under review

பொன்னித்துறைவன்

From Tamil Wiki
எழுத்தாளர் பொன்னித்துறைவன் (படம் நன்றி: அமுதசுரபி இதழ்)

பொன்னித்துறைவன் (வி. கணேசன்; மும்பை கணேசன்; பம்பாய் வி. கணேசன்) (பிறப்பு: 1934) எழுத்தாளர், கர்நாடக இசைப் பாடகர்; இசை ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். மும்பை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

எஸ். கணேசன் என்னும் இயற்பெயர் கொண்ட பொன்னித்துறைவன், 1934-ல், தஞ்சாவூரை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தி, சம்ஸ்கிருத்தில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

பொன்னித்துறைவன், தனது 21-ம் வயதில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை

பொன்னித்துறைவன் கல்கியின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். அறுபதுகளில் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. தொடர்ந்து பரிசுக் கதைகள், மலர்க் கதைகள் எனப் பல கதைகளை எழுதினார். பொன்னித்துறைவனின் கதைகள், தொடர்கள் பல இதழ்களில் வெளியாகின. மகரம் தொகுத்த காந்தி வழிக் கதைகள் நூலில், பொன்னித்துறைவனின் ’கங்கை எரிகிறது’ என்ற சிறுகதை இடம்பெற்றது. தொடர்ந்து பல சிறுகதைகளை, நாவல்களை எழுதினார்.

எழுத்து பற்றி பொன்னித்துறைவன், “நிறைவில்லாத ஒரு மனம் தான் எழுத்தாகப் பிறவி எடுக்கிறது. உய்வுப் பிணக்கின் உற்பாதங்களால் மூச்சுத் திணறி வெட்டவெளி நோக்கித் தலைதெறிக்க ஓடுவதுதான் எழுதுவது. நிறைவானவனுக்கு எழுதுவது, ஏன் பேசுவது கூட அவசியமில்லை. எழுத்தாளன் எழுத்தை ஆள்பவனல்ல; எழுத்தால் ஆட்டி வைக்கப்படுபவன்.” என்கிறார்.

எழுத்தாளர் பொன்னித்துறைவன் @ மும்பை வி. கணேசன் (படம் நன்றி: தி இந்து இதழ்)

இசை வாழ்க்கை

பொன்னித்துறைவன் இசையை முழுமையாகக் கற்றார். மும்பையில் இசைக் கச்சேரிகள் செய்தார். பல மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்தார்.

மதிப்பீடு

பொன்னித்துறைவன் பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். காந்திய நோக்கிலும், தத்துவப் பின்புலத்திலும் பல கதைகளை எழுதினார்.

உசாத்துணை


✅Finalised Page