under review

போஜன குதூகலம்

From Tamil Wiki
போஜன குதூகலம்

ஸ்ரீ இரகுநாத ஸூரி, வடமொழியில் எழுதிய “திரவிய குணதகனம்” என்ற நூலின் தமிழ்ப் பெயர்ப்பு போஜன குதூகலம். இதன் காலம் பொது யுகம் 16-ம் நூற்றாண்டு. இதனை சக்கரவர்த்தி எஸ்.என். ராகவன், தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம் இதனைப் பதிப்பித்துள்ளது. மராட்டிய வகை உணவுகள் இந்த நூலில் அதிகம் இடம் பெற்றுள்ளன.

பதிப்பு, வெளியீடு

போஜனம் என்பது ‘உணவு’ என்பதன் வடமொழி. குதூகலம் என்பது நிறைவு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும். தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம், போஜன குதூகலம் நூலை, 2005-ல், பதிப்பித்துள்ளது. இதன் வட மொழி மூலம் ஆசிரியர் ஸ்ரீ இரகுநாத ஸூரி. தமிழில் சக்கரவர்த்தி எஸ்.என். ராகவன் மொழியாக்கம் செய்துள்ளார்.

நூல் பற்றி பதிப்புரையில், “தானிய வகைகள், வெந்த உணவு, காய்கறிகள், வற்றல், ஊறுகாய் மசாலாப் பொருட்கள், பிறவகையான உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் தன்மைகள் பயன்கள் ஆகியவற்றை மிகத்தெளிவாக விவரிப்பதோடு நீர் பற்றிய அரிய செய்திகள், நஞ்சுள்ள உணவின் அறிகுறிகள், பத்திய உணவுகள். உணவு உண்ணும் முறைகள், வெற்றிலை போடும் முறை, பயன்கள் எனப் பல்வேறு தகவல்களையும் கூறுகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போஜன குதூகலம் - பொருளடக்கம்

உள்ளடக்கம்

'இந்து பாக சாஸ்திரம்’, நள வீம பாக சாஸ்திரம்’ நூல்கள் வரிசையில் சமையற்கலை பற்றிய குறிப்பிடத் தகுந்த ஒரு நூல் இது. இந்நூலில் சமைப்பது பற்றிய செய்திகள் மட்டுமல்லாமல் உணவு பற்றிய பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனியாக உள்ளபோது வெவ்வேறு பண்பினைக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஒன்றோடொன்று சேரும்போது ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி இந்த நூல் விரிவாக விளக்குகிறது. பாத்திரங்களுக்கேற்ப உணவுப் பொருட்களின் தன்மை வேறுபடுவதையும், உணவு நஞ்சாதல் பற்றிய விளக்கமும், நஞ்சுள்ள உணவினைக் கண்டு கொள்ளும் முறைகளும் இந்த நூலின் முக்கிய சிறப்பம்சமாகும்.

உணவுக்குப் பயன்படுத்தும் நீரைப் பொறுத்து உணவின் சுவை, தன்மை வேறுபடுவதைப் பற்றி விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆற்று நீரைக் கொண்டு சமைத்தால் ஏற்படும் சுவை, அருவி நீர், குளத்து நீர், ஏரி நீர், கிணற்று நீர், பிளவுகளில் கிடைக்கும் நீர், உணவுக்குப் பயன்படுத்தக் கூடாத நீர், கெட்ட நீருக்கு மாற்று என்றெல்லாம் பல செய்திகள் இந்த நூலில் உள்ளன. குறிப்பாக, காலை, மதியம், இரவு என வேளைகளுக்கேற்ப நீரின் தன்மை மாறுவதையும், பாத்திரங்களின் வகைகளுக்கேற்ப நீரின் தன்மை மாறுதலடைவதையும் இந்த நூலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார், ஸ்ரீ இரகுநாத ஸூரி.

விடியற்காலையில் நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்

“இரவின் முடிவில் குடிக்கப்படும் நீர், வழக்கமாகக் குடிக்கப்பட்டால் காசம், சுவாசம் அதிசாரம், காய்ச்சல், ஆண் குறியில் அடைப்பு, இடுப்புப்படை, நீரிழிவு, சிறுநீர்ச் சிக்கல் மூலம், வீக்கம், தொண்டை, தலை கழுத்து ஆகியவற்றில் தோன்றும் நோய், வாதம், பித்தம், கபம், களைப்பு ஆகியவற்றால் உண்டாகும் நோய் ஆகியவற்றைப் போக்கும். மனிதன் சூரியன் தோன்றுவதற்கு முன் பதினாறு பலம் நீர்குடிக்க வேண்டும். அங்ஙனம் குடித்தால் வாதம் பித்தம் கபம் முதலியவற்றை வென்று நூறாண்டு உறுதியுடன் வாழ்வான்” என்ற குறிப்பு இந்த நூலில் காணப்படுகிறது.

மனிதர்களால் எளிதில் பின்பற்ற முடியாத வழிமுறைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. சான்றாக, “இருண்ட இரவு முடியும் வேளையில் எழுந்து மூக்கு துவாரத்தின் வழியாக ஒரு மனிதன் தண்ணீரை உட்கொண்டால் கூரிய மதியும், கருடனுக்கு ஒப்பான வலிமை மிக்க பார்வையும், நரை திரை தொந்தி இல்லாமையும், நோயற்ற வாழ்வும் கொண்டு வாழ்வான்.” என்ற குறிப்பு நடைமுறைக்கு ஒவ்வாதது.

பால் பற்றிய செய்திகள்

பால் அருந்துவது பற்றி இந்த நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. எப்படிப் பட்ட மாடுகள், ஆடுகளின் பாலைக் குடிக்க வேண்டும், அவற்றை எந்தெந்தப் பாத்திரத்தில் வைத்துக் குடித்தால் என்னென்ன பலன் ஏற்படும், பாலுடன் உண்ணத் தகுந்தவை எவை, தகாதவை எவை என்பது பற்றியெல்லாம் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. பாலைத் தாமிரப் பாத்திரத்தில் வைத்தால் அது வாதத்தைப் போக்கும். தங்கப் பாத்திரத்தில் வைக்கப்பட்டது பித்தத்தை அகற்றும். வெள்ளியிலிருப்பது சிலேட்டுமத்தை வெல்லும். பித்தளையில் வைக்கப்பட்ட பால் இரத்தத்தில் தெளிவைக் கொடுக்கும். இரும்பில் வைக்கப்பட்ட பால் கிருமிகள், பித்தம், கபம் ஆகியவற்றை அகற்றும். காந்த சாரத்தில் வைக்கப்பட்டது, மூன்று தோஷங்களையும் போக்கும்.

ஒட்டகப்பால், யானைப் பால் அருந்துவது பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இந்த நூலில் செய்திகள் உள்ளன. பசுவின் தயிர், எருமைத் தயிர் தவிர செம்மறியாட்டின் தயிர், கழுதைத் தயிர், குதிரைத் தயிர், ஒட்டகத் தயிர், யானைத் தயிர் பற்றியும் பல செய்திகள் காணப்படுகின்றன.

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி என்பது பற்றிய குறிப்புகள் பின்வருவன. “சாப்பிடும் முன் இஞ்சியையும் உப்பையும் உட்கொள்ளுவது மிகவும் நன்மை தரும். இதனால் நல்ல சுவையும் பசியும் உண்டாகும். நாக்கும் தொண்டையும் சுத்தமாகும். உப்பு கடலுப்பாக இருத்தல் வேண்டும். கடினமான உணவை நெய்யை முன்னிட்டு முதலில் உண்ணுதல் வேண்டும். பின்னர் மிருதுவான உணவை உண்ண வேண்டும். கடைசியில் திரவப்பொருள். இப்படி உண்பவன் வலிமையும் உடல் நலமும் என்றும் இழக்காமல் வாழ்வான்.

உணவில் ஊன்றி அதே நினைவில் உண்ண வேண்டும். முதலில் இனிப்பையும் நடுவில் புளிப்பும் உப்பும் பிறகு உவர்ப்பும் கசப்பும் அழலையும் உண்ணுதல் நன்மை தரும். அறிஞர்கள் மாதுளை போன்ற பழங்களை முதலில் உண்ணுவர். வாழைப்பழம் முதலில் உண்ணுதல் ஆகாது. அதே போல் கத்தரிக் காயுமாகும். தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, கரும்பு ஆகியவற்றையும் உணவுக்கு முன்னாலேயே உட்கொள்ளுதல் வேண்டும். பிறகு ஒரு போதும் உண்ணலாகாது. சோறு இரண்டு பங்கும் நீர் ஒரு பங்கும் உண்டு, காற்று முதலியவைகளுக்காக வயிற்றில் ஒரு பங்கைக் காலியாக விடவேண்டும். சாப்பிடும் போது அதிகமாகவும் சம்மந்தமில்லாததும் ஆன பேச்சைப் பேசலாகாது. வெறுக்கத்தக்க கதைகளைப் பேசவோ கேட்கவோ கூடாது.”

வெற்றிலை போடுவது எப்படி?

சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை போடுவது பற்றிய குறிப்புகள் இவை. “கனவிலும் காணமுடியாத பதின்மூன்று நன்மைகள் தாம்பூலத்தில் ஒருங்கே அமைந்துள்ளன. இலையின் நுனிப்பகுதியில் புகழும், அடியில் பெருமையும், நடுவில் செல்வமும் அமைந்துள்ளது. ஆகையால் இதன் நுனி, நடு அடிப்பக்கங்களை உண்ணாது விடவேண்டும். இலையின் அடியில் நோயும், நுனியில் பாவமும் பொடி செய்யப்பட்ட இலையில் ஆயுளைக் குறைக்கும் தன்மையும் உள்ளது. வெற்றிலையின் சாறு முதலில் நஞ்சுக் கொப்பாகவும், இரண்டாவது வயிற்றுப்போக்கைக் கொடுப்பதாகவும், செரிமானத்தைக் குறைப்பதாகவும், மூன்றாவது பாவத்தை ஒழிப்பதாகவும் அமிர்தத்திற் கொப்பாகவும் உடலுக்கு உறுதி தருவதாகவும் அமையும். கல்வியை விரும்புவோன் இரவில் தாம்பூலம் தரித்தல் கூடாது. காயமுள்ளவன் (புண் உள்ளவன்), பித்தம், இரத்தநோய் உள்ளவன் பாலைக் குடிப்பவன், இளைத்தவன், வறட்சியுள்ளவன், கண்ணோயுள்ளவன், நஞ்சு, மயக்கம், பட்டினி, நீரிழிவு, பாண்டு, க்ஷயம், மூலம், குஷ்டம், பேய், அதிசாரம், மலச்சிக்கல், இருதய நோய் முதலிய நோய் உள்ளவன் தாம்பூலத்தை அதிகமாக உபயோகித்தல் கூடாது.

ஐந்து நிஷ்கம் பாக்கும், வெற்றிலை இரண்டு பலமும், சுண்ணாம்பு இரண்டு குந்துமணியும் தாம்பூலத்தின் சிறந்த அளவாகும். இலையும் பாக்கும் சீராக இருப்பதால் நல்ல சிவப்பு நிறம் இருக்கும். பாக்கு அதிகரித்தால் நிறம் இருக்காது. சுண்ணாம்பு அதிகரித்தால் கெட்ட நாற்றம் தோன்றும். இலை அதிகமானால் நறுமணம் இருக்கும். இரவில் இலை அதிகமாக உள்ள தாம்பூலத்தை உட்கொள்ள வேண்டும். நல்ல சுவையும் தெளிவும், நறுமணமும் வேண்டுமானால் வாயில் ஜாதிக்காய், கிராம்பு, தக்கோலம், கடுக்காய் ஆகியவற்றுடன் உண்ணுதல் வேண்டும். தாம்பூலம் அளவுக்கு மீறினால் உடல் வெளுத்தல், உடல் இளைத்தல், கண்ணோய், வலிமை குன்றுதல் ஆகியவற்றைக் கொடுக்கும்.”

(நிஷ்கம் = 80 குன்றிமணி எடை; ஒரு பலம் = 40 கிராம்; 1 குன்றி மணி = 130 மில்லிகிராம்)

பிற செய்திகள்

எப்படி இலை போடப்பட்ட வேண்டும்; வாழையிலை இல்லாவிட்டால் எந்தெந்த இலைகளைப் பயன்படுத்துவது, எதை எதை எப்படி எப்படிப் பரிமாற வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிக விரிவான செய்திகள் இந்த நூலில் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

இறைச்சி உண்பது பற்றியும், அதனைப் பக்குவமாக்கிச் சமைப்பது பற்றியும், இறைச்சியினால் விளையும் நன்மை, தீமைகள் பற்றியும் இந்த நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page