under review

புருனோ மன்சர்

From Tamil Wiki
புருனோ மன்சர்

புருனோ மன்சர் (Bruno Manser)(ஆகஸ்ட் 25, 1954) சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர். 'சுவீஸ் காந்தி' என்று அழைப்பட்ட புருனோ மன்சர், பெனான் பூர்வக்குடி மக்களுக்காகவும் போர்னியோ காடுகளின் அழிப்புக்கு எதிராகவும் நீதி கேட்டுப் போராடியவர்.

பிறப்பு, கல்வி

புருனோ மன்சர் ஆகஸ்ட் 25, 1954-ல் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசல் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் எரிக், தாயார் இடா மன்சர். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் நால்வர். மூன்று பெண்கள், ஓர் ஆண். புருனோ மன்சர் முறைசாரா கற்றல் (Informal Education) வழியில் மருத்துவம் பயின்றார். பிறகு, மேல்நிலைப் பள்ளியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார்.

காந்தியம்

புருனோ மன்சர்

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட வயதை அடைந்தவர்கள் கட்டாய இராணுவ சேவையில் இணைய வேண்டிய நிலை இருந்தது. வன்முறைக்கு எதிரான மனநிலையுடையவராகவும் காந்தியடிகளின் அகிம்சை சிந்தாத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் குணத்தைக் கொண்டவராகவும் திகழ்ந்த புருனோ மன்சர் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட மறுத்தார். இதனால், தமது 19-ம் வயதில் மூன்று மாதக் காலத்தை லூசெர்ன் சிறையில் கழித்தார்.

இயற்கை ஆர்வலர்

1973-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியேறிய புருனோ மன்சர், 12 வருடங்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள மலை சார்ந்த பனிநிலை பசும்புல்நிலங்களில் கால்நடைகளை வளர்த்துப் பராமரிப்பவராக வாழ்ந்தார். கைவேலைப்பாடுகள், மருந்தியல் துறை மற்றும் குகை ஆய்வியல் மீதும் புருனோ மன்சருக்கு அதிகம் நாட்டம் இருந்தது. மலையேறும் கலையையும் அதற்கான உத்திகளையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அதன்வழி தன் உடலை எப்பொழுதும் பயிற்சிப்படுத்திக் கொண்டிருப்பவராகவும் இருந்தார்.

மலேசியா வருகை

Bruno Manser 2.jpg

1983-ம் ஆண்டு மலேசியாவில் உள்ள திரெங்கானு மாநிலத்திற்குத்தான் முதலில் புருனோ மன்சர் சென்றார். அங்குள்ள ஒரு குடும்பத்தில் அடைக்கலம் புகுந்து சிறிதுகாலம் அங்கு தங்கியிருந்தார். திரெங்கானுவில் தங்கியிருந்த காலக்கட்டத்தில், புருனோ மன்சர் மழைக்காடுகளைப் பற்றியும் சரவாக்கில் வாழும் பெனான் பழங்குடியினர்களைப் பற்றியும் ஆழமாகப் படித்து அறிந்து கொண்டார். 1984-ம் ஆண்டு பெனான் பழங்குடியினருடன் இணைந்து வாழ எண்ணம் கொண்ட அவர், பெனான் பழங்குடியினர்களைத் தேடி சரவாக் மாநிலத்திற்குச் சென்றார். எதிர்பாராத விதமாகக் காட்டில் தொலைந்தும் போனார். காட்டில் உண்பதற்கு உணவு இன்றி நச்சுத்தன்மை கொண்ட பனைத் துண்டுகளை உண்டதால் அவருக்கு உடல் நலம் பாதிப்புற்றது. இறுதியாக, பல தடைக்களுக்குப் 1984-ம் ஆண்டு மே மாதம் லிம்பாங் ஆற்றின் முகத்துவாரத்தின் அருகில் உள்ள பெனான் பழங்குடியினரிடம் வந்தடைந்தார்.

பெனான் பழங்குடியினருடன் வாழ்தல்

Bruno Manser 3.jpg

தொடக்கத்தில், பெனான் பழங்குடி சமூகம் புருனோ மன்சரை அந்நியப்படுத்தி புறக்கணித்தனர். சிறு காலம் கடந்த பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். பெனான் மக்களின் தலைவரான அலோங் செகா புருனோ மன்சருக்கு வழிகாட்டியாக அமைந்து, உய்த்து வாழும் திறன், பெனான் மக்களின் கலாச்சாரம், மொழி அனைத்தையும் அறிந்து கொள்ள வழிசெய்தார். நகரவாழ் அடையாளங்களைத் துறந்து உடலில் இடுப்புக்கு கீழ் மட்டும் அரைத்துணி அணிந்து, ஊதுகணைக்குழலால் வேட்டையாடி, பாலூட்டிகள், பாம்பு வகைகள் மற்றும் சவ்வரிசி போன்ற உணவுகளை உண்டு பெனான் மக்களின் வாழ்க்க முறையை முற்றிலுமாக ஏற்று, அவர்களோடு இணைந்து வாழ புருனோ மன்சரும் பழகிக் கொண்டார். புருனோ மன்சர் தன்னிடமிருந்து அனைத்துப் பொருள்களையுமே தூக்கி எறிந்தார். இருந்தபோதிலும், காந்தியடிகளின் நினைவாக மூக்குக்கண்ணாடியை மட்டும் வைத்துக் கொண்டார். புருனோ மன்சர் பெனான் பழங்குடியினரின் மரியாதையைப் பெற்று அவர்களது குடும்பத்தில் ஒருவராக மாறி ‘லாக்கி பெனான்’ எனும் பெயரில் அறியப்பட்டார்.

பெனான் மக்களின் தரவுகள்

பெனான் மக்களுடன் தங்கியிருந்த காலத்தில் சுயமாக வரைந்த வரைபடங்கள், குறிப்புகள் மற்றும் 10,000 குறிப்பேடுகள் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் எனப் பலவற்றைப் புருனோ மன்சர் சேகரித்தார். புருனோ மன்சார் சேகரித்த குறிப்பேடுகள் பாசலில் உள்ள ‘கிறிஸ்டோஃப் மரியன் வெர்லாக்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

காடு அழிப்புகளுக்கு எதிரான குரல்

புருனோ மன்சர், பெனான் பழங்குடியினருடன் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் அங்கு காடழிப்பு வேலைகள் நிகழத் தொடங்கின. புருனோ மன்சர் அங்கு வருவதற்கு முன்பிருந்தே அம்மக்கள் காடழிப்புகளுக்கு எதிராகப் போராடி வந்துள்ளனர். 1980-களின் பிற்பகுதியில் இப்போராட்டம் தீவிரத்தன்மையை அடைந்தது. சில உள்ளூர் நிறுவனங்கள் பெனான் மக்களின் காடுகளுக்குள் ஊடுருவி போர்னியோவின் புராதனமான தனித்தன்மை வாய்ந்த அக்காடுகளை அழிக்கத் தொடங்கின. பெனான் பூர்வகுடிகள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டது. இந்தக் காடழிப்புகளால் உயிர்வாழ்வதற்கு அவசியமான தாவரத்திரள்கள் குறைந்தது மட்டுமில்லாமல், குடிநீரும் மாசுபட்டுப் போனது. இதனால், அங்கு அதுவரை வாழ்ந்த விலங்குகள், பறவைகள், பூச்சிகள் இறந்தும், குரூரமான முறையில் அவ்விடத்தை விட்டு விரட்டியடிக்கவும் பட்டன. காலம் காலமாக பாதுகாத்து வரும் அவர்களுடைய பாரம்பரிய இடங்களும் அசுத்தப்படுத்தப்பட்டது. பெனான் பூர்வகுடிகளின் உரிமைகளும் வாழ்வாதாரங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை அறிந்த புருனோ மன்சர் அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

0000.jpg

காடழிப்புகளுக்கு எதிராகக் கையாண்ட முறைகள்

  • சர்வதேச ஊடகங்களின் பார்வை இப்பிரச்சனையின் மீது படவேண்டும் என்பதற்காக புருனோ மன்சர் அகிம்சை முறையில் சாலைகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினார். இதனால் மலேசிய அரசாங்கம் இவர் மீது அதிருப்தி கொண்டது. 1986-ம் ஆண்டு காவல்துறை புருனோ மன்சரை சிறைபிடிக்க வலை விரித்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காமல் ஆறு வருடங்கள் கழித்து 1990-ம் ஆண்டு அவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். சரவாக்கில் நிகழும் சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட சுவிட்சர்லாந்தை தனது தளமாக பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
  • ‘போர்னியோ மழைக்காடுகளுக்கான குரல்’ என்ற பெயரில் ஓர் உலக சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தார். புருனோ மன்சர், கெலாபிட் ஆர்வலர் ஆண்டர்சன் முட்டாங் உருத் மற்றும் இரண்டு பெனான் பழங்குடி உறுப்பினர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து போர்னியோ மழைக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வுகளைப் பரப்பத் தொடங்கினர்.
  • ஜூலை 17, 1991 அன்று, பணக்கார தொழில்மய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் ஓர் அதிகாரப்பூர்வமற்ற மன்றமான 17-ஆவது ஜி-7 மாநாட்டின்போது லண்டன் ஊடக மையத்திற்கு வெளியே 30 அடி உயர தெரு விளக்கின்மீது ஏறி இரண்டரை மணி நேரம் போராட்டம் நடத்தினார். சரவாக் மழைக்காடுகளின் அவலநிலை குறித்த செய்தியைக் காட்டும் பதாகையை அனைவரும் பார்க்கும்படி காட்டினார். புருனோ மன்சரைத் தவிர்த்து உலகெங்கும் உள்ள பல ஆர்வலர்கள் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் போ ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மாலை 6:30 மணிக்கு மாநாடு முடிவடையும் வரை தடுத்து வைக்கப்பட்டார்.
  • 1991-ம் ஆண்டுக்கு முன்பு, சரவாக் மழைக்காடுகளையும் அதில் வாழும் பூர்வகுடிகளையும் பாதுகாப்பதற்காக ‘புருனோ மன்சர் ஃபாண்ட்ஸ்’ தொடங்கப்பட்டது. புருனோ மன்சர் இந்த இயக்கத்தை சுவிட்சர்லாந்தின் பாசலில் அமைந்திருக்கும் அவருடைய வீட்டிலிருந்து நடத்தி வந்தார்.

சர்ச்சைகள்

  • புருனோ மன்சரின் செயல்பாடுகளால் கோபமடைந்த மலேசிய அரசாங்கம் புருனோ மன்சரை மலேசிய நாட்டின் விரும்பதகாத நபராகவும் அரசின் முதன்மை எதிரி என்றும் அறிவித்து, புருனோ மன்சரைத் தேட சிறப்பு பிரிவுகளை அனுப்பியது. சட்ட ஒழுங்கை சீர்குலைந்ததாகப் புருனோ மன்சர்மீது அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது குற்றம் சாட்டினார்.
  • மலேசிய அரசு, புருனோ மன்சரை மலேசியாவின் வளர்ச்சியைப் பிடிக்காத மேற்கத்திய நாட்டின் கைப்பாவை என்றும் அவரின் போராட்டங்கள் பெனான் மக்களின் வளர்ச்சிக்குத் தடை உண்டாக்கும் துரோகம் என்றும் குற்றம் சாற்றியது. சபா, சரவாக் பழங்குடியினரிடையே இஸ்லாமிய மதம் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான், அவர்களை முன்னிறுத்திய பசுமை போராட்டங்கள் நடைபெறுவதாகவும்கூட பல வகை அதீத கருத்துக்களை மலேசிய அரசாங்கம் வெளியிட்டது.
  • சரவாக் அரசாங்கம் புருனோ மன்சர் போன்ற வெளியாட்கள் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும்படி அறிவித்தது. சரவாக்கின் சுகாதார அமைச்சர் ஜேம்ஸ் வோங் அவர்களாள், பெனான் மக்கள் மலேசிய சமுதாயத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

மறைவு

பிப்ரவரி 15, 2000 அன்று புருனோ மன்சர் தன் நண்பர்களுடன் இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தான் வழியாகப் பெனான் மக்களைச் சந்திக்க சென்றார். மே 25 , 2000 அன்று புருனோ மன்சர் 30 கிலோ எடையுள்ள முதுகுப்பையைச் சுமந்துக் கொண்டு ‘பத்து லாவி’ மலையை ஏறச் சென்றார் என்ற இறுதி தகவல்கள் மட்டுமே பெனான் மக்களின் மூலம் கிடைக்கப்பெறுகிறது.

அதற்குப் பின் நண்பர்கள், குடும்பத்தினர் என்று யாரையும் தொடர்பு கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. காவல்துறையும், அவரோடு சம்பந்தப்பட்டவர்களும் நீண்ட காலம் தேடியும் அவரைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்கவில்லை. மார்ச் 10, 2005 அன்று பாசலில் உள்ள கன்டோனல் சிவில் நீதிமன்றம் காணாமல் போன புருனோ மன்சர் இறந்துவிட்டிருக்ககூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புருனோ மன்சர் மறைவுக்குப் பிறகு, புருனோ மன்சாரால் 1991-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட Bruno Manser Fonds என்ற அரசுசாரா இயக்கம் தொடர்ந்து காடுகளைப் பாதுகாத்தும் காடழிப்பு எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றது.

விருதுகள்/அங்கீகாரங்கள்

  • நவம்பர், 2001-ல் மனித உரிமைகளுக்கான பன்னாட்டு இயக்க விருது(International Society for Human Rights prize for Switzerland) சுவிட்சர்லாந்து நாட்டிற்காக புருனோ மன்சருக்கு வழங்கப்பட்டது.
  • ஜனவரி 2002-ல்பெனான் பழங்குடி உறுப்பினர்களால் மன்சரைக் கொண்டாடும் பொருட்டு ‘தாவாய் விழா’ (Tawai Ceremony) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 2014-ல், சுவிட்சர்லாந்து அறிவியலாளர்கள் புருனோ மன்சரை நினைவூட்டும் வகையில் இனம் அறியப்படாத கோப்ளின் சிலந்திக்கு (goblin spider) ‘அப்போஸ்பிராகிஸ்மா புருனோமன்சேரி’ (Aposphragisma brunomanseri) என்று அவருடைய பெயரைச் சூட்டியுள்ளனர். இச்சிலந்தி புருனோ மன்சர் காணாமல் போன இடமான புலாங் தௌ தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

நூல்கள்

  • Bruno Manser - Voices from the Rainforests: Testimonies of a Threatened People. (1992)
  • Carl Hoffman - The Last Wild Men of Borneo: A True Story of Death and Treasure. (2018)

திரைபடம்

  • நிக்லாஸ் ஹில்பர் - Paradise War: The Story of Bruno Manser (2019)

உசாத்துணை


✅Finalised Page