under review

மகாஸ்வேதா தேவி

From Tamil Wiki
மகாஸ்வேதா தேவி

மகாஸ்வேதா தேவி (ஜனவரி 14, 1926 - ஜூலை 23 2016) வங்காள எழுத்தாளர், கட்டுரையாளர், சமூக செயல்பாட்டாளர். பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர். பிரச்சார இலக்கியத்தின் உச்சமான படைப்புகளை மகாஸ்வேதா தேவி படைத்தார். வனத்தின் பூர்வ உரிமையாளர்களான பழங்குடிகள் தங்கள் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப்படும் அவலத்தை படைப்புகளாக எழுதியவர். தனது வாழ்நாளின் இறுதிவரை பழங்குடிகளின் உரிமைகளுக்காகப் போராடியவர். சபார் பழங்குடியின மக்கள் இவரை தாயாக மதித்ததால் 'சபார்களின் தாய்' என்று அழைக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

மகாஸ்வேதா தேவி ஜனவரி 14, 1926-ல் டாக்கா -வில் (பங்களாதேஷ் நாட்டின் தலைநகரம்) பிறந்தார். மஹாஸ்வேதா தேவியின் பெற்றொர் இருவருமே எழுத்தாளர்கள். டாக்காவில் ஆரம்பக்கல்வி பெற்றார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு குடும்பம் டாக்காவிலிருந்து கிழக்குவங்கத்தில் குடியேறியது. ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் உள்ள பாட பவனாவில் மேல்நிலைப் பள்ளி கல்வியும், விஷ்வபாரதி பல்லைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டமும், கொல்கத்தா பலகலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

மகாஸ்வேதா தேவி பிப்ரவரி 27, 1947-ல் இந்திய மக்கள் நாடகக் கழக இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாடக ஆசிரியர் பிஜோன் பட்டாச்சார்யாவை மணந்தார். நாவலாசிரியர் மற்றும் அரசியல் விமர்சகரான பட்டாச்சார்யா இவரின் மகன். மகாஸ்வேதா தேவி ஒரு தபால் அலுவலகத்தில் வேலை பார்த்தார் ஆனால் அவரது கம்யூனிஸ்ட் சார்பு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். சோப்பு விற்பது, ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு கடிதம் எழுதித்தருவது என பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார். 1962-ல், பட்டாச்சார்யாவை விவாகரத்து செய்த பிறகு எழுத்தாளர் அசித் குப்தாவை மணந்தார். 1976-ல் குப்தாவுடனான உறவு முடிவுக்கு வந்தது. 1964-ம் ஆண்டு முதல் பிஜோய்கர் ஜியோதிஷ் ரே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1984-ல் ஓய்வு பெற்றார். அதன்பின் முழு நேர எழுத்தாளராக இருந்தார்.

சமூக செயல்பாடு

மகாஸ்வேதா தேவி வங்காளம், பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர். பிகார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்து ஆராய்ந்தார். பல்வேறு வகைகளில் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளைக் குறித்தும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் பத்திரிகைகளில் எழுதியதோடு, போராட்டங்களும் நடத்தி அவர்களின் குரலாகவே செயல்பட்டார்.

  • மேற்கு வங்காளத்தின் இடது முன்னணி அரசு சிங்கூர் மற்றும் நந்திகிராமில் விவசாய நிலங்களை பெருநிறுவனங்களுக்குத் தருவதற்காக, வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த முயன்றபோது மகாஸ்வேதா தேவி நாடு முழுவதும் அதற்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்தார்.
  • கொல்கத்தா சிறைகளில் குற்றம் எதுவும் செய்யாமலேயே வெகுநாட்களாக அடைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கைதிகளின் நிலையைச் செய்தித்தாள் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார். அவரது எழுத்துகள் மூலம் நிர்ப்பந்திக்கப்பட்ட மேற்கு வங்காள அரசு அந்தப் பெண் கைதிகளை விடுதலை செய்து அவர்களின் மறுவாழ்வுக்கும் ஏற்பாடு செய்தது.
  • பழங்குடிகளின் வாழ்க்கை மற்றும் கலாச்சார விழுமியங்கள் மீது மகாஸ்வேதா தேவிக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. வரதட்சிணை முறையோ, பாலின ரீதியான பாகுபாடோ இல்லாத சாதியற்ற அவர்கள், நம்மை விட நாகரிகமானவர்கள் என்று கூறியுள்ளார். 1871-ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், குற்றப்பழங்குடிகளாக முத்திரை குத்தப்பட்ட லோதா மற்றும் கெரியா சபர் பழங்குடி மக்களுக்கு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் அந்தக் குற்ற முத்திரை நீடித்த துயரங்களை அளித்துவந்தது. செய்யாத குற்றங்களுக்காக அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்ந்துவந்தன. புருலியா என்ற ஊரை மையமாக வைத்து பழங்குடிகளின் உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்கள் அவருக்கு ‘சபர் மக்களின் தாய்’ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
  • 1998-ல் வதோதராவில் குற்றப் பழங்குடிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களின் துயரங்களைப் பற்றி அவர் ஆற்றிய உரை‘டிநோட்டிஃபைட் அண்ட் நோமேடிக் ட்ரைப்ஸ் ரைட்ஸ் ஆக்ஷன் க்ரூப்’ என்ற வெகுமக்கள் இயக்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.

இலக்கிய வாழ்க்கை

மகாஸ்வேதா தேவி வங்காள மொழியில் நூறு நாவல்களும், இருபது சிறுகதைத் தொகுப்புகளும் எழுதினார். இவரது முதல் நாவல் “ஜான்சிர் ராணி” 1956-ல் வெளிவந்தது. பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். வங்க மொழியிலேயே எழுதி வந்தார். சமூக அக்கறை கொண்ட படைப்புகளாக இருந்ததால் அவை அனைத்துத் தரப்பினரிடையேயும் வரவேற்பைப் பெற்றன. பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களது வாழ்க்கை முறை, துன்பங்கள், இடையூறுகள் ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து அவற்றைத் தன் படைப்புகளில் பதிவுசெய்துள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும், தமிழ் உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்கள் நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளைக் குறித்த இவரது ‘பிரெஸ்ட் ஸ்டோரீஸ்’ சிறுகதைத் தொகுப்பு இவருக்கு உலகப்புகழ் பெற்றுத் தந்தது. ‘ஹஜார் சவுரஷிர் மா’, ‘அம்ரிதாஷன்சார்’, ‘அக்னி கர்பா’, ‘பிஷ்-ஏகுஷ்’, ‘சோட்டி முண்டா இவான் தார் திர்’, ‘மூர்த்தி’ உள்ளிட்ட இவரது படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, தங்கள் பூர்விக வனத்தைக் காப்பதற்காக பழங்குடிகளின் தலைவனாக காலனிய அரசுக்கு எதிராகப் போராடிய பீர்சா முண்டாவின் கதையை ‘காட்டில் உரிமை’ என்ற நாவலாக எழுதினார். பழங்குடிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 20 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 120 நூல்களையும், எண்ணற்ற பத்திரிகை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மிகையுணர்ச்சி தவிர்த்த தனது உரைநடையில், உயர்சாதி நிலச்சுவான்தார்கள், வட்டிக்காரர்கள், அரசு அதிகாரிகளால் பந்தாடப்படும் பழங்குடிகளின் வாழ்க்கையை அவர் கதைகளாக எழுதினார்.

இலக்கிய இடம்

”நான் பெண்களுக்காக மட்டும் எழுதவில்லை. சாதிப் பிரிவுகள், சுரண்டல் பற்றியே என் எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் சமூகப் பிரக்ஞை வேண்டும். உண்மை வரலாறு என்பது சாதாரண மனிதர்களின் உருவாக்கம்தான். நாட்டுப் பாடல்கள், தொன்மை, பழமை என்பவை சாதாரண மக்களால் தான் பரவுகிறது. மீள் பார்வை அடைகிறது. சுரண்டப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனிதர்கள். அவர்கள் தான் எனது எழுத்துக்களுக்கு பலம். இம்மனிதர்களைப் பற்றிச் சொல்ல ஏராளமான வியக்கத்தகு செய்திகள் உண்டு. எனக்கு நன்றாகத் தெரிந்ததை விட்டு விட்டு வேறு ஒன்றை நான் ஏன் தேட வேண்டும்? சில சமயங்களில் என் எழுத்தே அவர்கள் தான் என்று தோன்றுகிறது” என தன் எழுத்தைப் பற்றி மகாஸ்வேதா தேவி குறிப்பிடுகிறார்.

"மகாஸ்வேதாதேவி உண்மையான களப்போராளி. சந்தால்களுடனும் அடித்தள மக்களுடனும் அவர்களின் வாழ்க்கையில் கலந்து போராடி மீண்டவர். அவர் எழுதியவற்றில் பாவனை இல்லை. பொய் இல்லை. அவை அவரது வாழ்க்கையின் ஆவணங்கள்.அவரது நீதியுணர்வு நெருப்பு போன்றது. ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான அவரது அறைகூவல்களை சினம் கொண்டு எழுந்த ஓர் அன்னையின் முழக்கமாகவே காண்கிறேன். துர்க்கையின் மண்ணிலிருந்து எழுந்து வந்தவர் அவர். இந்திய இலக்கிய உலகில் பிரச்சார இலக்கியத்தின் உச்சகட்டம் என ஒன்று உண்டு என்றால் அது மகாஸ்வேதாதேவியின் புனைகதைகளே. ஆனாலும் அவை கலையாக ஆகவில்லை. அவை மானுடரை அவர்களின் நுண்மைகளுடன் தொட்டு அள்ளி வைக்கவில்லை. தருணங்களை வரலாற்றுப்பெருக்கில் வைத்துக் காட்டவில்லை. அவை மகாஸ்வேதாதேவியைக் கடந்து செல்லவே இல்லை." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

நினைவு

மகாஸ்வேதாதேவியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ”மகாநந்தா” என்ற பெங்காலி திரைப்படத்தை 2022-ல் இயக்குனர் அரிந்தம் சில் இயக்கினார். கார்கி ராய்செளத்ரி இதில் நடித்தார்.

திரைப்படம்

  • '1084 -ன் அம்மா' நாவல் ஜெயா பாதுரியின் நடிப்பில் ’ஹசார்சௌரசி கி மா’ (1998) என்னும் பெயரில் கோவிந்த் நிஹ்லானியின் உருவாக்கத்தில் இந்தி திரைப்படமாக வெளி வந்தது. நக்சலைட் இயக்கத்தில் ஈடுபடும் தனது மகனின் செயல்களுக்குப் பின்னால் இருந்த நியாயத்தை உணர முயற்சிக்கும் தாயின் உணர்ச்சிப் போராட்டங்களை விவரிக்கும் கதை அது. பரீக்ஷா ஞாநியும் அந்தக்கதையை நாடகமாக மேடை ஏற்றினார்.
  • திலிப் குமார், வைஜெயந்திமாலா நடிப்பில் 1968-ல் வெளியான ‘சங்கர்ஷ்’ எனும் இந்தித் திரைப்படம் மகாஸ்வேதாதேவி எழுதிய ‘லாய்லி அஸ்மனேர் அய்னா’ எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.
  • ராஜஸ்தானில் உயர் சாதி ஆண்களின் இறுதிச் சடங்கில் ஒப்பாரி வைக்கும் தொழில்முறைப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘ருடாலி’ எனும் அவரது சிறுகதையை அதே பெயரில் இந்தித் திரைப்படமாக உருவாக்கினார் கல்பனா லஜ்மி.
  • சமூகத்தில் பெண்களின் உரிமைகள் பற்றிய அவரது சிறுகதையான ‘சோளி கே பீச்சே’ இத்தாலிய இயக்குநர் இடாலோ ஸ்பினெலியால் ‘கங்கோர்’ எனும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

விருதுகள்

  • 1979-ல் அரன்யெர் அதிகார் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது (வங்காள மொழி) பெற்றார்.
  • 1986-ல் சமூகப்பணிக்காக பத்மஸ்ரீ விருது
  • 1996-ல் ஞானபீட விருது
  • 1997-ல் ஆசிய நோபல் பரிசு ரமன் மக்சேசே விருது
  • 1999-ல் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது
  • 2006-ல் பத்ம விபூஷண்
  • 2009-ல் மேன் புக்கர் பன்னாட்டுப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
  • 2010-ல் யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது
  • 2011-ல் மேற்கு வங்க அரசின் வங்க பிபூஷண் விருது

மறைவு

மகாஸ்வேதாதேவி ஜூலை 23, 2016-ல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 28, 2016-ல் தனது 90-ஆவது வயதில் காலமானார்.

நூல் பட்டியல்

நாவல்
  • Jhansi Rani (1956)
  • Mastar Saab also known as Massaheb
  • Hajar Churashir Maa (1974)
  • Aranyer Adhikar (1979)
  • Mother of 1084
  • Agnigarbha
  • Rudali
  • Sidhu Kanhur Daakey
சிறுகதைத்தொகுப்பு
  • Agnigarbha (1978)
  • Murti (1979)
  • Neerete Megh (1979)
  • Stanyadayani (1980)
  • Chotti Munda Ebong Tar Tir (1980)
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Nov-2023, 09:47:52 IST