under review

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

From Tamil Wiki

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாலத்தனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். காமக்கணி என்பது காமாட்சி என்னும் வடசொல்லின் தமிழ் வடிவம். காமாட்சியை வேண்டி வளம் பெருகும் பொருட்டு நிகழ்த்தப்படும் வேள்விக்கு காமிய வேள்வி என்று பெயர். அவ்வேள்வியை நிகழ்த்துவோர் காமக்கணி என அழைக்கப்பட்டனர். எனவே இவர் காமிய வேள்வியை நிகழ்த்தும் வேதியராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மதுரை நகரில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் பாடிய பாடல் அகநானூறில் 204-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பாண்டிய அரசனுக்காக போரில் பங்கெடுத்து விட்டு தலைவியைப் பார்க்க ஊருக்கு திரும்பும் படைவீரன் ஒருவன் தன் தேர்ப்பாகனிடம் தேரினை விரைந்து செலுத்துக என்னும் பொருளில் தனது நாட்டு வளத்தை கூறுவதாக முல்லைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பாண்டியனது வெண்ணிற கொற்றக்குடை உலகம் முழுமைக்கும் நிழலாக அமைந்து பாதுகாப்பு தர வல்லது. சிறந்த குதிரைப்படையையும் கடல்போல் பரந்த காலாட்படையையும் படைவீரர் தங்கும் பெரும் பாசறைகளையும் கொண்டது. இவ்வாறாகப் பாண்டிய மன்னனின் படைவளம் உயர்வு நவிற்சியாகச் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.
  • கார்காலத்தில் மழை பெய்த செழித்தமையால் மாலை நேரத்தில் முல்லைக் கொடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூக்களைச் சுற்றி வண்டுகள் அலையலையாக மொய்த்துத் தேன் குடிக்கின்றன.
  • தலைவியின் குடி வாணன் என்பவனுடைய சிறுகுடியாகும் எனக் குறிப்பிடப்படுகிறது. வாணனின் சிற்றூரில் மக்கள் தண்ணுமை என்னும் கிணை பறையை முழக்கி வயல் வெளியில் உள்ள பறவைகளை விரட்டுவர். பறையொலி கேட்டு வயலுக்குப் பக்கத்தில் உள்ள மலர்சோலையில் உள்ள பறவைகளும் அஞ்சியவாறு பறந்து செல்லும். மலர்ச்சோலையிலிருந்து மலர் பறித்துப் பெண்கள் தம் கூந்தலில் சூடி கொள்வர்.

பாடல் நடை

அகநானூறு - 204

  • திணை: முல்லை கூற்று: வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல் போல் தானை, கலிமா, வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்,
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 14:02:45 IST