under review

பிரமிளா பிரதீபன்

From Tamil Wiki
பிரமிளா
கட்டுபொல நூல் வெளியீடு
பிரமிளா பிரதீபன்

பிரமிளா பிரதீபன் ( 26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

பிறப்பு - கல்வி

கிழக்கு இலங்கையின் பொத்துவில் பிரதேசத்தில் மார்ச் 26, 1984-ல் பிறந்தார். தந்தை பெயர் செல்வராஜா. தாயார் பெயர் சிவகாமி. பிரமிளா தனது ஆரம்ப கல்வியினை ஊவா கட்டவளை தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் பயின்றார். அதன் பிறகு, தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பட்டக் கல்வியை நிறைவுசெய்தார். தற்போது கொழும்பு நல்லாயன் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றுகிறார்.

தனி வாழ்க்கை

பிரமிளாவின் கணவர் பெயர் பிரதீபன். மூத்த மகன் சந்தோஷ். மகள் பெயர் லித்திர்ஷா. தற்போது கொழும்பில் வத்தளை பிரதேசத்தில் வசித்துவருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பிரமிளா

இலங்கையிலுள்ள சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியதன் மூலம் இலக்கியத்தில் நாட்டம் பெற்ற பிரமிளா, 2007-ஆம் ஆண்டு புரவலர் புத்தகப் பூங்காவில் வெளியான “பீலிக்கரை" - என்ற சிறுகதைத் தொகுதியின் ஊடாக எழுத்துலகில் கவனம் பெற்றார். 2010- ஆம் ஆண்டு மல்லிகைப் பந்தல் ஊடாக “பாக்குப்பட்டை" - என்ற இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியானது. இந்த சிறுகதைத் தொகுதி உபாலி லீலரத்னவால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, கொடகே பதிப்பகத்தினால் வெளியானது.

2017-ஆம் ஆண்டு வெளியான இவரது "கட்டுபொல்" என்ற முதலாவது நாவல், இலங்கைத் தமிழ் வாசகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தென்னிலங்கையின் இகல்கந்த என்ற இடத்தில் செம்பனை என்ற மரச்செய்கையில் ஈடுபடுகின்ற தோட்ட மக்களது துயரங்களைப் பதிவு செய்த இந்த நாவல், புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர்களின் உலகத்தை வெளிக்கொண்டுவந்திருந்தது.

பிரமிளாவின் சிறுகதைகள் இணைய சஞ்சிகைகளில் வெளிவரத் தொடங்கி தமிழகத்திலும் பரந்த கவனத்தைப் பெற்றன. 2022-ல் “விரும்பித் தொலையுமொரு காடு" என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுதி யாவரும் பதிப்பகத்தின் ஊடாக வெளியானது.

இலக்கிய இடம்

இலங்கையில் வடக்கு - கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போர் தவிர்த்து வேறு காரணிகளால் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற அன்றாடச் சிக்கல்கள் ஆகியவற்றை தென்னிலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளராக பிரமிளா பிரதீபன் தனது எழுத்துக்களில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார். கூடுதலாக, மலையக பெண்களின் இடர்கள் மற்றும் தலைநகர் வாழ்க்கை நெருக்கடிகள் ஆகியற்றிலிருந்து தான் பெற்ற அவதானிப்புக்களை பிரமிளா கதைப்படுத்தியிருக்கிறார்.

பிரமிளா பிரதீபனின் சிறுதைகள் குறித்து பேராசிரியர் அ.ராமசாமி “வடிவச் செழுமையும் மொழிப்பயன்பாடும் கைபிடித்துக்காட்டும் காட்சிச் சித்திரங்களும் கொண்ட பிரமிளாவின் கதைகள் வாசிப்புத்திளைப்பைத் தரும் வல்லமையுடைய கதைகள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்" என்கிறார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • பீலிக்கரை (புரவலர் புத்தகப் பூங்கா - 2007)
  • பாக்குப்பட்டை (மல்லிகைப் பந்தல் - 2010)
  • விரும்பித் தொலையுமொரு காடு - (யாவரும் 2022)
நாவல்
  • கட்டுபொல் (கொடகே - 2017)

உசாத்துணை

வெளி இணைப்பு