மணிமாலா மதியழகன்
மணிமாலா மதியழகன் (பிறப்பு: 1969) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
மணிமாலா மதியழகன் கடலூரில் 1969-ல் கோ.முனுசாமி – மு.வீரம்மாள் இணையருக்குப் பிறந்தார். கடலூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்வியை முடித்தார்.
தனி வாழ்க்கை
பி.மதியழகனை 1994-ல் மணந்தார். அனுதர்ஷினி, ஆதிஷ்னி, சித்தார்த் என மூன்று குழந்தைகள் உள்ளனர். 2012 முதல் சிங்கப்பூரிலுள்ள Metric Automation என்னும் நிறுவனத்தில் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார். 1999-ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார்.
இலக்கியச் செயல்பாடுகள்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக இருக்கிறார்.
இலக்கியவாழ்க்கை
தமிழ் முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், மக்கள் மனம், செம்மொழி, வல்லினம், தங்கமீன், குவிகம், சொல்வனம் போன்ற சமகால இதழ்களில் மணிமாலா மதியழகனின் கதைகள் வெளியாகியிருக்கின்றன. புலம்பெயர்ந்த வாழ்க்கையின் சிக்கல்களை தொடர்ந்து எழுதிவருகிறார். பள்ளிக்கல்விக்கான துணைப்பாடநூல்களையும் எழுதுகிறார்.
விருதுகள்
- மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு, 2022
- சிங்கப்பூர் இலக்கிய விருது (தகுதிச்சுற்று, 2022)
- கவிஓவியா இலக்கிய மன்ற பரிசு. 2022
- புதுச்சேரி படைப்பாளர் இயக்கத்தின் பரிசு, 2022
- படைப்பு குழுமத்தின் சிறப்பு பரிசு, 2021
- ‘பனிப்பூக்கள்’ சிறுகதைப் போட்டியில் பரிசுகள், 2021, 2022
- சிறுவாணி வாசகர் மையம் நடத்திய ரா.கி.ரங்கராஜன் சிறுகதைப் போட்டியில் பரிசு, 2020
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் விருது, 2020
- திருப்பூர் சக்தி விருது, 2019
- தியாக துருகம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு, 2018
- க.சீ.சிவக்குமார் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு, 2018
- வல்லினம் கலை இலக்கிய இதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு, 2017
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ‘முத்தமிழ் விழா’ சிறுகதைப் போட்டியில் பரிசுகள்
இலக்கிய இடம், மதிப்பீடு
சித்துராஜ் பொன்ராஜ் “சிங்கப்பூர் வாழ்க்கையின் சின்னச் சின்ன அவலங்களை, மன உளைச்சல்களை, நகைச்சுவைகளை விவரிக்கும் அதே நேரத்தில் உலகத்தின் எல்லா இடங்களுக்கும் பொதுவான கணவன்-மனைவி வருத்தங்களை, வயோதிகத்தை, பிள்ளைப் பாசத்தை, சூழ்நிலைக்கு அடிமையாதலை, அடிமையானால் என்ன நடக்கும் என்பதை இவரது கதைகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. சமகால சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இடையே கதை கோணங்களை மிகச் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உள்ளவர் இவர்,” என்று குறிப்பிடுகிறார். சுப்ரபாரதிமணியன் “தமிழர்களின் இடம்பெயர்ந்த வாழ்க்கையில் இன்னல்களைத் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் கதை சூழலில் இயல்பான தமிழர்களின் அனுபவங்களை இவரது கதைகள் கொண்டிருக்கின்றன,” என்று குறிப்பிடுகிறார்.
நூல்கள்
- முகமூடிகள் (சிறுகதைத் தொகுப்பு, 2017)
- இவள் (சிறுகதைத் தொகுப்பு, 2019)
- தேத்தண்ணி (சிறுகதைத் தொகுப்பு, 2021)
- பெருந்தீ (சிறுகதைத் தொகுப்பு, 2021)
- இனிய தமிழ்க் கட்டுரைகள் (சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குரியது, 2017)
உசாத்துணை
- மணிமாலா மதியழகனின் முகமூடிகள்-சித்துராஜ் பொன்ராஜ்
- முகமூடிகள்” – நூல் விமர்சனம். சுப்ரபாரதிமணியன்-வாசகசாலை
இணைப்புகள்
- இவள் – நூல் பார்வை – சுப்ரபாரதிமணியன் – தி சிராங்கூன் டைம்ஸ் (serangoontimes.com)
- வாசகர் பார்வை - சிங்கை சிறுகதை தொகுப்பு - இவள்-காணொளி-யூட்யூப்
- கதைக்களம் - பிப்ரவரி 2022 & எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் தேத்தண்ணி நூல் வெளியீடு காணொளி-யூட்யூப்
- கதைக்களம் - பிப்ரவரி 2022 & எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் பெருந்தீ நூல் வெளியீடு
- சொல்வனம் மணிமாலா மதியழகன் பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Sep-2022, 21:02:31 IST