under review

மனீஷா பஞ்சகம்

From Tamil Wiki
பஞ்சகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பஞ்சகம் (பெயர் பட்டியல்)
மனீஷா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மனீஷா (பெயர் பட்டியல்)

மனீஷா பஞ்சகம் ஆதிசங்கரர் 'உறுதியான, நிச்சயிக்கப்பட்ட ஞானத்தைப் பற்றி ஐந்து பாடல்களிலே பாடிய நூல். அனைத்தும் பிரம்மமே என்று அத்வைதம் கூறுவதனால் உயிர்களிடையே வேறுபாடில்லை, மானுடரிடையேயும் வேறுபாடில்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அத்வைத ஞானத்தின் உச்சநிலையை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர்

மனீஷா பஞ்சகத்தை இயற்றியவர் ஆதிசங்கரர்.

பெயர்க்காரணம்

சம்ஸ்கிருத மொழியில் ‘மனீஷா’ என்றால் நிச்சயிக்கப்பட்ட அறிவு என்பது பொருள். ஐயமின்றி, முற்றிலும் ஆய்ந்து, முழுதாய் உணர்ந்து வரையப்பட்ட தீர்மானமே மனீஷா எனப்படும். ஐந்து ஸ்லோகங்களில் உறுதியான அறிவைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது.

தோற்றம்

மனீஷா பஞ்சகம் தோன்றியதைப்பற்றிய தொன்மக்கதை:

சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வரும்போது ஐந்து நாய்களுடன் தாழ்த்தப்பட்ட குலத்தைத் சேர்ந்த சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வந்தார். சங்கரரின் சீடர்கள் சங்கரருக்கு வழிவிட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்டனர். அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா?', உன்னுள்ளும், என்னுள்ளும் எங்கும் நிறைந்திருப்பது பிரம்மமே அல்லவா? அப்படியெனில் அத்வைதியான நீ பாகுபாடு பார்ப்பது ஏன்?" 'எனப் பொருள்படும் கேள்வியைக் கேட்டார். சங்கரர் அவர் அனைத்தும் உணர்ந்த ஞானி எனக்கண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார். அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை உணர்த்தி அருளியதாகக் கூறி அச்சண்டாளரை தனது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

நூல் அமைப்பு

மனீஷா பஞ்சகம் ஒன்பது பாடல்களைக் கொண்டது. அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்த முதல் இரண்டு ஸ்லோகங்கள் சங்கரர் கங்கையில் நீராடச் செல்லும்போது எதிர்ப்பட்ட புலையரை விலகிச்செல்லுமாறு சீடர்கள் கூறுவதைப் பற்றியவை. அடுத்த இரு செய்யுள்களும் தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கி சண்டாளர் கேட்ட கேள்விகள்.

சண்டாளர் கேட்ட கேள்விகளால் சங்கரர் பெற்ற நிச்சயமான, உறுதியான ஞானம் 'மனீஷா மம' என முடியும் ஐந்து ஸ்லோகங்களில் (பஞ்சகம்) கூறப்படுகிறது.

உள்ளடக்கம்

சண்டாளரின் கேள்விகள்

अन्नमयाद् अन्नमयम् अथवा चैतन्यमेव चैतन्यात्
यतिवर दूरीकर्तुम् वांछसि किम् ब्रूहि गच्छ गच्छेति

துறவிகளில் சிறந்தவனே! எதனை விலகிப்போ, விலகிப்போ எனக்கூறி வேற்றுமையால் தள்ளி வைக்க விழைகிறாய்? உன்னிடமும் என்னிடமும் இருக்கிற அன்னமயகோசமான இந்த உடலையா? அல்லது ஒருவேளை உள்ளே இருக்கின்ற, அதே சமயம் எங்கும் விரிந்த ஆத்மாவையா?

किम् गंगाम्बुधि बिंबितेम्बर मणौ चंडाल वीधी पयः
पूरेवा अन्तरमस्ति कांचनघटी मृत्कुम्भयोर्वांबरे?
प्रत्यग्वस्तुनि निस्तरन्ग सहजानन्दावबोधाम्बुधौ विप्रो
अयम् श्वपचोयमित्यपि महान् को अयम् विभेद भ्रमः?

அலைகளற்ற ஆனந்தக் கடலாக ஒவ்வொருவருள்ளும் ஆன்மா இருக்கிறது என்ற ஞானம் அல்லவோ சரியான அறிவாகவும் புரிந்து கொண்ட பயனாகவும், (சங்கரரைப் போல) ஞானவழியில் செல்பவருக்கு இருக்க வேண்டும்? (அவ்வாறு இல்லாமல்) வேறுபாடு இல்லாத பிரம்மத்தில் எப்படி ‘இவன் நாயைப் புசிக்கும் புலையன்’ , ‘இவன் அந்தணன்’ என்று வெறுப்பால் வெளி வேறுபாட்டைக் காண முடியும்?

வானத்தின் (ஒளி) மணியான சூரியன் ஒன்றே, புனிதமான கங்கை நீரிலும், புலையன் வசிக்கும் தெருவில் தேங்கியுள்ள (சாக்கடை) நீரிலும் ஒன்றுபோலவே பிரதிபலிக்கின்றது! தங்கக் குடத்துக்குள்ளும், மண்ணாலான குடத்துக்குள்ளும், ஒரே வெற்றிடம்தானே (ஆகாயவெளி) குடியிருக்கின்றது? அதனால் என்ன வேறுபாடு இவற்றில்?

உடல் பலவாக இருப்பினும், உள்ளே ஒளி விளக்காக, மாறாமல் இருக்கின்ற ஆன்மா ஒன்றே என்பது இக்கேள்விகளால் உணர்த்தப்படுகிறது. சமநோக்கே அத்வைத ஞானத்தின் உச்சநிலை. அது இல்லாதபோது, அத்வைத ஞானம் எப்படிப் பரிபூரணமாகும் என்பதே சண்டாளரின் வினா.

மனீஷா பஞ்சகத்தின் முதல் ஸ்லோகம் ஜீவனைப் பற்றிய ஆய்வு செய்து, அந்த ஆய்வின் முடிவில், ஜீவனே பிரம்மம் என நிச்சயிக்கிறது. இரண்டாவது ஸ்லோகம் பிரம்மத்தைப் பற்றிய ஆய்வு செய்து, அதன் முடிவில், பிரம்மமே ஆத்மாவாக எல்லா ஜீவனிலும் இருக்கிறது என நிச்சயிக்கிறது.

மனீஷா ( சங்கரர் பெற்ற உறுதியான அறிவு)
ஒன்று

जाग्रत्स्वप्न सुषुत्पिषु स्फुटतरा या संविदुज्जृम्भते
या ब्रह्मादि पिपीलिकान्त तनुषु प्रोता जगत्साक्षिणी,
सैवाहं न च दृश्य वस्त्विति दृढ प्रज्ञापि यस्यास्तिचे
च्चण्डालोस्तु स तु द्विजोस्तु गुरुरित्येषा मनीषा मम || 1||

விழிப்பு நிலை, கனவு, உறக்கம் எனும் (மூன்று வேறுபட்ட அனுபவங்களின்) நிலைகளில் எல்லாம் உள்ளே பதிந்து, அறிவாகிய ஒளியைத் தந்து கொண்டிருப்பது எதுவோ (ஆத்மனே), பிரம்ம தேவன் முதலாக எறும்பு போன்ற உயிர்கள் அனைத்துக்குள்ளும் ஊடுருவிக் கோர்த்து இருக்கின்றது எதுவோ (பரமாத்மா), இது (ஆத்மா) அதுவே (பரமாத்மா) ஆகும். எனினும், புறஅறிவினால் புலப்படாது, அப்படியே (எப்போதும்) அது இருக்கிறது. இந்த ஞானத்தை எவர் புரிந்து அதில் நிலைத்தவராய் உள்ளாரோ அவரே, (வெளித்தோற்றத்தில்) புலையனாக இருந்தாலும், இருபிறப்பேற்ற அந்தணராக இருந்தாலும் என்னுடைய குரு என்பது என்னால் நிச்சயிக்கப்பட்ட அறிவு (முடிவு).

(ஒரு நிலையில் அனுபவிக்கும் உலகமோ, உடலோ, பொருளோ, மறு நிலையில் இருப்பதில்லை. கனவுலகின் விருந்து, விழிப்புலகின் பசிக்கு உதவாது. விழிப்புலகின் தூல உடலின் பங்கு, கனவுலகில் இருக்காது. இந்த ஒவ்வொரு அனுபவங்களிலும், உடல்,மனம்,உலகம் – இவை எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த மூன்று நிலைகளிலும் மாறாதது எதுவோ (சுத்த அறிவு, ஆத்மன்) அதை அறிவதே நிலையான அறிவு).

இரண்டு

ब्रह्मैवाहमिदं जगच्च सकलं चिन्मात्रविस्तारितं
सर्वं चैतदविद्यया त्रिगुणयाशेषं मया कल्पितम्
इत्थं यस्य दृढा मतिः सुखतरे नित्ये परे निर्मले
चण्डालोस्तु स तु द्विजोस्तु गुरुरित्येषा मनीषा मम || 2

நானே பிரம்மமாக இருக்கிறேன். எல்லா உலகங்களும், நானாகிய துல்லிய அறிவினால் மட்டுமே விரிக்கப்பட்டது. இந்த உலகங்களெல்லாமும், அதனைப் படைத்தவன் என்னும் பதவியும், அவித்தை எனும் முக்குணங்களடக்கிய மாயையினால், ‘கல்பிதமாக’(கல்பிதம்-ஒன்று மற்றது போல் தோற்றம் காட்டல்,super-imposition) ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.அதாவது படைத்தவுனும் அன்றி, படைத்த உலகமுமாயும் அன்றி நான் துல்லிய அறிவாக மட்டுமே இருக்கின்றேன். இத்தகைய எப்போதும் நிலைத்த, முழுதும் ஆனந்த மயமான, உயர்ந்த, தூய பிரம்மத்தில் திடமான அறிவுடையவராக இருக்கிறாரோ, அவரே, (வெளித்தோற்றத்தில்) சண்டாளராக இருந்தாலும், இருபிறப்பேற்ற அந்தணராக இருந்தாலும் என்னுடைய குரு என்பது என்னால் நிச்சயிக்கப்பட்ட அறிவு (முடிவு).

மூன்று

शश्वन्नश्वरमेव विश्वमखिलं निश्चित्य वाचागुरोरः
नित्यं ब्रह्म निरन्तरं विमृशता निर्व्याज शान्तात्मना,
भूतं भावि च दुष्कृतं प्रदहता संविन्मये पावके
प्रारब्धाय समर्पितं स्ववपुरित्येषा मनीषा मम ॥3||

ஒவ்வொரு கணத்திலும் தொடர்ந்து இருப்பதுபோல் தோன்றும் இந்த உலகங்கள் எல்லாம், ஒவ்வொரு கணமும் அழிந்து கொண்டே இருக்கின்றன. இந்த உண்மையை குருவின் உபதேசத்தால் புரிந்து கொண்டு, (‘ஜகத் மித்யம், பிரம்மம் சத்யம்’ எனும்) இந்த உயரிய ஞானத்தினை, எப்போதும், தூய்மையும், அமைதியால் குவிந்த மனத்தினாலும் தியானித்து,அதன் பயனாக முக்காலங்களிலும் அறிந்தும் அறியாமலும் செய்த வினைப்பளுவை எல்லாம் இத்தூய ஞானத்தீ முற்றும் சாம்பலாக்கிவிட்டபின் (இவ்வுடல் தோன்றுவதற்குக் காரணமான) ‘பிராரப்தம்‘எனப்படும் மிஞ்சி நிற்கும் வினைப்பயனை மட்டும் (வேண்டுதல் வேண்டாமை எதுவும் இல்லாமல்) முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் உறுதியுடன்,இப்பிறவிக்கான உடலை வெறுமனே சாட்சியாகச் சுமந்து கொண்டிருக்கும் இவரே குரு என்பதே என்னுடைய திடமான முடிவு.

(ஆத்ம ஞானத்திலேயே நிலைத்து நிற்பதன் பலனாக, இப்பிறவிக்கும் உடலுக்கும் வித்தாகின்ற பழைய வினைகள் எல்லாம் அழிந்து பிரம்ம ஞானியாக, உடல் எனும் கூட்டை வெறுமனே சுமந்து திரிகின்றவராக நான் எனும் ஆணவம் இல்லாத காரணத்தால், அவரது உடல், மனம் செய்யும் எந்த வினைகளுக்கும் காரணமற்ற சாட்சியாகவே இருக்கிறார்).

நான்கு

या तिर्यङ्नरदेवताभिरहमित्यन्तः स्फुटा गृह्यते
यद्भासा हृदयाक्षदेहविषया भान्ति स्वतो चेतनाः,
ताम् भास्यैः पिहितार्कमण्डलनिभां स्फूर्तिं सदा भावय
न्योगी निर्वृतमानसो हि गुरुरित्येषा मनीषा मम || 4 ||

எந்த அறிவினால் மிருகங்கள்,மனிதர்கள், தேவர்கள் என எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் ‘நான்’ எனும் உணர்வு மிகத் தெளிவாக உணரப்படுகிறதோ, எந்த அறிவினால் மனம், ஞானேந்திரியங்கள், உடல் ஆகிய சடலப்பொருட்கள் எல்லாம் உயிர்த்துக் காணப்படுகின்றதோ, எந்த ஒளி, சூரியனால் காட்டப்பட்ட மேகமே சூரியனை மறைப்பதுபோல, தன்னால் விளக்கப்பட்ட மனதாலேயே தான் மறைக்கப்பட்டதாக இருக்கும் ஆத்மாவாக இருக்கிறதோ, அந்த நிறைவான அறிவினையே எப்போதும் தியானித்து இருப்பவரே, தன்னுள்ளே முழு நிறைவைக் கண்ட யோகி. அவரே (உலக வழக்கில் எவராக இருந்தாலும்) என்னுடைய குரு என்பது என்னுடைய நிச்சயிக்கப்பட்ட தீர்மானமான அறிவு, முடிவு.

ஐந்து

यत्सौख्याम्बुधि लेशलेशत इमे शक्रादयो निर्वृता
यच्चित्ते नितरां प्रशान्तकलने लब्ध्वा मुनिर्निर्वृतः
यस्मिन्नित्य सुखाम्बुधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मविद्
यः कश्चित्स सुरेन्द्रवन्दितपदो नूनं मनीषा मम ॥

ஆத்மா எனும் பரந்த ஆனந்தக்கடலின் சில துளிகளினாலேயே, இந்திரன் முதலான தேவர்கள் குறைகளற்ற சுகபோகங்களில் ஆனந்தித்து இருக்கிறார்கள். தூய மனதுடைய முனிவர்களும், தங்களுடைய சிந்தையினாலாயே முழுமையான நிறைவினையும் இந்த ஆத்மாவின் துளியினாலேயே அடைந்து இருக்கிறார்கள். எப்போதும் நிலைத்திருக்கும் இந்த சுகக்கடலில் எவர் முற்றிலும் கலந்து, கரைந்து விடுகிறார்களோ, அவர் பிரம்மமே அன்றி, பிரம்மத்தை அறிந்தவர் அல்ல. இந்த ஞானத்தை அடைந்தவர் எவராயினும் அவரே தேவர்களின் தலைவனான இந்திரனும் வணங்கத்தக்க திருவடிகளை உடையவராக இருக்கிறார் என்பதே என்னால் கண்டிப்பாக தீர்மானிக்கப்பட அறிவு.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2024, 21:24:16 IST