under review

பெண் குதிரை (நாவல்)

From Tamil Wiki
பெண் குதிரை.jpg
பீர்முகம்மது.jpg

பெண் குதிரை நாவல் மலேசிய எழுத்தாளரான சை. பீர்முகம்மதுவால் எழுதப்பட்டது. பெண்ணியம் சார்ந்த விவாதங்களை முன்வைக்கும் வகையில் இந்நாவல் புனையப்பட்டுள்ளது.

பதிப்பு

பெண் குதிரை 1996-ல் மலேசிய நண்பன் நாளிதழில் தொடர்கதையாக வெளிவந்து அதிக வாசகர்களை எதிர்வினையாற்றவைத்த இந்நாவல் 1997-ல் நாவலாகப் பதிப்பானது. இந்நாவல் முகில் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது. ‘பெண் குதிரை’ நாவலை டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.

பின்புலம்

சை. பீர்முகம்மது பெண்ணின் காமத்தையும் பெண்ணியத்தையும் மையமாகக் கொண்டு இந்நாவலை எழுதியுள்ளார்.

கதைச்சுருக்கம்

கமலவேணி, நாகலெச்சுமி எனும் இருதோழிகளின் ஒழுக்கம் சார்ந்த பிடிமானங்களையும் அதற்காக அவர்கள் முன்நிறுத்தும் நியாயங்களையும் வாதங்களாக்கி இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. இந்நாவலின் முதன்மை கதாப்பாத்திரமான கமலவேணி பல எதிர்மறை குணங்கள் கொண்டவள். கதை சொல்லியாக வரும் கமலவேணியின் தோழி நாகலெச்சுமி கமலவேணிக்கு நன்னெறிகள் கூறுபவளாக இருக்கிறாள். கமலவேணியால் சொந்த வாழ்க்கையில் நாகலெட்சுமி பல பாதிப்புகளைச் சந்தித்தாலும் அவளை நெறிப்படுத்த முயல்பவளாகவும் இருக்கிறாள். ஆனால், அவள் அதில் இறுதிவரை தோல்விகளையே சந்திக்கிறாள்.

கமலவேணி தனக்கான ஆண் துணைகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளின் மேல் மோகம் கொள்ளும் ஆண்கள் படித்த திருமணமான பணக்காரர்களாகத் திகழ்கின்றனர். சமூகம் தூற்றும் குணங்கள் கொண்ட கமலவேணி தீவிர பெண்ணியம் பேசுபவளாகவும் இருக்கிறாள். அவளைப் பெண்ணிய புரட்சியாளராகவே வெளிப்படுத்திக் கொள்கிறாள். தன் கணவன் உட்பட தன்னை பாலியலில் நிறைவு செய்ய முடியாத ஆண்களை ‘பெண் குதிரை’ என்ற சொல்லாடலில் வெறுப்பை உமிழ்கிறாள். அவள் தன்னை நிறைவு செய்ய தோதான ஆண் துணையைத் தேடி தன் தேடலில் தோல்வி அடைகிறாள். இறுதியில் தன்னை ஒருபால் ஈர்ப்பு கொண்டவளாக மாற்றிக் கொண்டு பாலியல் விடுதலை பெறும் எண்ணத்தோடு புதிய ஐரோப்பிய லெஸ்பியன் தோழிகளோடு அவர்கள் நாட்டுக்குச் செல்கிறாள்.

கதை மாந்தர்கள்

  • கமலவேணி - முதன்மை கதாப்பாத்திரம், பல எதிர்மறை குணங்கள் கொண்டவள்.
  • நாகலெச்சுமி - கமலவேணியின் தோழி, கதை சொல்லி
  • மூர்த்தி - கமலவேணியின் கணவன்
  • நாகலெட்சுமியின் கணவன்
  • மணியம் - கமலவேணியின் முதலாளி, பொரியியலாளர், கமலவேணியுடன் மறைமுக உறவில் இருப்பவர்
  • சந்திரன் - பொரியியலாளர், கமலவேணியுடன் மறைமுக உறவில் இருப்பவர்
  • மார்கிரேட் - ஐரோப்பிய தோழி (ஓரின சேர்க்கையாளர்)

இலக்கிய இடம்

பெண்ணியம் என்ற உரிமை போராட்டத்தில் தனிமனித ஒழுக்கம் குறித்த விவாதத்தை புகுத்தி அதை முழுமை படுத்த முடியாத நிலையில் இந்நாவல் திசைமாறிச் செல்கிறது. ஒழுக்கம் சார்ந்து ஆண் பெண் பலகீனங்களின் மீது எடுக்கப்படும் மாறுபாடான நிலைபாடுகளை ‘பெண் குதிரை’ வெளிப்படையாக சாடுகின்றது. ஆயினும், பெண்ணின் மனம் சார்ந்த மென் உணர்வு ஒன்றை உரத்த குரலில் முரட்டுத்தனமாக ஆராய முற்படும் அசட்டு வேகத்தையே இந்நாவல் கொடுக்கின்றது என்று அ.பாண்டியன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jan-2023, 11:53:54 IST