under review

பொன்வண்ணத்தந்தாதி

From Tamil Wiki

பொன்வண்ணத்தந்தாதி (பொன் வண்ணத்து அந்தாதி, பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அடங்கும். முதல் பாடல் 'பொன்வண்ணம்' எனத்தொடங்கி இறுதிப்பாடல் 'பொன்வண்ணம்' என முடிவதால் இப்பெயர் பெற்றது.

ஆசிரியர்

பொன்வண்ணத்தந்தாதியின் ஆசிரியர் 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனார் (கழறிற்றறிவார், மாக்கோதையார்). பொன்வண்ணத்தந்தாதி இயற்றப்பட்ட காலம் பொ.யு 650-710 என்று மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு(பதினோறாம் நூற்றாண்டு) நூலில் குறிப்பிடுகிறார்.

அன்றுவெள்‌ ளானையின்‌ மீதிமை யோர்சுற்‌ றணுகுறச்செல்‌
வன்றொண்டர்‌ பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலையரன்முன்‌
சென்றெழில்‌ ஆதி உலாஅரங்‌ கேற்றிய சேரர்பிரான்‌
மன்றிடை ஓதுபொன்‌ வண்ணத்‌ தந்தாதி வழங்கிதுவே.

என்னும் பாடலினால் இச்செய்தி அறியப்படுகிரது

நூல் அமைப்பு

பொன்வண்ணத்தந்தாதி அந்தாதி முறையில் இயற்றப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது. முதல் பாடல் 'பொன்வண்ணம்' எனத்தொடங்கி இறுதிப்பாடல் 'பொன்வண்ணம்' என முடிகிறது .தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டு அவர்மேல் காதல் கொண்டு எய்தும் பிரிவாற்றாமையின் சித்திரம் பாடல்களில் காணப்படுகிறது.

பாடல் நடை

முதல்பாடல்

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.

இறுதிப்பாடல்

மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம்பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும் கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.

உசாத்துணை

பொன்வண்ணத்தந்தாதி-தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page