under review

போற்றித் திருக்கலிவெண்பா

From Tamil Wiki

போற்றித் திருக்கலிவெண்பா பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும் கலிவெண்பாக்களால் அமைந்த சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

போற்றித் திருக்கலிவெண்பாவை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமயக் குரவர்க்குப் பின் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

சிவபெருமானது புகழையும் செயல்களையும் தனித்தனியாக போற்றிக் கூறும் இந்நூல் கலிவெண்பா யாப்பில் அமைந்ததால் ‘போற்றித் திருக்கலி வெண்பா’ எனப் பெயர் பெற்றது. பஃறொடை வெண்பாவே பிற்காலத்தில் ‘கலிவெண்பா’ எனப் பெயர் பெற்றது.

போற்றித் திருக்கலி வெண்பாவில் 45 கண்ணிகளில் சிவபெருமானின் அடி முடி காணமுடியாத தன்மையும், அருளும், அவன் அடியவர்களுக்காக அருளியவையும் கூறப்படுகின்றன.

கயாசுர வதம், மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தது, மன்மதனை எரித்தது, முயலகனை அழித்தது, பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷத்தை விழுங்கியது, தாருகாசுரவதம், முப்புரம் எரித்தது, யானைத்தோலைப் போர்த்தியது, பார்த்தனுக்கு பாசுபதம் அருளியது, கண்ணப்பருக்கு அருளியது என சிவபெருமானின் அருளிச் செயல்களைப் போற்றி, அவ்வாறு போற்றுபவர்கள் 'அத்தனடி செல்வார் ஆங்கு' என்று போற்றித் திருக்கலிவெண்பா முடிகிறது.

காளத்தி போற்றி கயிலைமலை போற்றியென
நீளத்தினால்‌ நினைந்து நிற்பார்கள்‌ - தாளத்தோ
டெத்திசையும்‌ பன்முரசம்‌ ஆர்த்திமையோர்‌ போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்க ளாங்கு”

என இந்நூல்‌ முடிவு பெறுவதால்‌ நக்கீர தேவர்‌ திருக்காளத்திக்குச் சென்று கண்ணப்பர் வழிபட்ட காளத்திநாதனைப் போற்றி இந்நூலைப்‌ பாடியிருக்கலாம் என கருதப்படுகிறது.

பாடல் நடை

சிவனின் ஆடல்கள்

வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த

பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
மெத்தனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த

வானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்

கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து

வாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்

அத்தனடி செல்வார்

பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்

வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி
ஆயசீர் போனகமா அங்கமைத்து - தூயசீர்க்

கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல்

காளத்தி போற்றி கயிலைமலை போற்றிஎன
நீளத்தி னால்நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ

டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.

உசாத்துணை


✅Finalised Page