under review

பொன்னூர் ஆதிநாதர் கோயில்

From Tamil Wiki
பொன்னூர் ஆதிநாதர் கோயில் (நன்றி பத்மாராஜ்)

பொன்னூர் ஆதிநாதர் கோயில் (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

வட ஆர்க்காடு மாவட்டம் (தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம்) பொன்னூர் எனும் கிராமத்தில் அமைந்த ஆதிநாதர் கோயில். இலங்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்வூர் ஹேமகிராமம், சுவர்ணபுரம், பொன்னூர் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திண்டிவனத்திலிருந்து, வந்தவாசி, சேத்துப்பட்டு சாலை வழியாக பொன்னூர் மலை நாற்பத்தியைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பொன்னூர் ஆதிநாதர்

வரலாறு

இத்தலத்தில் பொ.யு. 7-ம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் வேரூன்றியிருந்ததென்றும், அக்காலத்திலேயே இங்கு சமணப்பள்ளி ஒன்று கட்டப்பட்டிருந்ததென்றும் செவிவழிச்செய்தி உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. தற்போது இங்குள்ள கோயில் பொ.யு. 12-ம் நூற்றாண்டுக் கலைப்பாணியைக் கொண்டுள்ளது.

அமைப்பு

இங்குள்ள அதிக உயரமில்லாத குன்றின் மீது முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்குக் கோயில் உள்ளது. இக்குன்று கனககிரி எனவும், இங்குள்ள ஆதிநாதர் கனகமலை ஆழ்வார் எனவும் அழைக்கப்படுகிறார். பொன்னூரிலுள்ள கோயில் கிழக்கு நோக்கியவாறு கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், யக்ஷி, கருவறை ஆகிய பகுதிகளைக்கொண்டது. கோயிலைச் சுற்றி திருச்சுற்று மதிலும், அதன் வடக்குப் புறத்தில் நுழைவாயிலும் உள்ளது.

கோயிலின் அடித்தளம் உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் வெளிச்சுவர்களில் அரைத் தூண்களும், அவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளில் தேவகோட்டங்களும் உள்ளன. ஆனால் இந்த தேவகோட்டங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் எவையும் காணப்படவில்லை. கருவறைக்கு மேலுள்ள கொடுங்கையில் கூடு அமைப்புகளும், அவற்றில் மனிதத்தலை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கொடுங்கையின் மேற்புறம் யாளி வரிசை உள்ளது. இந்த யாளி வரிசைக்கு மேலுள்ள விமானப் பகுதி செங்கல், சுதை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. ஒரு தளம் உடைய இந்த விமானத்தில் கூடம், சாலை எனப்படும். சிறிய வடிவக் கோயில் அமைப்புகளும், அவற்றிற்கிடையில் தீர்த்தங்கரர்களது சுதை வடிவங்களும் காணப்படுகின்றன. தளத்திற்கு மேலாக உருண்டை வடிவச்சிகரமும், ஒற்றைக் கலசமும் உள்ளன.

பொன்னூர் ஆதிநாதர் கோயில் சிற்பங்கள்

கருவறை, அர்த்தமண்டபம் அதிலுள்ள தூண்கள் ஆகியவற்றின் அமைப்பும், கலைப்பாணியும் பொ.யு. 12-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. மகாமண்டபம் பொ.யு. 13 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இந்த மண்டபத்தின் அடித்தளத்திலுள்ள கல்வெட்டும் பொ.யு. 13-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இந்த மண்டபத்தின் தென்பகுதியில் சிறிய அளவிலான ஜுவாலமாலினியம்மன் கருவறை 1960-ம் ஆண்டு கட்டப்பட்டது.

சிற்பங்கள், உலோகத் திருமேனிகள்

பொன்னூர் கோயிலில் அதிகமாக கற்சிற்பங்கள் இல்லாவிடினும், ஏராளமான செப்புத்திருமேனிகள் இருப்பதைக் காணலாம். கருவறையில் ஆதிநாதர் சிற்பம் உள்ளது. தீர்த்தங்கரரது தலைக்குப் பின்புறம் நெருப்புச்சுவாலையுடன் கூடிய பிரபை அதற்கு மேலாக முக்குடை, இரண்டு பக்கங்களிலும் சாமரம் வீசுவோர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் பொ.யு. 12-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

மகாமண்டபத்தை ஒட்டியுள்ள யக்ஷி கருவறையில் சரஸ்வதிதேவியார் சிற்பம் 19-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

உலோகத்தினால் வார்க்கப்பட்ட படிமங்கள் பெரியவையாகவும், சிறியவையாகவும் ஏராளமாக உள்ளன. ரிஷப நாதர், சுபார்சுவநாதர், சந்திரபிரபா, புஷ்ப தந்தர். சாந்தி நாதர், மல்லி நாதர், பார்சுவ நாதர், முதலிய தீர்த்தங்கரர்களது திருவுருவம், ஜுவாலமாலினி, தருமதேவி, சர்வான யக்ஷன் முதலிய சாசனதேவதை படிமங்களும், சர்வதோபத்திரம், மேரு, அஷ்டமங்கலச் சின்னங்கள் ஆகிய படிமங்கள் உள்ளன. இந்த உலோகத் திருமேனிகளுள் ரிஷபநாதர். பார்சுவநாதர், ஜுவாலமாலினி (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) ஆகியோரைக் குறிப்பிடுபவை பொ.யு. 18-ம் நூற்றாண்டையும், ஏனையவை இதற்குப் பிற்பட்ட காலத்தையும் சார்ந்தவை.

பார்சுவதேவரது படிமம் 1733-ம் ஆண்டு அனந்தசேனர் என்பவரால் நிறுவப்பட்டதென்பதை அதில் பொறிக்கப்பட்ட சாசனம் கூறுகிறது.

ஆதிநாதர் கோயில் உலோகத் திருமேனிகள்

ஜுவாலமாலினி வழிபாடு

சமண சமயத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒவ்வொரு யக்ஷி படைக்கப்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில் அம்பிகா, பத்மாவதி, ஜுவாலாமாலினி, சித்தாயிகா ஆகிய யக்ஷிகளே வழிபடப்பட்டு வருகின்றனர். பொன்னூரில் ஜுவாலாமாலினி முதன்மை யக்ஷியாக உள்ளது. இத்தேவியை விரதமேற்று அனுதினமும் வணங்கி வந்தால் நற்பேறு அளிப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உண்டு,

அருளறம் பூண்ட அறவோராகிய ஹேலாச்சாரியார் இவ்வன்னையின் அருளாசி பெற்றவர் என்றும், இதனால் இத்தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த யக்ஷி பொன்னூரை அடுத்துள்ள நீலகிரி மலையினைத் தனது உறைவிடமாகக் கொண்டவள் எனவும், அதனால் ஹேலாச்சாரியார் அந்த மலையிலேயே நெடுங்காலம் துறவறம் பூண்டு, இறுதியில் முக்தியடைந்தார் எனவும் கூறப்படுகிறது.

ஹேலாச்சாரியார்

தென்னிந்திய சமண சமய வரலாற்றில் ஹேலாச்சாரியார் என்னும் பெயர் பெற்ற அறவோர் பலர் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து வந்தனர். பொ. மு. அல்லது பொ.யு. ஒன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் கொணகுணலா என்னும் ஊரில் பிறந்த குந்த குந்தராகிய ஹேலாச்சாரியார் காலத்தால் முந்தியவர்.

பொன்னூரிலுள்ள கல்வெட்டு குறிப்பிடும் ஹேலாச்சாரியார் இவ்வூரில் திராவிடகணத்தைச் சார்ந்த துறவி. பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஜுவாலாமாலினியம்மன் வழிபாடு சிறப்புற நடைபெறுவதற்கு இவர் காரணமாக இருந்தார். மேலும் இவருடைய போதனைகளைப் பிற்காலத்தில் இந்திர நந்தியோ கிந்திரர் என்பவர் தொகுத்து ஜுவாலமாலினி கல்பம் என்னும் நூலாக உருவாக்கினார். இவரது நினைவாக பொன்னூர்மலையில் திருவடிகள் செதுக்கப்பட்டு இன்றளவும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. பொன்னூர் ஆதிநாதர் கோயிலிலுள்ள கல்வெட்டு (பொ.யு. 1733) இந்த பாத வழிபாடு பற்றிய செய்தியைக் கூறுகிறது.

ஆதிநாதர் கோயில் சிலைகள்

கல்வெட்டுச் செய்திகள்

ஆதிநாதர் கோயிலின் மகாமண்டபத்தில் மூன்று கல்வெட்டுகளும், பார்சுவதேவர் படிமத்தைச் சுற்றியுள்ள பிரபையில் ஒரு சாசனமும் பொறிக்கப்பட்டுள்ளது. இவை பாண்டிய, விஜயநகரப்பேரரசர்கள் காலத்திலும் அதற்குப் பின்னரும் எழுதப்பட்டது.

  • பாண்டிய மன்னன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனது ஏழாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 1256) வந்தவாசி தாலுகாவிலுள்ள மற்றொரு ஜைனத்தலமாகிய விடால் என்னும் கிராமத்தைச் சார்ந்த சபையோர்கள் பொன்னூரில் ஆதிநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வீடு கட்டிக் குடியேறுபவர்கள் செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் அந்தக் கோயிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்காகவும் கோயிலில் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்வதற்காகவும் ஒதுக்கியிருக்கின்றனர்.
பொன்னூர் பார்சுவநாதர்
  • மகாமண்டபத்தின் உத்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் ஒன்று விஜயநகர அரசனாகிய சாளுவ நரசிம்மனது ஆட்சிக் காலத்தைச் (பொ.யு. 1452 - 1492) சார்ந்தது. இது கோயிலிலுள்ள மூலவரைக் கனகமலையாழ்வார் என்றே குறிப்பிடுகிறது.
  • இம்மண்டபத்தின் மற்றொரு உத்திரத்தில் பொ.யு. 1733 -ம் ஆண்டில் எழுதப்பெற்ற சாசனம் உள்ளது. பார்சுவநாதர் திருவுருவத்தையும், ஜுவாலமாலினியம்மன் படிமத்தையும் பொன்னூர் மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீலகிரிபர்வதத்திற்கு எடுத்துச்சென்று ஹேலாச்சாரியார் திருப்பாதங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டுமென்பதைக் கூறுகிறது.
  • ஆதிநாதர் கோயிலுள்ள பார்சுவநாதர் படிமத்தைச் சுற்றியுள்ள பிரபையில் பொறிக்கப்பட்டிருக்கும் சாசனமும் பொ.யு. 1733-ம் ஆண்டைச்சார்ந்தது. பார்சுவ நாதர் படிமத்தையும், ஜுவாலா மாலினி திருவுருவத்தையும் பொன்னூர் மலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்ற ஹேலாச்சாரியார் திருவடி வழிபாட்டிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடாகியிருக்கும் செய்தியைக் குறிப்பது.
  • பொன்னூரிலுள்ள தெரு ஒன்றில் நட்டு வைக்கப்பட்டிருக்கும் கல்லில் வடமொழியில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று உள்ளது. இதன் வரி வடிவம் பொ.யு. 18-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதில் பார்சுவ தீர்த்தங்கரருக்கு வணக்கம் தெரிவிப்பதாக உள்ள செய்தியும், சில குறியீடுகளும் உள்ளன.

உசாத்துணை


✅Finalised Page