மணி அர்ஜுணன்
மணி அர்ஜுணன் (கவிதாயினி மணி அர்ஜுணன்) (பிறப்பு: பிப்ரவரி 02, 1951) கவிஞர், எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றார். நீலகிரி படுகர் இனத்தின் முதல் கவிஞர் மற்றும் எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
மணி அர்ஜுணன், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தங்காடு ஓரநள்ளியில், பிப்ரவரி 02, 1951 அன்று, சோக்குர நஞ்சா கவுடர் - மாதிகெப்பி இணையருக்குப் பிறந்தார். உயர்நிலைக் கல்வி கற்ற இவர், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். பிஎஸ்.சி. எம்.ஏ., எம்.எட்., எம்.பில். பட்டங்களைப் பெற்றார்.
தனி வாழ்க்கை
மணி அர்ஜீணன் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி 2009-ல் ஓய்வு பெற்றார். மணமானவர். கணவர் அர்ஜுணன். இவர்களுக்கு சரவணன், செந்தில்குமார் என இரண்டு மகன்கள்.
இலக்கிய வாழ்க்கை
மணி அர்ஜுணன் கவிதைகள் எழுதினார். பின் கட்டுரைகளை ஆன்மிக நூல்களை எழுதினார். சிறார்களுக்கான நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 'ஓடி ஓடி விளையாடு' என்பது சிறார்களுக்காக மணி அர்ஜூணன் எழுதிய நூல். 'நிலவே' என்ற பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார். தனது கவிதை நூலுக்காக மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பாராட்டைப் பெற்றார்.
விருதுகள்
- 'மனம்விட்டுப் பேசலாம்' புதுக்கவிதை நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - 2016
- அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த சாதனையாளர் விருது
- 'ஓடி ஓடி விளையாடு' என்ற சிறார் பாடல் நூலுக்கு, புதுச்சேரி மாணவர் நலத்தொண்டியக்கம் அளித்த சிறந்த நூலுக்கான பரிசு - 2018
- புதுச்சேரி மாணவர் நலத்தொண்டியக்கம் அளித்த சிறார் படைப்பிலக்கிய விருது - 2018
- தமிழக அரசு வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது
- தமிழக அரசு வழங்கிய இலக்கிய மாமணி விருது
- கவிக்குயில் சரோஜினி தேவி விருது
- பாத்தென்றல் விருது
- கவித்தென்றல் விருது
- செழுதமிழ்ச் செல்வி விருது
- கவிவேந்தர் விருது
- சேவா ரத்னா விருது
- தமிழ் மூதாட்டி அவ்வை விருது
- இறையருள் கவி பட்டம்
- அமுத கவி பட்டம்
- தமிழ் வேல் பட்டம்
- மொழி வித்தகர் பட்டம்
- குறிஞ்சித் தமிழமுதம்
- மொழிச்சிற்பி
மதிப்பீடு
மணி அர்ஜுணன், சிறார் பாடல்களையும், பொது வாசிப்புக்குரிய படைப்புகளையும் எழுதினார். பக்திப் பாடல்களை அதிகம் எழுதினார். நீலகிரி படுகர் இனத்தின் முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- மணி(க்) கவிதைகள்
- அன்னை அருளிய அருட்பிரசாதங்கள் பாகம் - 1
- பாலமலை ஸ்ரீ ஆனந்தசாமியின் ஆன்மிகப் பயணம்
- அன்புடன் கிடைத்த செல்வங்கள் (மகான்களின் மணிமொழிகள்)
- பாரதத்தாயின் வீதிஉலா உணர்த்தும் உண்மைகள்
- கற்பகக் கருமாரியின் 1008 திருநாமங்கள்
- திருமாலின் 1008 திருநாமங்கள் மற்றும் ஆஞ்சநேயர் 108
- விக்னேஷ்வரா போற்றி; ஓம் சரவணபவ போற்றி
- ஓம் சிவசக்தியே போற்றி
- தேடல் (இறைப்பாடல்கள் - கதம்பம்)
- ஓடி ஓடி விளையாடு (சிறுவர் பாடல்கள்)
- பால - பாலம்
- தீக்குச்சித் திருப்பொறிகள்
- சிதறாத சிந்தனைகள்
- மது மது மது அனைத்தையும் அழிக்கு அது
- நிழல் தரும் நினைவலைகள்
- நிலவே (குறுவட்டு)
உசாத்துணை
- மணி அர்ஜுணன் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் நேர்காணல் குறும்படம்
- மணி அர்ஜுணன் வாழ்க்கைக் குறிப்பு
- மணி அர்ஜுணன் யூ ட்யூப் தளம்
- மணி அர்ஜுணன் ஃபேஸ்புக் பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jan-2025, 17:58:54 IST