீலகண்டம்
பெரிய அலைகடலாம் பேசுங்குரு பூமியொடு

யமுனையொடு காஞ்சிநதி அருளான கோதாவரி
கமலமலர் துங்கபத்திரி கருதிடுங்கிட் டிணவேணி
கண்டகை பெண்ணையாறு காவேரி கொள்ளிடமாம்
மண்டலங்கள் போற்றும் வைகையாறு மெய்ப்பொருனை

வளருதிரி யம்பகமாம் மணக்குங் கிருதமாலி
தழையும் ஓங் காரநதி தாட்சியில்லாச் சோணை நதி

சிவனின் பெருமை

தேவருக்குத் தேவே சிவனே மறைமுதலே
மூவருக்கு முத்தொழிலுங் கற்பிக்கும் முன்னோனே
காவற் கடவுளே கண்மூன் றுடையோனே
யாவர்க்கு மாயா இருவினைக்கு மேலோனே

தேவர்க்குத் தேவனெனச் சிறந்து வளர்முதலே
ஓவியமா கவளரும் உற்ற மறைப்பொருளே
நம்மூர்த்தி யான நான் முகன் மால் ருத்திரனாய்
இம்மூன்று பேர்க்கும் இனிய தொழில்கொடுத்தோய்

முக்கண் ணுடையாய் மூவர்க்கு முற்பிறப்பாய்
மிக்க வுதித்தாய் வினைகள் ஒன்றும் இல்லாதாய்
இனிய பிறப்பிறப்பு இல்லாத காரணனே
தனியே முளைத்தவனே தழைக்கும் பிர பைக்கடலே

அடியார்க் கடியவனாம் அண்டமெல்லாந் தான்வளரும்
வடிவுடைய சுவாமி வரிவில்லா லேயடித்த
பார்த்தன் தனக்கு பாசுபதம் ஈந்தவரே
மாத்தில்லாத் தங்கம் மணிமேர் வளைத்தவரே

மதிப்பீடு

தமிழில் தோன்றிய முன்னோடி அம்மானை நூல்களுள் ஒன்று, மாகபுராண அம்மானை. மாகபுராணத்தின் விளக்க நூலாய் அமைந்த நூல். தவம் செய்தல், நீராடுதல், இறைவனை வழிபடுதல் போன்றவற்றின் சிறப்பு பல்வேறு கதைகள் மூலம் இந்நூலில் விரிவாய் விளக்கப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டில் வழங்கிய பேச்சுத் தமிழினை விளக்க இந்த நூல் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளதாக இந்நூலைப் பதிப்பித்த தெ.பொ.மீ. குறிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page