ஜீவ கரிகாலன்
- கரிகாலன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கரிகாலன் (பெயர் பட்டியல்)
ஜீவகரிகாலன் (ஜீ.காளிதாசன்) (பிறப்பு: ஆகஸ்டு 02, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர். யாவரும்.காம் இதழின் ஆசிரியர். யாவரும் பதிப்பகத்தின் நிறுவனர்.
பிறப்பு, கல்வி
ஜீவகரிகாலன் தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயிலில் ஆகஸ்டு 02, 1984 அன்று ஜீவானந்தம் - சிவகாமி இணையருக்கு பிறந்தார். அருப்புக்கோட்டை, நாகலாபுரம், கரூர், வெள்ளியனை கிராமம், தூத்துக்குடி என வெவ்வேறு ஊர்களில் பள்ளிக்கல்வியும் கரூரில் கல்லூரிப் படிப்பும் முடித்தார். சிற்பம் மற்றும் ஓவியம் மீதும் ஈடுபாடு கொண்டவர்.
தனிவாழ்க்கை
பிப்ரவர் 10, 2019-ல் திருமணம். மனைவி பெயர் அகிலா அலெக்ஸ்சாண்டர். ஜீவகரிகாலன் சென்னையில் வசித்து வருகிறார். கல்லூரி முடித்து முதல் ஒரு வருடம் பல்பொருட்கள் சந்தைப்படுத்துதல் துறையில் நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார். அதன்பின்னர் இரண்டு வருடம் பங்குவர்த்தகத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் பத்தாண்டுகள் சுங்கத்துறையில் முகவராகவும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாளராகவும் இருந்தார்.
இதழியல்
ஜீவகரிகாலன் 2015 முதல் 2019 வரை கணையாழி இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். யாவரும்.காம் (புதுயுகத்தின் முகம்) என்கிற இணைய இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஜீவகரிகாலனின் முதல் சிறுகதை 2012ம் ஆண்டு தினமலர் சென்னை சிறப்பிதழில் வெளியானது. மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. முதல் தொகுதியான ட்ரங்கு பெட்டிக் கதைகள் - சிறுகதை தொகுப்பு 2016-ல் வெளியானது. நாஞ்சில் நாடன் மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோரை தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியச் செயல்பாடுகள்
- ஜீவகரிகாலன் தன்னுடைய யாவரும் பதிப்பகம் வாயிலாக பல புதிய எழுத்தாளர்களின் முதற்புத்தகக்கத்தை வெளியிட்டுள்ளார்.
- சிறுகதை மற்றும் குறுநாவல் போட்டிகள் நிகழ்த்தியுள்ளார்.
- பி ஃபார் புக்ஸ் (be4books) என்னும் புத்தக விற்பனை தளத்தையும் நிர்வகித்து வருகிறார்.
இலக்கிய இடம்
ஜீவகரிகாலன் இலக்கியச் செயல்பாட்டாளர் எழுத்தாளர் என இரு வகைகளில் முக்கியமானவர். யாவரும் பதிப்பகத்தை புதிய இலக்கியவாதிகளுக்கான களமாக நடத்தி வருகிறார். இயல்பான வாழ்க்கையை மாறுபட்ட உத்திகள் வழியாகச் சொல்லும் கதைகள் அவருடையவை.
நூல்கள்
- டிரெங்குப் பெட்டிக் கதைகள் - சிறுகதை தொகுப்பு - 2016
- கண்ணம்மா - சிறுகதை தொகுப்பு - 2017
- ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை & பிற கதைகள் - சிறுகதை தொகுப்பு - 2022
இணைப்புகள்
- யாவரும்.காம்
- be4books – தமிழ்ச் சூழலில் புழங்கும் முக்கியமான நூல்கள் உட்பட அனைத்து நூல்களையும் இணையம் வழியாக வாங்கிடவும், எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் குறித்த கட்டுரைகளை வாசிக்கவும், இலக்கிய நிகழ்வுகள், புத்தகத் திருவிழாக்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் ஒரே தேடலில் சாத்தியப்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
- ஜீவ.கரிகாலன் இணையதளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:32 IST