under review

பேயோன்

From Tamil Wiki
பேயோன் டிவிட்டர் முகப்பு படம்

பேயோன் (செப்டம்பர் 11, 2009) தமிழ் இலக்கிய உலகின் புனைவு ஆளுமை. தமிழில் கவிதை, புனைவு, கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதிவருகிறார். ஓவியர்.

அறிமுகம்

செப்டம்பர் 11, 2009-ல் டிவிட்டரில் “பேயோன்” (@ThePayon) என்ற கணக்கின் மூலம் அறிமுகமானார். “நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதை விட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன்” என்ற அறிமுகக் குறிப்போடு எழுத ஆரம்பித்தார். 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற நெடுங்கதையில் வரும் பேயோன் என்ற முக்கியப் பாத்திரத்திற்கு வடிவம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

பேயோனின் முதல் நூல் 'பேயோன் 1000' தமிழின் முதல் ட்விட்டர் நுண்பதிவுத் தொகுப்பாக 2010-ல் வெளியானது. இரண்டாவது நூல் 'திசை காட்டிப் பறவை' நெடுங்கதை, சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை அடங்கியது 2010-ல் வெளியானது. ஜனவரி 2012-ல் வெளியான 'காதல் இரவு', 'பாம்புத் தைலம்' ஆகியவை கவிதை, உரைநடைத் தொகுப்புகள். ஜனவரி 2013-ல் 'நள்ளிரவும் கடலும் நானும்' என்ற கவிதைத் தொகுப்பும்(மின்னூல்) 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற உரைநடைத் தொகுப்பும் வெளிவந்தன. அச்சு நூல்களை ஆழி பதிப்பகம் வெளியிட்டது. 2014-ல் 'பிரிட்டிஷ் ஏஜெண்ட்', 'சாட்டையடித் தோலுரிப்பில் கிழிந்து தொங்கும் முகமூடிகளும் வாழ்க்கையின் நிதர்சனம் சக்கையாகப் பிழிந்துபோட்ட சுயங்களும்', 'குமார் துப்பறிகிறார்' ஆகிய மின்னூல்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியாயின. 2016-ல் ”Japonaise” என்ற ஆங்கில கவிதை மின்னூலை வெளியிட்டார்.

நவம்பர் 2011-ல் 'ஓவியத்துவம்' என்ற வெப்காமிக்கைச் சிறிது காலம் நடத்தினார். ஆகஸ்ட் 2012 முதல் ஜனவரி 2013 வரை ஆனந்த விகடன் வார இதழில் 'பேயோன் பக்கம்' என்ற பத்தியை எழுதினார். பேயோன் எழுதிய படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை "லேசில் தீராத பக்கங்கள்" தொகுப்பு நூலாக வெளியானது. வூடி ஆலன், டேவ் பேரி, ஆம்ப்ரோஸ் பியர்ஸ் ஆகியோரின் பாதிப்புகள் இருப்பதாக இந்து தமிழ் திசை பேட்டியில் கூறினார்.

இலக்கிய இடம்

"பேயோன் ஒரு நடுத்தர வயதான, மோசமாக எழுதுகிற, பெண்களை வெறுக்கிற, நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களைக் கையாளத் தெரியாத ஓர் அபத்தக் கற்பனைப் பாத்திரம். எழுதுவதற்கு இந்த அடையாளம் எனக்குத் தேவை." என பேயோன் தன்னைப்பற்றிய பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார்.

"தமிழின் முக்கியமான எழுத்தாளர் அவர் என்பதில் ஐயமில்லை. தமிழில் இப்படி தொடர்ச்சியாக மென்மையான அங்கத எழுத்து வந்துகொண்டிருப்பது அரிய விஷயம். பேயோனை தமிழில் வுடி ஆலனை முன்னோடியாகக் கொண்டு எழுதுபவர் என்று சொல்லலாம். அவருக்கு தமிழில் முன்னுதாரணமாக எவரும் இல்லை. இத்தகைய ஓர் எழுத்து தமிழில் நிகழ்வது வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியது. பேயோன் எழுத்தின் நகைச்சுவை என்பது அவர் சமகால இலக்கியத்தில் எந்தெந்த உட்குறிப்புகள் மூலம் தன் பகடியை அமைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் வாசகர்களுக்குரியது." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

திரைவாழ்க்கை

பேயோன் 'புனைவு' என்ற குறும்படம் இயக்கினார். 2016-ல் 'பறந்து செல்ல வா' என்ற தமிழ்த் திரைப்படத்திற்குத் திரைக்கதையின் உபஆசிரியராகவும் வசன எழுத்தாளராகவும் இருந்தார்.

நூல் பட்டியல்

கவிதை
  • நிகழ்வுகள்
  • என் இடம்
  • உங்களுக்கு மூன்று தடவை ஃபோன் செய்தேன்தேடிச் சோறு
  • எழுதலாம்
  • கடத்தல்
  • மாஸ்டர் பீஸ்
  • மடியில் விழுந்த மலர்
  • வாழ்க லைக்குகள்!
  • குடும்ப மகிழ்ச்சி
  • இருண்ட காலங்கள்(கிண்டில்)
புனைவு
  • முதலையும் சியாமள விகாச பட்சியும் (குழந்தைகளுக்கான புனைவு)
  • ஐந்து ரியோ (குட்டிக் கதை)
கட்டுரை
  • டெவலப்பிங் ஸ்டோரி (புனைகட்டுரை)
  • ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேனே
  • தகவல் தொடர்பு
  • ஒமர் முக்தார்
  • ஈரோடு புத்தகத் திருவிழா
  • ‘மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்’ முன்னுரை
  • லேசில் தீராத பக்கங்கள் (மதிப்புரை)
  • தமிழனின் அடையாளச் சிக்கல்
மொழிபெயர்ப்பு
  • சட்டத்தின் முன்பு (ஃப்ரான்ஸ் காஃப்கா)
  • பிணந்தின்னிக் கழுகு (ஃப்ரான்ஸ் காஃப்கா)
  • பாலம் (ஜெர்மன் மொழிச் சிறுகதை)
ஓவியம்
  • மலர்கள்
  • பேயோன் 1000 (வெளியீடு: 2010, ஆழி பதிப்பகம்)
  • திசை காட்டிப் பறவை (2010, ஆழி பதிப்பகம்)
  • பாம்புத் தைலம் (2011, ஆழி பதிப்பகம்)
  • காதல் இரவு (2011, ஆழி பதிப்பகம்)

இணைப்புகள்


✅Finalised Page