under review

போத்தனார்

From Tamil Wiki

போத்தனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

போத்தனார் சங்கப் புலவர்களில் ஒருவர். பல்லவ அரசர்கள் போத்தரையர் என்றும் அழைக்கப்படுவர். போத்து என்பது பல்லவரைக் குறிக்கும் சொல். போத்தனார் பல்லவர் தொடர்பு கொண்டவர் என்று அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

போத்தனார் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் 75-வது பாடலாக உள்ளது. பாலைத் திணைப் பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பொருளைவிட அருளே சிறந்தது. அருளே அறிவுடையவர் விரும்புவர். எனினும் ஆண்கள் பொருள் சேர்க்கும் முயற்சியான ஆள்வினையையே விரும்புவர். பொருள் தேடும் முயற்சியில் பாலை வழியில் செல்வர்.
  • பாலைத்திணை: வெயிலின் சினம் தவழ்ந்துகொண்டிருக்கும் நெடிய காட்டு வழி. அந்தக் காட்டில் மரங்கள் கரிந்துபோன குத்துக்கட்டைகள் இருக்கும். கொல்லும் புலியைப் போல வலிமை மிக்க, காலில் கழல் அணிந்த மறவர்கள் இருப்பர். அவர்கள் தங்கள் பழமையான ஊரில் இருக்கும் மன்றத்து மரநிழலில் படுத்து உறங்குவர். பொருள் தேடச் செல்பவர் அவர்களுடன்தான் உறங்கவேண்டும். அது மிக உயர்ந்த மலை. நீரே இல்லாமல் காய்ந்துபோயிருக்கும் மலை.
  • தலைவி நல்ல நெற்றியழகினை உடையவள். குற்றமற்ற உள்ளக் கோட்பாட்டைக் கொண்டவள். பவளம் போன்ற வாயால் அவள் சில சொற்களையே பேசுவாள். முன்னங்கையில் ஒளி திழும் வளையல்களை அணிந்திருப்பாள். சிறந்த அணிகலன்களையும் அணிந்திருப்பாள். முலைகளுக்கு நடுவே முத்தாரமும் காதலனின் மலர்மாலையும் இருக்கும். மழைகாலத்தில் தளிர்க்கும் மாந்தளிர் போன்ற மேனி உடையவள். மென்மையான இடை உடையவள். பருத்த அல்குலில் காசுகள் கோத்த அணிகலன்களைக் கொண்டவள். மென்மையான இயல்பை உடைய சிறுமி.

பாடல் நடை

  • அகநானூறு - 75 (திணை: பாலை)

"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,

எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர் ஆயின் நல் நுதல்,

செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்? என-

மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி
ஆனா நோயை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 20:01:05 IST