under review

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை

From Tamil Wiki
UM.jpg

மலாயா பல்கலைக்கழகம் மலேசியாவின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். மலேசியாவில் தமிழ்மொழிக் கல்விக்கு உரிமையையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறை விளங்குகின்றது.

மலாயா பல்கலைக்கழகத்தின் பின்னணி

1949-ம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஒரே கூட்டமைப்பாக இருந்தபோது மலாயா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. 1948-ம் ஆண்டு தொடங்கி 1958-ம் ஆண்டு வரை மலாயா பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் இயங்கி வந்தது. பின்னர், 1962-ம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகம் தனித்தனியாக நிறுவப்பட்டன. சிங்கப்பூரில் அமைந்திருந்த வளாகம் சிங்கப்பூர் பல்கலைக்கழகமாக (சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் NUS) மாறியது. மலேசியாவில் கோலாலம்பூரில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் மலாயாப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட்டது. மலாயாப் பல்கலைக்கழக கல்வி போர்டு அங்கத்தினராக கோ. சாரங்கபாணி செயல்பட்டார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஒரே கூட்டமைப்பாக இருந்த காலக்கட்டத்திலே மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி தொடங்க வேண்டும் என்று கார் சாண்டர்ஸ் ஆணையம் முன்மொழிந்தது. பல்கலைக்கழக செனட் மற்றும் கவுன்சில் கூட்டுக் குழுவும் கல்வி முன்னேற்றங்கள் குறித்து அனுப்பப்பட்ட பரிந்துரைகளில் தனி இந்தியத் துறை அமைக்கப்பட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. 1951-ம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய இலாகா ஆரம்பிப்பது பற்றிய திட்டம் சமர்ப்பிக்கப்பட்டும், இந்திய பகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.1953-ம் ஆண்டு சி. ஆர். தசரதராஜ் இந்திய இலாகா அமைக்கப்படாததைக் குறித்தும் தமிழ், சமஸ்கிருதம், இந்திய சரித்திரம் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுக்கும் இலாகா அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நீலகண்ட சாஸ்திரி

1953-ம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பது குறித்து ஆலோசனை பெறவும் இந்தியப் பகுதிக்கான பாட திட்டத்தை தயாரிக்கவும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. பாடத்திட்டத்திற்கு முதலில் ‘இண்டோலஜி’ என்று பெயர் வழங்கப்பட்டது. மார்ச் 23, 1953-ல் நீலகண்ட சாஸ்திரி சிங்கப்பூர் வந்தார். இந்தியப் பகுதி ஆரம்பிப்பதற்கான சூழ்நிலைகளையும், மக்கள் எண்ணத்தையும் சாஸ்திரி தமது சுற்றுப்பிரயாணத்தின் மூலம் அறிந்து கொண்டார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பது பற்றி ஆராய்ச்சி நடத்திய சாஸ்திரி நகல் அறிக்கையைப் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். ஏப்ரல் 24, 1953 அன்று அறிக்கை பிரசுரமாகும் என்றும் பல்கலைக்கழக கல்வி போர்டுடன் கூட்டத்தில் அறிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி துவங்குவது பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் செய்திருந்த சிபாரிசுகளில் சிலவற்றையே பல்கலைக்கழகம் செனேட் ஏற்றுக்கொண்டது.

18.10.1954 அன்று துணை வேந்தர் சர் சிட்னி கெயின் பல காலமாகப் பல காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு வந்த இந்தியப் பகுதி அமைப்பது குறித்து இறுதியாக மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டு விஸ்தரிப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.

WhatsApp-Image-2020-06-30-at-21.54.56.jpg

சமஸ்கிருத மொழியைப் பாட மொழியாக வைக்கவேண்டும் எனப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி பரிந்துரை செய்தார். கோ.சாரங்கபாணி இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். பல்கலைக்கழகத்தில் தமிழையே வைக்கவேண்டும் என்றும் போராடினார். பல்கலைக்கழகத்தின் பண நெருக்கடியினால் நன்கொடையின்றி இந்தியப் பகுதி அமைக்க சிரமப்பட்டனர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பதற்கும் தமிழ் நூல்களைத் திரட்டுவதற்கும் ‘தமிழ் எங்கள் உயிர் நிதி’ திட்டம் கோ. சாரங்கபாணியால் தமிழ் முரசு நாளிதழ் மூலம் தொடங்கப்பட்டது.

கோ.சாரங்கபாணி

வெறும் உறுதி மொழியளவில் நின்ற மலாய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதியை அமைக்கும் திட்டம் 1956-ம் ஆண்டில் செயல்பட தொடங்கியது. 1956-ம் ஆண்டு தமிழர் திருநாள் கொண்டாட்டத்திற்குக் குழுமிய மக்கள் முன் தமிழ் எங்கள் உயிர் நிதியின் ஒரு பகுதி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சேர்க்கப்பட்டது. தமிழ்த் துறை இயங்கத் தொடங்கும் வேளையில் லட்சியத் தொகையான ஒரு லட்சம் வெள்ளியின் மற்ற பகுதியும் விரைவில் கொடுப்பதாக அந்நிகழ்வில் உறுதி கூறப்பட்டது.

இறுதியாக, மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுத் துறை செப்டம்பர் 1956-ல் நடைமுறைக்கு வந்தது. திரு. எம். இராசாக்கண்ணு மூத்த விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் செப்டம்பர் 12, 1956-ல் பொறுப்பேற்றார். டிசம்பர் மாதம் சுருக்கெழுத்தாளர் ஒருவரும், பிப்ரவரி 1957-ல் கற்றல் கற்பித்தல் தரவுகளைச் சேகரிக்க மூன்று பகுதிநேர ஆராய்ச்சி உதவியாளர்களும் பணியமர்த்தப்பட்டார்கள். மலாயாப் பல்கலைக்கழகத்தின் கலை புலம் 1959-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய தமிழ் மொழியை முதன்மையாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை பட்டப்படிப்பை அறிமுகம் செய்தார்கள். தமிழ் மொழிக்கான இடைநிலை மற்றும் துணைநிலை முதல் பாடத்திட்டங்களுக்கும் மலாயா பல்கலைக்கழகக் கலை புலம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியது. பின்னர் ஏப்ரல் 1960-ம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தோடு இந்தியப் பகுதியும் முழுமையாகக் கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.

உபகாரச் சம்பளம்

சுங்கை சிப்புட் திரு. ஏ. எம். எஸ். பெரியசாமி மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதி வளர வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழக இந்திய மொழிப் பகுதியில் பயில விரும்பும் மாணவர்களில் ஒருவருக்கு உபகாரச் சம்பளம் கொடுக்க முன் வந்தார். இவ்வுபகாரச் சம்பளம் தமது தந்தையார் திரு. அமுசு சுப்பையா பிள்ளையின் பெயரால் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாட முறை

1959-ம் ஆண்டு 55 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் என மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி வளர்ந்தது. 1959-ம் ஆண்டு இந்தியப் பகுதியிலிருந்து ஐந்து மாணவர்கள் ஆனர்ஸ் பரீட்சை எழுதினார்கள். தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்களைப் போதிப்பதோடு இந்திய கலைகளையும் பொதுவாய் அபிவிருத்தி செய்வதெனக் குறிப்பிடப்பட்டது.

தமிழ் மொழியும் இலக்கியமும், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு, இயல் இசை இலக்கணம், திராவிடக் குழு மொழிகளின் ஒப்பிலக்கணம், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆராய்ச்சி, பொதுவான இந்தியக் கலைகள், சிறப்பாக மலாயாவுடன் ஒட்டி வளர்ந்துள்ள இந்தியக் கலைகள் ஆகிய இப்பாடங்கள் அனைத்தும் ஆனர்ஸ், முதல் தரம், இடைத்தரம் என்ற பிரிவுகளில் அவற்றுக்கு ஏற்ற முறையில் சொல்லித் தரப்பட்டன. இடைத்தரப் படிப்பு ஆரம்ப நிலை, உயர்நிலை என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

தொடக்க காலத்தில் வெறும் கல்வியைப் போதிக்கும் பாடத்திட்டமாகவே இருந்த நிலையில் சில வருடங்கள் கழித்து இந்திய ஆய்வியல் துறையிலும் மாணவர்கள் ஆய்வுகள் செய்யத் தொடங்கினர். இறுதியாண்டு மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பை முழுமையாக முடிப்பதற்கு ஆய்வினை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. இளங்கலை பட்டங்களுக்கான ஆய்வுகள் தமிழ் மொழியிலும், முதுகலை, முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகள் மலாய் அல்லது ஆங்கில மொழியிலும் எழுதப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.

தமிழ் ஆய்வு வாரியம்

  • துணைவேந்தர்
  • The Rev. டாக்டர் டி.டி.செல்லியா.
  • திரு கே.ராமநாதன்.
  • திரு. ஜி. சாரங்கபாணி.
  • பேராசிரியர் என்.கே.சென்.
  • டாக்டர் சி.சுப்ரஹ்மண்யம்.
  • மாண்புமிகு டத்தோ ஈ. இ. சி. துரைசிங்கம்.
  • திரு. பி. ஹாரிசன்

உசாத்துணை


✅Finalised Page