ப. ஜெகநாதன்
- ஜெகந்நாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜெகந்நாதன் (பெயர் பட்டியல்)
To read the article in English: P. Jeganathan.
ப. ஜெகநாதன் (பிறப்பு: மார்ச் 8, 1975) கானுயிர் ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகள் மற்றும் களப்பணிகளிலும் அவை தொடர்பான எழுத்திலும் ஈடுபடுகிறார். சிறுவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை பலருக்கும் இயற்கை வரலாறு, பல்லுயிர் பாதுகாப்பு குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கும் இயற்கைக் கல்வியாளராக உள்ளார்.
பிறப்பு, இளமை, கல்வி
ப. ஜெகநாதன் தஞ்சாவூரில் உள்ள கரந்தை எனும் கரந்தட்டான்குடியில் (கருந்திட்டைக்குடி) மார்ச் 8, 1975-ல் பஞ்சாபகேசன், சத்யவாணி முத்து இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை.
ஜெகநாதன் கரந்தை ஐ. குமாரசாமி நடுநிலைப் பள்ளியிலும், திருச்சியில் உள்ள பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். திருச்சி ஈ.வெ.ரா பெரியார் கல்லூரியில் விலங்கியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் 1998-ல் காட்டுயிரியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.
ஜெகநாதன் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் 2000 முதல் 2008 வரை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். ஆந்திராவில் மட்டுமே தென்படும் அரிய வகைப் பறவையான கலுவி கோடி (Jerdon's Courser) குறித்து ஆய்வு செய்து, மும்பை பல்கலைக்கழகத்தில் 2007-ல் விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஜெகநாதன் திருப்பூரில் வசிக்கிறார். இவரது மனைவி ஷீபாவும் ஒரு பறவை ஆராய்ச்சியாளர். ஷீபா திருப்பூரில் உள்ள எல். ஆர்.ஜி. அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் விலங்கியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகன் - அன்றில்.
ஜெகநாதன் மைசூரை தலைமையிடமாகக் கொண்ட இயற்கைப் பாதுகாப்பு நிறுவனத்தில் (Nature Conservation Foundation) காட்டுயிரியலாளராக 2008 முதல் பணியாற்றி வருகிறார்.
எழுத்து
ஜெகநாதன் தன்னுடைய 'உயிரி' வலைப்பூவிலும், தமிழ் ஹிந்து மற்றும் ஆங்கில ஹிந்து இதழ்களிலும் இயற்கை, கானுயிர் மற்றும் சூழல் பாதுகாப்பு பற்றி முக்கியமான கட்டுரைத் தொடர்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலப் புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தியோடர் பாஸ்கரனுடன் இணைந்து சூழியல் வரலாற்றைப் பற்றிய நூல் ஒன்றை எழுதினார். பறவைகள், தட்டான்கள் பற்றிய கையேடுகளை இணை ஆசிரியராக இருந்து தயாரித்தார்.
ஆய்வுப் பணிகள்
- அற்றுப் போன இனம் எனக் கருதப்பட்டு 1986-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை இரவாடிப் பறவையான ஜெர்டான்ஸ் கோர்சர் Jerdon's Courser (தெலுங்கில் கலுவி கோடி) பற்றி இவர் 2000 ஆண்டு முதல் இன்று வரை ஆராய்ச்சி செய்து வருகிறார். அப்பறவையின் வாழிடத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டார்.[1]இதைப்பற்றிய நேர்காணல் 'நேச்சர் இன் ஃபோகஸ்' (Nature in Focus) இதழில் வெளிவந்தது[2]. அதன் வாழிடத்தை வெட்டிச்செல்லும் கால்வாய்த்திட்டத்தின் எதிர்மறை விளைவுகளை ஆசாத் ஆர். ரஹ்மானியுடன் இணைந்து ஆராய்ச்சி செய்து அரசுக்கு முடிவுகளைச் சமர்ப்பித்தார் [3]. அப்பறவை இனம் காப்பாற்றப்படுவதற்கான செயல்திட்டவரைவுக்கான அமர்வில் பங்களித்தார் [4].
- மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலைப் பகுதியில் குறிப்பாக வால்பாறையில் இயற்கைப் பாதுகாப்புக் கல்வித் திட்டத்தின் மூலம் அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டார்.[5]
- இயற்கை பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக மூன்று தளங்களில் பணியாற்றினார்.[6] புத்தகங்கள், கட்டுரைகள், கையேடுகள் பதிப்பித்தல், மாணவர்கள், இதழாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்தல், மற்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தி அறிவியல் ஆராய்ச்சிக்கு பங்களிக்க வைத்தல்
- வால்பாறையில் காடுகளின் வழியே செல்லும் சாலைகளால் உயிரிழக்கும் காட்டுயிர்கள் குறித்த கணக்கெடுப்பிலும், சாலைப்பலியைக் (roadkills) குறைக்கும் வழிமுறைகளை வகுப்பதிலும் பங்கெடுத்தார்.[7]
- காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தென்படும் கரு வயிற்று ஆலா, ஆற்று ஆலா, மீன் பிடி கழுகு முதலான அழியும் அபாயத்தில் உள்ள பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்[8][9]
- சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள பாடம் செய்து வைக்கப்பட்டுள்ள உயிரினங்களின் பட்டியல்களை எண்ம மயமாக்குவதிலும், அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளார்[10]
களச் செயல்பாடுகள்
- இயற்கை வரலாறு, இயற்கைப் பாதுகாப்பு அறிவியல் போன்ற துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்காக இந்திய மொழிகளில் இத்துறைகளைப் பற்றி எழுதுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும், அவ்வாறு எழுதுவதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்காகவும் 2013 முதல் ஆண்டுதோறும் பட்டறைகளை நடத்திவருகிறார்.
- தமிழகப் பறவைகள் ஆர்வலர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார்
- சீசன் வாட்ச் மற்றும் தமிழகப் பறவைகள் ஆர்வலர் கூட்டமைப்புகள் வழியாக பொதுமக்கள் அறிவியலுக்கு பங்களிக்க வழிசெய்கிறார்
- நேரிலும் இணையத்திலும் பறவைகள் நோக்குதல் (Bird watching) பற்றி தொடர்ந்து பயிற்சியளிக்கிறார்
- பறவைகள் பற்றிய கையேடுகள் வடிவமைப்பதில் வனத்துறைக்கு பங்களித்தார்
- தான் எடுத்த கானுயிர் புகைப்படங்களை விக்கிமீடியாவில் பகிர்ந்து, பொது அறிவுப்பரவலுக்கு பங்களிக்கிறார்[11]
முக்கியத்துவம்
பணி சார்ந்த முழுநேர ஆராய்ச்சி தவிர ஜெகநாதனின் பங்களிப்பு இரண்டு தளங்களில் முக்கியமானது.
- தமிழ்நாட்டில் பல பகுதிகளில் காணக் கிடைக்கும் பல்லுயிரியம் (biodiversity) பற்றிய விவரங்கள் முறையாக பதிவேற்றப்பட பொதுமக்களை ஒருங்கிணைத்து செயலாற்றியது ஜெகநாதனின் முக்கிய பங்களிப்பு. பறவைகள் அவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பறவை ஆர்வலர்களை ஒன்று சேர்த்து பங்காற்ற தமிழ் நாட்டு பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பை நிறுவியவர்களில் ஜெகநாதன் ஒருவர். அவ்வமைப்பின் தொடர் கூட்டங்கள் வழியே பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு, ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு போன்ற வருடாந்திர செயல்பாடுகள் தீவிரமாக நிகழ வழி செய்தார்.
- பருவநிலை மாற்றத்தால் தாவரங்களில் மாற்றங்களைப் பதிவுசெய்யும் பொதுமக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றான சீசன் வாட்ச் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திவருகிறார். சீசன் வாட்ச் பற்றி கிட்டத்தட்ட 50 பள்ளிகளில் பயிற்சிப்பட்டறைகள் நடத்தியிருக்கிறார்.
- உள்ளூர் மொழிகளில் இயற்கை வரலாறு மற்றும் வாழ்விட பாதுகாப்பு குறித்த கட்டுரைகள் பொதுவாசிப்புக்கு எளிதில் கிடைக்க ஜெகநாதன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் மொழியில் அதிக அளவில் கட்டுரைகள் எழுதியதோடு, ஆர்வலர்களை ஊக்குவித்து தமிழில் கட்டுரைகள் எழுதவைத்தார். அவற்றை தினமணி, தமிழ் ஹிந்து போன்ற தினசரி பத்திரிக்கைகளில் பிரசுரிக்க வழிவகை செய்தார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற உள்ளூர் மொழிகளில் இயற்கை பற்றிய எழுத்துக்கள் பரவலாக்கப்பட மாநாடுகளில் உரையாற்றியிருக்கிறார், பயிற்சிப்பட்டறைகள் நடத்திவருகிறார்.
படைப்புகள்
நூல்கள்
- பறவைகள் அறிமுகக் கையேடு (இணை ஆசிரியர் ஆசை), க்ரியா பதிப்பகம் (2012)
- தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (இணை ஆசிரியர் R.. பானுமதி), க்ரியா பதிப்பகம் (2013).
- மேற்குத் தொடர்ச்சிமலைகளில் வாழும் சிறு ஊனுண்ணிகள் (இணை ஆசிரியர் திவ்யா முத்தப்பா), பக்கங்கள் 1-22. காட்டுயிர்ப் பாதுகாப்புக் கழகம் (WCS) நியூயார்க் & இந்திய காட்டுயிர் ஆராய்ச்சிக் கழகம் (WII) தேராடூன்.
தமிழ் கட்டுரை தொகுப்புகள்
- இயற்கையின் வாசலில் தொடர் - இயற்கையியல் கட்டுரைத் தொடர் (21 கட்டுரைகள்), தி இந்து தமிழ் திசை நாளிதழ் (ஜூலை - நவம்பர் 2014)
- இயற்கையின் பேழையிலிருந்து - தமிழ் நாட்டின் இயற்கை வரலாறு குறித்த தொடர் (25 கட்டுரைகள்), தி இந்து தமிழ் திசை நாளிதழ் (செப்டம்பர் 2023 to மார்ச் 2024)
- அஞ்சல்தலையும் பறவைகளும் - பல்வேறு நாட்டின் அஞ்சல்தலைகளில் இடம்பெற்றுள்ள பறவைகள் பற்றிய 30 கட்டுரைகள்[12]
- தமிழகத்தில் அற்றுப்போகும் அபாயத்திலிருக்கும் பறவைகள் மற்றும் அழிவின் காரணிகள் பற்றிய 30 கட்டுரைகள்[13]
- காக்கை குருவி எங்கள் ஜாதி - இயற்கையியல் கட்டுரைத் தொடர் (16 கட்டுரைகள்), புதிய தலைமுறை வார இதழ் (ஜூலை-நவம்பர் 2012). [14]
- இடைவெளியும் இடையூறும், தினமணி நாளிதழ் - கொண்டாட்டம் இணைப்பு. 29 ஜனவரி 2012.[15];
- சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிந்து வருகின்றனவா? (சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு). தினமணி நாளிதழ் - கொண்டாட்டம் இணைப்பில். 22 ஏப்ரல் 2012.[16]
ஆங்கில கட்டுரை தொகுப்புகள்
- Trumpeting their cause
- Remembering Charles Darwin
- Whose land is it, anyway?
- Can we hear the roar again?
- Watching dragons and damsels
மொழியாக்கங்கள்
- யானைகளும் அரசர்களும் - தாமஸ் டிரவுட் மான் - காலச்சுவடு (மொழியாக்கம் ப.ஜெகநாதன், தியடோர் பாஸ்கரன்)
- எஞ்சி நிற்கும் மரங்கள் - A. P. மாதவன், ஷமா பட், சீனிவாசன் காசிநாதன் (மொழியாக்கம் : ப. ஜெகநாதன்)
- குரங்குகள் கண்காணிப்பு - களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கான விளக்கக் கையேடு. ரோஹினி மான், சூஷ்மா, மெல்கானி, உதயன் (2009). தமிழில் ப. ஜெகநாதன்.
- இளைய தலைமுறைக்கு மழைக்காட்டைப்பற்றிய தகவல்கள் - ரெஹட் பட்லர் (2006). தமிழில் ப.ஜெகநாதன்(2011)
உசாத்துணை
- ஜெகநாதன் உயிரி என்ற பெயரில் நடத்தும் வலைப்பூ
- சூழலியலைப் புரியவைக்க மொழி மேம்பட வேண்டும்!: காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் தமிழ் ஹிந்து நேர்காணல்
- ஹிந்து ஆங்கில கட்டுரைகள்
- இயற்களை பாதுகாப்பு குழுமத்தில் ப. ஜெகநாதன்
- எஞ்சி நிற்கும் மரங்கள் - மொழியாக்கம்: ப. ஜெகநாதன்
அடிக்குறிப்புகள்
- ↑ ஜெர்டன் கல்குருவி எனப்படும் கலுவி கோடியை ஆராய்தல், பாதுகாத்தல் திட்டம்
- ↑ ஜெர்டான்ஸ் கோர்சர் பறவை கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய பேட்டி
- ↑ ஆந்திர அரசின் தெலுங்கு கங்கா கால்வாய்த்திட்டம் ஜெர்டான்ஸ் கோர்சர் பறவையின் வாழிடத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியபோது அரசுக்கு விளைவுகளை ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கை
- ↑ ஜெர்டான்ஸ் கோர்சர் மீட்புத்திட்டம் குறித்த அறிக்கை
- ↑ மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் ஆகியோருக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- ↑ தமிழ்நாட்டில் இயற்கை பற்றிய கல்வியை தாய்மொழி வழியாக பரவலாக்கும் திட்டம்
- ↑ விலங்குகள் சாலையில் வாகன விபத்தில் பலியாவதைத் தடுப்பதற்கான திட்டம்
- ↑ காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில் ஆலா பற்றிய ஆராய்ச்சி திட்டம் 1
- ↑ காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில் ஆலா பற்றிய ஆராய்ச்சி திட்டம் 2
- ↑ அருங்காட்சியகத்தில் உள்ள படிமங்களை எண்மயமாக்குதல் திட்டம்
- ↑ ப.ஜெகநாதன் கானுயிர் புகைப்படங்கள்
- ↑ அஞ்சல்தலையும் பறவைகளும்
- ↑ தமிழகத்தில் அற்றுப்போகும் அபாயத்திலிருக்கும் பறவைகள்
- ↑ புதிய தலைமுறை கட்டுரைத்தொடரின் வலைப்பூ பிரதி
- ↑ இடைவெளியும் இடையூறும்.தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை
- ↑ சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிந்து வருகின்றனவா? தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 21:11:59 IST