under review

நீலகண்ட சாஸ்திரியின் மலேசிய வருகை

From Tamil Wiki

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் மலாயா வருகை (1953 ) கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் பகுதி தொடங்கப்படும் முன்பாக, அப்பகுதி தொடங்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அதன் போதனா மொழியாக இருக்கத் தகுதியான மொழி குறித்தும் ஆய்வு செய்ய பேராசியர் நீலகண்ட சாஸ்திரி இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டார். அவர் மார்ச் 23, 1953-ம் ஆண்டு மலாயாவுக்கு வந்து ஒரு மாத காலம் தங்கி தன் ஆய்வேட்டை முடித்து மலாயா பல்கலைக்கழக செனட்டிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஆயினும் நீலகண்ட சாஸ்திரியின் முடிவுகள் மலாயாவில் கடும் எதிர்ப்பினை தோற்றுவித்தன.

மலாயா பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறை தொடக்க வரலாறு.

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி தொடங்க வேண்டும் என்று கார் சாண்டர்ஸ் ஆணையம் 1951-ல் முன்மொழிந்தது. பல்கலைக்கழக செனட் மற்றும் கவுன்சில் கூட்டுக் குழுக்களில் அது பற்றிய கருத்துகள் பேசப்பட்டன. சி. ஆர். தசரதராஜ் சட்ட சபையில் தமிழ்ப் பகுதி அல்லது இந்திய பகுதி தொடங்குவதன் அவசியம் பற்றி வற்புறுத்தி பேசினார். இந்தியப் பகுதி குறித்து மலாயா இந்தியர்களிடையே அபிப்பிராயப் பேதங்கள் இருந்தன. தமிழ் மொழி இந்திய மொழிகளில் ஒன்று; அதை மட்டும் பல்கலைக்கழகத்தில் இடம் பெறச்செய்வது அனைவருக்கும் திருப்தி அளிக்க மாட்டாது என்று சிலர் கருத்து கூறினர். சிலர் ஹிந்தி மொழியையும் மலையாள மொழியையும் சேர்க்க வேண்டும் என்று கோரினர்.

1953-ம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த சர் சிட்னி கெய்ன் இந்தியப் பகுதி அமைப்பது குறித்து ஆலோசனை பெற பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரிக்கு அழைப்பு அனுப்பினார்.

மலாயா பல்கலைக்கழகத்தில், இந்தியப் பகுதியில் உயர்நிலை படிப்பும், தென்கிழக்காசியாவில் இந்திய நாகரிகம் பரவிய வரலாறுகளையும், இந்தியக் கலை கலாச்சாரங்கள் பற்றிய சிந்தனைகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கருதப்பட்டதால் இதற்கான பாட திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கும் நோக்கத்தில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியை வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பாடத்திட்டத்தைத் தயாரிப்பது கடினமான காரியம் என்பதால் தென்கிழகாசிய ஆய்வுகளில் அனுபவம் பெற்ற பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அழைக்கப்பட்டார்

நீலகண்ட சாஸ்திரி வருகை

மார்ச் 23, 1953-ம் ஆண்டு, விமானம் மூலம் நீலகண்ட சாஸ்திரி சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். அவர் ஒரு மாத காலம் தங்கி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதியை உருவாக்குவது பற்றிய ஆராய்சிகளிலும், இந்தியப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் என்று முதன் முதலில் சிபாரிசு செய்த கார்-சாண்டர்ஸ் கமிஷனுடன் கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டார். நீலகண்ட சாஸ்திரியுடன் ‘ஆனந்த விகடன்’ உதவி ஆசிரியர் ஆர். மகாதேவனும் (தேவன்) வந்திருந்தார்.

நீலகண்ட சாஸ்திரி நாடு முழுவது சுற்றுப்பயணங்கள் சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் கருத்துகளையும் நேரடியாக அறிந்தார். ஆயினும் நீலகண்ட சாஸ்திரி மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை ஆரம்பிக்கப்பட்டால் அதில் தமிழை தொடர்பு மொழியாக வைப்பது சிக்கலாகும் என்ற கருத்தையே இறுதியில் முன்வைத்தார். தமிழை தொடர்பு மொழியாக வைத்தால், ஹிந்தி, மலையாளம் போன்ற பிற இந்திய மொழியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபடக்கூடும் என்றே அவர் நினைத்தார். ஆகவே சமஸ்கிருதம் பொது மொழியாகவும் தமிழ் ஒரு பாடமாகவும் அமையலாம் என்ற கருத்தை முன்வைத்தார்.

பல கூட்டங்களில் அவர் தன் கருத்தை மறைமுகமாக தெரியப்படுத்தினார். ஆயினும் மலாயா தமிழ் உணர்வாளர்களின் நெருக்குதலால், சிங்கப்பூர் தமிழ்ச் சங்க கூட்டத்தில் பேச அவர் இணங்கினார். ஆனால் கடைசி நிமிடத்தில் கூட்டத்திற்கு வருவதை அவர் தவர்த்து விட்டார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பது பற்றி ஆய்வு நகல் அறிக்கையைப் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விட்டு அவர் தமிழ் நாடு திரும்பினார். அவருடைய அறிக்கை ஏப்ரல் 24, 1953 அன்று பிரசுரமாகும் என்று சொல்லப்பட்டது.

தன் மீது மலாயா மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று அறிந்த நீலகண்ட சாஸ்திரி தமது அறிக்கை வரும்வரை மலாயா இந்தியர்களைப் பொறுமை காக்க வேண்டும் என இந்திய அரசாங்க பிரதிநிதி அலுவலகம் மூலம் தான் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார். தன் சிபாரிசின் மூலம் இந்திய சமூகத்திற்குப் படிப்பு மொழியாக தமிழுக்குள்ள முக்கியத்துவத்தை என்னுடைய சிபாரிசுகள் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்பதை மலாயா இந்தியர்களுக்குப் பத்திரிக்கை மூலம் உறுதி கூற விரும்பியதாகச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசு அறிக்கை வெளிவரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தமிழ் நாடு திரும்பிய பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, தனது மலாயா பயணத்தை தோல்வி என்றே வர்ணித்தார். மேலும் மலாயாவில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் அபரீதமான மொழி உணர்வின் காரணமாக மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய மொழி இடம்பெறும் வாய்ப்பு தள்ளிப் போகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

மலாயாப் பல்கலைகழகத்தில் இந்தியப் பகுதி துவங்குவது பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி செய்திருந்த சிபாரிசுகளில் சிலவற்றையே பல்கலைக்கழகம் செனேட் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் துணை வேந்தர் சர் சிட்னி 25.05.1953 அன்று தெரிவித்தார்.

எதிர்வினைகள்

பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி முன்வைத்த கருத்துகளுக்கு மலாயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை தொடங்கவும் அதில் தமிழை தொடர்பு மொழியாக நிலைபெறச் செய்யவும் பெரும் இயக்கம் தோன்றியது. கோ. சாரங்கபாணி அவ்வியக்கத்தை முன்னின்று நடத்தினார். தமிழ் எங்கள் உயிர் என்ற நிதி வசூலிப்பு தொடங்கப்பட்டு பெரும் தொகை மலாயா பல்கலைக்கழகத்திடம் இந்திய ஆய்வியல் துறை தொடங்கவும் தமிழ் நூல்நிலையம் அமைக்கவும் ஒப்படைக்கப்பட்டது. மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி 1956-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. மலாயா பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி ஆரம்பித்த போதே தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்களைப் போதிக்கப்பட்டதோடு இந்திய கலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

உசாத்துணை


✅Finalised Page