under review

ப. சந்திரகாந்தம்

From Tamil Wiki
பா. சந்திரகாந்தம்

ப. சந்திரகாந்தம். (பிப்ரவரி 28, 1940-மார்ச் 2, 2014) மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர். பெரிய அளவிலான நாவல்கள் வெளியிட்டதில் முன்னோடி. பத்திரிகையாளராக பரவலாக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ப. சந்திரகாந்தம் பிப்ரவரி 28, 1940 அன்று கோலாலம்பூரில் பிறந்தார். இவரது அப்பாவின் பெயர் பரிமணம் சேர்வை. அம்மாவின் பெயர் சீதா. ஏழு உடன்பிறந்தவர்கள் கொண்ட குடும்பத்தில் ப. சந்திரகாந்தம் நான்காவது பிள்ளை. ப. சந்திரகாந்தம் தன்னுடையத் தொடக்கக் கல்வியை செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளியில் நிறைவு செய்தார். இடைநிலைக்கல்வியை செந்தூலில் இருந்த ஆண்டர்சன் மாலைப்பள்ளியில் நிறைவு செய்தார். பின்னர், சென்னையில் அமைந்திருக்கும் அடையாறு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சி பெறச் சென்று பயிற்சியை நிறைவு செய்யாமல் பாதியிலே மலேசியாவுக்குத் திரும்பினார்.

திருமணம், தொழில்

ப. சந்திரகாந்தம் 1973-ம் ஆண்டு இ. தெய்வானை என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து மகள்கள் இருக்கின்றனர். ப. சந்திரகாந்தம் பங்சார் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக 1957 -ம் ஆண்டு பணிபுரியத் தொடங்கினார். அதன் பின்னர் கிள்ளானில் அமைந்திருக்கும் ஜாலான் ஆக்கோப் தமிழ்ப்பள்ளியில் 1961 வரை ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஊடக வாழ்க்கை

ப. சந்திரகாந்தம் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரியும் போதே அவரின் கதை, கட்டுரைகள் தமிழ் நேசன் நாளிதழில் பிரசுரமாகியிருக்கின்றன. 1961-ம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து விலகியதும் தமிழ்நேசன் இதழில் ஞாயிறு பொறுப்பாசிரியராக முருகு சுப்பிரமணியன் ஆசிரியத்துவத்தில் பணியாற்றத் தொடங்கினார். அதன் பின்னர், 1962 -ம் ஆண்டு தொடங்கி 1970-ம் ஆண்டு வரையில் மலேசிய அரசு வானொலிப் பிரிவில் பணியாற்றினார். ஆர்.டி.எம்மில் வானொலி நாடகங்களை எழுதிப் படைத்தார். 1992 -ம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த அலை ஓசை எனும் சினிமா இதழின் மலேசியா பொறுப்பாசிரியராக பணியாற்றினார். 2002 -ம் ஆண்டு தொடங்கி 2012 -ம் ஆண்டு வரை மீண்டும் தமிழ் நேசன் இதழில் ஞாயிறு பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

மலேசியாவில் வெளிவந்த தமிழ் நாளிதழ்களில் ‘அ’ வரிசையில் தலைப்புகளாகக் கொண்டு தொடர்கதைகள் எழுதினார். ப. சந்திரகாந்தம் மின்னல் பண்பலைக்குப் பல வானொலி நாடகங்களையும், வானொலி தொடர் நாடகங்களையும் எழுதியிருக்கிறார். மலேசிய இந்தியர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டிருந்தார்.

இலக்கிய இடம்

பா.சா.jpg

ப. சந்திரகாந்தம் மலேசியாவில் பெரிய அளவிலான நாவல்கள் வருவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். இவர் எழுதிய 712 பக்கங்களைக் கொண்ட 'ஆளப்பிறந்த மருது மைந்தன்' மலேசியாவின் பெரிய நாவல். பெரும்பாலும் இவரது நாவல்கள் தொடர் கதைகளாக நாளிதழில் வந்து நூல் வடிவம் கண்டதால் பொதுமக்கள் வாசிப்புக்கான அம்சங்களே அதிகம் உள்ளன. ப. சந்திரகாந்தம் எழுதித் தயாரித்த '200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்' எனும் ஆவணநூல் பற்றிக் குறிப்பிடும் போது எழுத்தாளர் அ. பாண்டியன் சுதந்திரத்துக்குப் பிந்தைய மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் முக்கிய அங்கங்களான மே 13 கலவரம், ஹிண்ட்ராப் அரசியல் போராட்டம், தமிழ்ப்பள்ளி சூழல் ஆகியவற்றைக் காட்டாமல் அரசியல் சார்புடன் தயாரிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

பிற ஈடுபாடுகள்

ப. சந்திரகாந்தம் 1977-ம் ஆண்டு ‘சுகந்தா மாலிகா’ எனும் நிறுவனத்தை தொடங்கி தமிழ் திரையுலக நடிகர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோரை மலேசியாவுக்கு வரவழைத்துப் பல மேடை நிகழ்ச்சிகளைப் படைத்திருக்கின்றார். 2014 -ம் ஆண்டு சித்ராலாயா சினி கிரியேஷன் எனும் நிறுவனம் தொடங்கி தொலைக்காட்சித் திரைப்படமொன்றைத் தயாரித்தார்.

மரணம்

ப. சந்திரகாந்தம் மார்ச் 2 ,2014 அன்று கோலாலம்பூரில் காலமானார்.

நூல்கள்

நாவல்கள்
  • அமுத சுரபிகள் 2008
  • ஆளப்பிறந்த மருது சகோதரர்கள் - 2002
  • அழுதால் உன்னைப் பெறலாமே -1976
சிறுகதைகள்
  • அங்கும் இங்கும் சிறுகதைத் தொகுப்பு -1997
கட்டுரைகள்
  • சாதனைப்படிகளில் சாமிவேலு 1999
  • 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள் - 2009
  • ஜான் திவி முதல் சாமிவேலு வரை - 1998
  • கூட்டுறவுக் காவலர் 1998
  • வலை சிறுகதைத் தொகுப்பு – 2002
  • மலேசிய இந்தியர்களின் சமூக அரசியல் போராட்டங்கள்-1995

விருதுகள்

  • கரிகால் சோழன் விருது – முஸ்தாபா அறக்கட்டளை 2009

உசாத்துணை


✅Finalised Page