under review

பெனான்

From Tamil Wiki
பெனான் பழங்குடி மூதாதை

பெனான்: மலேசியப் பழங்குடி, சரவாக் மாநிலத்தின் உள்ள சிறுபான்மை இனக்குழுக்களில் ஒன்றாகும். நாடோடி வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வரும் கடைசி பழங்குடி மக்கள் இவர்களே ஆவர்.

வரலாறு

1950-ம் ஆண்டுகளில் தோம் ஹர்ரிசன் எனப்படும் நாட்டாரியல் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வின் படி 19-ம் நூற்றாண்டு வாக்கில் கயான் மற்றும் இபான் இன மக்கள் மேற்கொண்ட தலையைக் கொய்யும் வேட்டையிலிருந்து தப்ப நாடோடி இனக்குழுக்களாக மாறியவர்களே பெனான் இன மக்கள் எனும் கருதுகோளை முன்வைத்தார். 1970-ம் ஆண்டுகளில் 13000 நாடோடி பெனான் மக்கள் சரவாக் காடுகளில் வாழ்ந்தனர். 1990-ம் ஆண்டுகளில் அவ்வெண்ணிக்கை மெல்ல குறைந்து 350 ஆக சுருங்கியது.

இனப்பரப்பு

இவர்கள் வேட்டையாடி உணவுகளைச் சேகரித்து உலு-பாரம் பகுதியின் உட்புறத்திலும், லிம்பாங் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். 16,000 மக்கள் தொகைக் கொண்ட பெனான் சமுதாயத்தில் பலரும் இன்னும் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர்.

பண்பாடு

காடுகளில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரைத் தொடர்பு கொள்ள இலைகளையும் குச்சிகளையும் அடுக்கித் தகவலைப் பரிமாறிக் கொள்வர். பெரும்பாலும் காடுகளில் சூழும் ஆபத்துகளையே வெவ்வேறு விதமான குச்சி,இலைகளை அடுக்கும் விதங்களின் வாயிலாக வெளிப்படுத்துவர்.

சக பெனான் இனத்தவரின் முடி அல்லது விரல்களைத் தொட்டுத் தங்கள் வணக்கத்தைத் தெரிவிப்பர். அண்ணன் எனப் பொருள்படும் ‘பாடி’ என ஒருவருக்கொருவரை மரியாதையாக விளித்துக் கொள்வர். அவன், அவள், இது மற்றும் அறுவரைக் குறிக்க நாம் ஆகிய விளிச்சொற்களே பெனான் பழங்குடியினத்தில் உள்ளன. உணவைப் பகிர்ந்துண்ணுதல் என்பது பண்பாட்டு நிகழ்வாகவே இருப்பதால் நன்றி என்பதற்குத் தனித்த சொற்கள் அவர்கள் மொழியில் இல்லை. அதைப் போல மரங்களைக் குறிக்க நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இருந்தாலும், காடுகளைக் குறிப்பதற்குத் தனித்தச் சொல் இல்லை.

பெனான் மக்கள்

பெனான் மக்கள் காடுகளைப் பெரிதும் மதிக்கின்றனர், காடுகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருட்கள், மூலிகை மருந்துகள், பிரம்புகள், உண்ணத்தகுந்த பறவைக்கூடிகள், காளான்கள், பழங்கள், தேன், பிசின் எனப் பலவற்றையும் கொண்டே தங்கள் தேவையை நிறைவு செய்து கொள்கின்றனர். அவற்றைப் பண்டமாற்றாகக் கொண்டு உணவு, உடை, ஆயுதங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். காட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் உணவு, விலங்குகள், மரங்கள், செடி வகைகள் என அனைத்தையும் சீராக அடையாளம் கொண்டு ஒன்றுக்கொன்று இணைந்த வாழ்வொன்றைப் பெனான் மக்கள் அமைத்திருக்கின்றனர்.

நாட்டுத்துப்பாக்கி கொண்டு வேட்டையாடும் பெனான் இனத்தவர்
வேட்டை

பெனான் மக்கள் நீண்ட மூங்கில் குழாயில் நச்சம்புகளை ஏவி வேட்டையாடுவர். குரங்குகளையும், காட்டுப்பன்றிகளையுமே அதிகமாக வேட்டையாடுவர். மேலும், உடும்பு, பாம்புகளையும் வேட்டையாடி உண்கின்றனர். பெனான் மக்கள் தடித்த மரக்கட்டையில் செதுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடுகின்றனர். விலங்குகளை உணவுத்தேவைக்காக மட்டுமே கொல்ல வேண்டுமென்பதைக் கடைபடிக்கின்றனர்.

நாடோடி வாழ்க்கை

மொழியியல் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக, பெனான் மக்கள் மேற்கு பெனான் மற்றும் கிழக்கு பெனான் என இரண்டு பிரிவினர்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். வர்க்க படிநிலைகளைக் கொண்ட சில பழங்குடி மக்களைப் போலல்லாமல், பெனான் மக்கள் மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு என வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் சமத்துவம் கடைப்பிடித்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

பெனான் மக்களின் நாடோடிக் குழுக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து முதல் ஆறு பேர் வரையிலும் சில குழுக்களில் 30 பேர் வரையிலும் இருக்கின்றனர்.ஒவ்வொரு குழுவிலும் தலைவராக ஒருவர் இருக்கிறார். இருந்தப்போதிலும், குழுவில் இருக்கும் மூத்தவர்களுக்கே மரியாதை வழங்கப்படுகிறது. பெனான் மக்களின் முதன்மை உணவுப்பொருளான சவ்வரிசி மாவு காட்டின் வெவ்வேறு பகுதியில் கிடைக்கப்பெறுவதால் அதற்கேற்றப்படி நாடோடிக் குழுக்கள் ஒன்று சேர்வதும் பிரிவதும் நிகழ்கிறது. ஏறக்குறைய 100 சதுர மைல்கள் பரப்பளவுக்குள் உணவுப்பொருட்களைத் தேடி பழைய குடில்களை விட்டு செலாப் எனப்படும் குடில்களைக் கட்டிக் குடியேறுகின்றனர். பெனான் மக்கள் புதிய இடங்களுக்கு மிகச்சொற்பமான பொருட்களையே தாங்கி செல்கின்றனர். முதுகில் பிரம்பால் பின்னப்பட்ட கூடையைத் தாங்கி செல்கின்றனர். தரையிலிருந்து நான்கடி உயரத்தில் பிரம்புகளைப் பிணைத்துக் குடில்கள் கட்டப்படுகின்றன. சேற்றுப்பகுதியைச் சற்றே மேடாக்கி சமையல் பொருட்களை வைப்பதற்கான மரத்தால் ஆன சிறிய வைப்பறையை வைத்திருப்பர். குடிலின் கூரையைக் காட்டிலிருக்கும் பனைமர இலைகளால் வேய்ந்திருப்பர். நவீன மாற்றத்தால், தார்பாயைக் கொண்டே குடிலுக்கான கூரையை அமைக்கின்றனர்.

சமயம்

பெனான் மக்கள் ஊதுகணைக்குழல் (sumpit) ஒன்றை சுயமாக தயாரித்து வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துவார்கள். பெனான் மக்கள் பாலூட்டிகள், பாம்பு வகைகள் மற்றும் சவ்வரிசி போன்ற உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். பெனான் பழங்குடி மக்களும் ஆன்மவாதம் சார்ந்த நம்பிக்கையைக் கடைபிடிக்கின்றனர். காட்டில் உள்ள ஒவ்வொரு விலங்கு, மரம், ஆறு, ஓடை மற்றும் பாறை ஆகிய அனைத்தினுள்ளும் ஆத்மா இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். காட்டில் செழிப்பாக வாழ இவர்கள் அந்த ஆத்மாக்களுடன் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்று கருதுவார்கள்.

மொழி

பெனான் மக்கள் பெனான் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். பெனான் மொழி மலாயோ-போலினேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

கலை

இசைக்கருவிகள்

பெனான் பழங்குடியின் பாரம்பரிய இசைக்கருவிகளான ‘கெரிங்கோட்’ ஒரு மூக்கின் வழி வாசிக் கூடிய புல்லாங்குழல், ‘பாகாங்’ என்னும் கருவி ஒரு மூங்கில் கிட்டார் மற்றும் ‘ஓரெங்’ அல்லது ‘இலுட்’ எனப்படுவது வாய் மற்றும் கைகளைக் கொண்டு வாசிக்கக் கூடிய புல்லாங்குழல். பெனான் மக்கள் பயன்படுத்தும் கருவிகள் மற்ற போர்னியோ பூர்வீகவாசிகளிடமிருந்து பெரிய அளவில் வேறுப்பட்டு இருக்கும். அவர்கள் உருவாக்கும் பெரும்பாலான கருவிகள் காட்டில் இருந்து பெறக்கூடிய பொருள்களைக் கொண்டு இலகுவாக பயன்படுத்தகூடியதாக இருக்கும்.

பெனான் பழங்குடி இசைக்கருவிகள்

பெனான் மக்கள் மிகவும் விரும்பி பயன்படுத்தக்கூடிய கருவிகளில் ஒன்று “ஓரெங்” (oreng) ஆகும். இக்கருவி சேகோ மரத்தின் கிளை வெட்டுக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த இசைக்கருவி பொதுவாக பெனான் பெண்களால் மகிழ்ச்சியான மற்றும் கவலையான உணர்வுகளை வெளிப்படுத்த வாசிக்கப்படுகிறது. பெனான் பழங்குடியினரின் நம்பிக்கைப்படி “ஓரெங்” இசைக்கருவியை பெண்கள் மட்டுமே வாசிக்க முடியும். அதையும் மீறி, ஆண்கள் இக்கருவியை வாசித்தால் அவர்கள் காட்டில் தொலைந்து போவார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை. மேலும், பண்டிகை நாட்களில் மற்றும் கிராமத்திற்கு ஏதேனும் விருந்தினர்கள் வந்தாலும் கூட இவ்விசைகருவி இசைக்கப்படும். “ஓரெங்” ஒரு நுட்பமான மற்றும் மென்மையான கருவியாகும். காரணம், இதை நாக்கு மற்றும் வாயைப் பயன்படுத்தி வாசிப்பதற்கு மிக நுட்பமான திறன்கள் தேவை எனச் சொல்லப்படுகிறது. மேலும், இக்கருவியின் சிறப்பு அம்சம் ஒலி சுருதியை பல்வேறு தடிமன்களில் செதுக்குவதன் மூலம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இறப்புச் சடங்குகள்

பெனான் பழங்குடியினர் தங்கள் வாழ் நாளில் இறப்பை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்பது மட்டுமில்லாமல் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக பல சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கடைப்பிடிகின்றனர். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி நிலை அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் தலைமுறைகளாக வித்தியாசமான வழக்கங்களைக் கொண்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இறந்து அவர்களுடைய உடல் புதைக்கப்படும் இடங்களுக்கு அருகில் சத்தம் போடக்கூடாது. இறந்த நபரை அடக்கம் செய்த பிறகு, அம்மக்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்தை நோக்கி வாழச் செல்வார்கள். மேலும், இறந்தவர்களின் பெயரை சொல்ல பெனான் மக்களிடையே அனுமதி இல்லை. அந்த இறந்த நபரைக் குறிப்பிட வேண்டிய சூழல் வந்தால் அவர் எங்கு புதைக்கப்பட்டார் என்ற இடத்தின் பெயரையே சொல்ல வேண்டும்.

பெனான் மக்கள் வாழ்க்கை அச்சுறுத்தல்

பெனான் மக்களின் நாடோடி வாழ்க்கைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பது காட்டுமர அழிப்பே ஆகும். 1970-களில் சரவாக்கில் அனுமதிக்கப்பட்ட காட்டுமர அழிப்பு பெனான் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. தளவாடப்பொருட்களைத் தயாரிக்கவும் செம்பனைமரங்களை நடவு செய்யவும் பல்லாயிரக்கணக்கான காடுகள் சரவாக் மாநிலத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன.

அணைக்கட்டுகள்

ஹைட்ரோ மின்சாரம் எனப்படும் அணைக்கட்டுத் தேக்கங்களிலிருந்து உருவாக்கப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய பெரும் பகுதி காடுகளில் நீர்தேக்க பகுதிகளாக மாற்றப்படுகின்றன. Score எனப்படும் சரவாக் மாநில புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் திட்டத்துக்காக 105 கோடி டாலர்கள் பெரும் முதலீட்டுத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பக்குன் அணைக்கட்டுத் திட்டத்தால் ஏறக்குறைய 9000 பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்தனர்.

மிஷினரிகள்

19 -ம் நூற்றாண்டில் சரவாக் மாநிலத்தில் கிருஸ்துவ மிஷினரிகள் கிருஸ்துவ சமயப் போதனைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால், பெனான் மக்கள் பலரும் கிறிஸ்துவச் சமயங்களைத் தழுவி தங்கள் பூர்வநம்பிக்கைகளைக் கைவிட்டனர்.

புருனோ மன்சர் பெனான் மக்களுடன்
புருனோ மன்சரும் பெனான் மக்களும்

புரூனோ மன்சர் எனப்படும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளர் சரவாக் காடுகளில் பெனான் மக்களுடன் 1984 முதல் 1990 வரையில் வசித்திருக்கிறார். பெனான் மக்களைப் போன்றே காடுகளில் வேட்டையாடி, உணவு உண்டு வாழ்ந்திருக்கின்றார். பெனான் மக்களுக்கு நேர்ந்த வாழ்வாதாரச் சிக்கல்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் போராட்டத்துக்குத் துணை நின்றார்.

போராட்டங்கள்

சரவாக் மாநில அரசாங்கம் பெனான் பழங்குடி மக்களின் நிலத்தின் மீதான உரிமையை அங்கீகரிக்கவில்லை. 1970-களில் இருந்து, சரவாக் முழுவதும் வணிக நோக்கத்திற்காக பழங்குடியினரின் பெரிய அளவிலான நிலங்களின் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டில், பல பெனான் சமூகங்கள் தங்கள் நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காடுகளை அழிக்க வரும் நிறுவனங்களின் வாகனங்களை மறித்து சாலைகளில் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வின் போது நூற்றுக்கும் மேற்பட்ட பெனான் மக்கள் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இன்று வரை பல பெனான் பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திற்காக அதை அபகரிக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு எதிரான முற்றுகைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

தொன்மக்கதைகள்

பெனான் இன மக்கள் தொன்மத்தின்படி ஆதியிலே நீரும் வானும் சுழலாத நிலவும் சூரியனுமே இருந்தன என நம்பப்படுகிறது. பின்னர், பூமியில் இடைவிடாமல் கல்மழை பொழிந்தது. அந்தக் கற்கள் கரைந்து சேறாகியப் பின்னர் அதிலிருந்து மண்புழுக்கள் தோன்றின. அவ்வாறே இன்றிருக்கும் உலகம் உருவானதென நம்பப்படுகிறது. அதன் பின்னர் சூரியனிலிருந்து விழுந்த பெண்மரமும் நிலவிலிருந்து விழுந்த ஆண் மரமும் இணைந்து வேர்கள் கொண்ட மனிதர்களைப் பெற்றனர். பூமிக்கு வந்ததும் காட்டில் இருந்த மரங்கள் சூறைக்காற்றுக்கு ஒன்றை மற்றொன்று தழுவிக் கொண்டதைப் பார்த்து ஆண் மனிதமரமும் பெண் மனிதமரமும் புணர்ந்து பிள்ளைகள் பெற்றனர். விலங்குகளை வேட்டையாடோம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கு ஈடாக விலங்குகளிடமிருந்து கால்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் வந்த தலைமுறையினர் விலங்குகளுடனான ஒப்பந்தத்தை மீறி விலங்களை வேட்டையாடத் தொடங்கினர். அதனால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சண்டை மூண்டது. அந்தச் சண்டையின் இறுதியில் உணவுக்காக மட்டுமே மனிதர்கள் வேட்டையாடவேண்டுமென்றும் இரைவிலங்குகளின் ஆன்மாவை மனிதர்கள் வாழ்த்த வேண்டுமென்றும் முடிவு எடுக்கப்பட்டது. பெனான் மக்களின் தொன்மத்தை நினைவுகூறும் பொருட்டு இறந்தவர்களின் உடல் மரத்திலேயே புதைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page