பெண் புத்தி மாலை
பெண் புத்தி மாலை (பதிப்பு: 1882) இஸ்லாம் சமயம் சார்ந்த பெண்களுக்கு நீதி உரைக்கும் தன்மையில் இயற்றப்பட்ட சிற்றிலக்கிய நூல். மாலை அமைப்பில் இயற்றப்பட்ட இந்நூலின் ஆசிரியர், முகம்மது உசைன் புலவர்.
பதிப்பு, வெளியீடு
பெண் புத்தி மாலை நூலின் முதல் பதிப்பு, 1882-ல், குலசேகரப்பட்டணம் சர்க்கலை சாகிபுத் தம்பியின் குமாரர் அல்லா பிச்சைப் புலவரால் திருத்தம் செய்யப்பட்டு, இராமநாதபுரம் இரவுண்ஷாப்புக்கடை முகம்மது இபுறாகீம் சாகிபு அவர்கள் முயற்சியால் கொண்ணூர் மாணிக்க முதலியாரின் மனோன்மணி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதன் அடுத்தடுத்த பதிப்புகள் 1874, 1950, 1993 ஆகிய வருடங்களில் வெவ்வேறு பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
ஆசிரியர் குறிப்பு
முகம்மது உசைன் புலவர் என்று அழைக்கப்படும் மௌலவி முகம்மதுசைன் புலவர் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமியப் புலவர். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர். சின்னக்குழந்தை என்றும் இவர் அழைக்கப்பட்டார். இவர் குறித்த விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இவர் இயற்றிய மற்றொரு நூல், தௌகீது மாலை.
தௌகீது மாலை நூல் தோழிப் பெண்ணை நோக்கி அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது. ஒவ்வொரு கண்ணியும் 'தோழிப்பெண்ணே' என்னும் விளியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நூல் அமைப்பு
மாலை எனப்படும் சிற்றிலக்கிய வகைமையைச் சேர்ந்த பெண் புத்தி மாலை நூலின் தொடக்கத்தில் 'றசூலுல்லா பேரில் முன்னோர்கள் பாடிய கலித்துறைப் பாடல்' என்ற தலைப்பில் எட்டுப் பாடல்கள் இடம் பெற்றன. அதில் முகம்மது நபி, முகியீத்தின் ஆண்டவர், நாகூர் மீறான் சாகிபு ஆண்டவர் ஆகியோர் போற்றப்பட்டனர். அதன் பின் நூல் இடம்பெற்றது. நூலின் தொடக்கத்தில் இரண்டு காப்பு வெண்பாக்கள் இடம் பெற்றன. தொடர்ந்து 258 கண்ணிகளால் அமைந்த பாடல்கள் இடம்பெற்றன.
நூலின் இறுதியில், நபி பெருமான், அவர் மகள் பாத்திமா, பிற நபிமார்கள், நான்கு இமாம்கள், ஹஸரத் அலி அவர்களின் புதல்வர்களான இமாம் ஹஸன், இமாம் ஹுசைன் ஆகியோர் மீதான வாழ்த்து இடம் பெற்றது. தொடர்ந்து இறைநேசச் செல்வர்களான ஒலிமார்கள், தீனோர் ஆகியோர் வாழ்த்தப்பட்டுள்ளனர். பெண் புத்தி மாலையைப் படிக்கும் வாசகர்களும், நூல் கூறும் அறிவுரைப்படி நடக்கும் பெண்களும் வாழ்த்தப்பட்டுள்ளனர்.
உள்ளடக்கம்
பெண் புத்தி மாலை நூலில், பொதுவாக இல்லறத்தில் உள்ள பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும், குறிப்பாக இஸ்லாமிய சமூகம் சார்ந்த பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் பாடல்கள் இடம்பெற்றன. கண்ணியின் முதலடி ஈற்றில் 'மயிலே' என்றும், இரண்டாமடி ஈற்றில் 'குயிலே' என்றும் விளித்துப் பெண்களின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன.
பெண்கள் பூமி அதிர நடக்கக் கூடாது, அதிகம் தூங்கக் கூடாது, வம்பான பேச்சுக்கள் பேசக் கூடாது, பெரியோர்கள் சொல் வார்த்தை மீறக்கூடாது, கோள்கள் சொல்லக் கூடாது, தாய் வார்த்தை தட்டக் கூடாது, கணவனைக் கண்டவுடன் கடுகி எழுந்து நிற்க வேண்டும், கணவனை வெறுக்கக் கூடாது, செய் கூலி குறைத்துக் கொடுக்கக் கூடாது, சண்டைகள் போடக் கூடாது போன்ற பொதுவான கருத்துக்களும், தலையில் முக்காடிட்டு இருக்க வேண்டும், சுன்னத்து நோன்புத் தொழுகை மறக்கக் கூடாது, ஆஷூரா நோன்பு மேற்கொள்ள வேண்டும், ஈமானை நெஞ்சில் இருத்தல் வேண்டும், முரீதுகள் வாங்கி அடுக்கக் கூடாது போன்ற இஸ்லாமிய சமயம் சார்ந்த கருத்துக்களும் இடம் பெற்றன.
பாடல்
அல்லாஹ் வொருவனை அஞ்சி வணங்கிக்கோ மயிலே செயல்
எல்லா மவனென் ஹிருதயத் தெண்ணிக்கோ குயிலே
மூமினோர் முத்து முஹம்மதைப் போற்றிக்கோ மயிலே எங்கள்
ஆமினார் பெற்ற அஹ்மதென் றெண்ணிக்கோ குயிலே
இல்லல்லா வென்றே இருதயம் பற்றிக்கோ மயிலே நபி
ஸல்லல்லா வென்று ஸலாவத்தை யோதிக்கோ குயிலே
காலை முழித்துக் கனிவாயுலுக்கொள்ளு மயிலே இசை
மேலோன் ரஹ்மத்து மேவி யிறக்குவான் குயிலே
பூமியதிரவே பூண்டடி வையாதே மயிலே நல்ல
நேமித்த வாழ்வும் நிறையுங்குழையுமே குயிலே
தூக்கம் பிடித்துடல் சோம்பித்திரியாதே மயிலே அது
ஏக்கம் பிடித்தே இரணங்குறையுமே குயிலே
வம்பான பேச்சுகள் வாயிலெடுக்காதே மயிலே அதிற்
துன்பங்கள் வந்து தொடர்ந்து பிடிக்குமே குயிலே
கணவனைக் கண்டால் கடுகவெழுந்திரு மயிலே நல்ல
மனையாட்டி யென்றுன்னை வாழ்த்திக் கொள்வாரடி குயிலே
பெரியோர்கள் சொல்லை நீ பேணி நடவடி மயிலே அப்பால்
அரிய சுவர்க்க மழகும் பெருவாயே குயிலே
தாய்சொல்லும் வார்த்தை தவறி நடந்தாக்கால் மயிலே நீ
நாய்போ லலறி நரகிற் கிடப்பாயே குயிலே
கோளுகள் சொல்லிக் குடியைக் கெடுக்காதே மயிலே நாளைப்
பாழு நரகிற் பாம்பு பிடுங்குமே குயிலே
தாளாண்மைப்பேசி தரையிழ் கவிழாதே மயிலே நெடுங்
கோடாலிக் கொம்புக் குலத்துக்கே டல்லவோ குயிலே
வீணான பேச்சுக்கு வாணாளை மாய்க்காதே மயிலே கண்ணில்
காணாப் பிறைக்குநீ கையேந்தி நில்லாதே குயிலே
சண்டைக ளிட்டுச் சபையினில் பேசாதே மயிலே அது
கொண்டவனுக்கறி வாண்மை குறைக்குமே குயிலே
இந்தாப் பிடியென் கெடுத்துக் கொடுக்கா மயிலே முன்னர்
சொந்தக் கணவனைத் தேற்றத் தெறியாயோ குயிலே
சூலாகி மெத்தவுந் தூர நடக்காதே மயிலே செய்த
கூலி குறைத்துக் குறைவு கொள்ளாதே குயிலே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:38:02 IST