under review

பிசாயா

From Tamil Wiki
பிசாயா இன முன்னோர்

பிசாயா (Bisayah) மலேசியப் பழங்குடிகள். மலேசியாவில் வடமேற்கு போர்னியோவின் பழங்குடியின மக்கள் ஆவர். பிசாயா இனக்குழுவினர் தற்போது அதிகமாக சரவாக் மாநிலத்தின் வடக்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

மொழி, இனம்

பிசாயா பழங்குடி மக்கள் முருட் மக்களின் கிளைகளில் ஒன்றாக தோன்றியவர்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் முருட் மொழியைத் தங்கள் தாய்மொழியாக கொண்டுள்ளனர். பிசாயா மொழியில் கணிசமான அளவு மலாய் மொழி சொற்கள் கலந்திருக்கின்றன. லிம்பாங் மாவட்டத்தில் வசிக்கும் பிசாயா இன மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் நுண்ணிய வேறுபடுகளுடன் பிசாயா மொழி பேசப்படுகிறது. இம்மொழியில் வாய்மொழி இலக்கியமோ அல்லது அச்சு இலக்கியமோ வெளிவரவில்லை.

பிசாயா இன மக்கள் பண்பாட்டு அடிப்படையில் கடையன், மூருட் இன மக்களுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருப்பினும், மொழிவழியாகவும் பண்பாட்டு அடிப்படையிலும் சபாவில் வசிக்கும் டுசுன், மெலானாவ் இன மக்களுடன் மட்டுமே தங்களை பிசாயா இன மக்கள் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர்.

இனப்பரப்பு

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 7,000 பிசாயா பழங்குடியினர் சரவாக்கில் வாழ்ந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வரலாற்றில் பிசாயா இன மக்கள்

சரவாக் மாநிலத்தில் ஜேம்ஸ் புரூக்ஸ் தலைமையிலான ஆங்கிலேய ஆதரவு ஆட்சியை எதிர்த்து வந்த பெங்கிரான் மக்கோத்தாவைத் 1858-ல் தாக்கிக் கொன்றவர் பிசாயா இனத்தைச் சேர்ந்த படைவீரர். 1890-ல் புரூனை நாட்டிலிருந்து லிம்பாங் மாவட்டத்தை விடுவித்து சார்ல்ஸ் புரூக்ஸ் தலைமையிலான ஒருங்கிணைந்த சரவாக் மாநிலத்துடன் இணைக்கவும் பிசாயா மக்கள் உதவி புரிந்திருக்கின்றனர். பிசாயா மக்களின் உதவிக்கு ஈடாக புரூனை நாட்டிலிருந்து லிம்பாங் மாவட்டத்துக்குக் குடியேற சரவாக் அரசு அனுமதி அளித்தது.

தொன்மம்

பிசாயா இன மக்கள் தொன்மத்தின் படி சபா மாநிலத்தில் இருக்கும் கினபாத்தாங்கான் ஆற்றங்கரையைச் சேர்ந்த பெண்ணுக்கும் அயல்நாட்டு ஆடவர் ஒருவருக்கும் ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தனர். புரூனை மக்கள் வழக்கப்படி எழுவரில் அரசரைத் தேர்ந்தெடுக்க படகுப்போட்டி நடத்தப்பட்டது. அவர்களின் லோக் பத்தாலா என்பவன் படகுப்போட்டியில் வென்று புரூனையின் அரசனாக அரியனை ஏறினான். அவனே பின்னாளில் இசுலாமியச் சமயத்தைத் தழுவி சுல்தான் முகமட் என அறியப்பட்டான். படகோட்டப்போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்த கெராம்பாக் என்பவன் சரவாக் மாநிலத்தின் லிம்பாங் மாவட்டத்துக்குப் புலம்பெயர்ந்தான். அதைப் போல படகோட்டப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பிடித்தவன் துத்தோ மாவட்டத்துக்கும் நான்காமிடத்தைப் பிடித்தவன் படாஸ் மாவட்டத்துக்குமென ஆளுக்கொரு மாவட்டத்துக்குப் புலம்பெயர்ந்தனர். பிசாயா மக்களின் முதல் பதிவு செய்யப்பட்ட வரலாறு லிம்பாங் மாவட்டத்தில் 1956 முதல் 1858 வரையில் பயணம் செய்த ஸ்பென்சர் செயின்ட் ஜோனின் பயணக்குறிப்புகளில் காணப்படுகிறது.

சமயம்

பிசாயா மக்கள் ஆன்மவாதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்கள். நீர், நிலம், ஆகாயம் ஆகியவற்றிக்கு ஆன்மா உள்ளதாக நம்புகிறார்கள். ஆன்மவாத நம்பிக்கை கொண்ட பிசாயா இன மக்களின் மூத்தோர்களின் ஆவிகள் சிலரின் உடல்வழியே வெளிப்பட்டு வாக்கு சொல்லும் சடங்கு பின்பற்றப்பட்டது. இறந்துபோனவர்களின் எலும்புகள் பெலியான் மரத்தால் ஆன பெட்டியில் கிடத்தி வைக்கப்படும். கோங் தாளக்கருவியை மூன்று நாட்களாக இசைத்து பிசாயா இன முன்னோர் ஆவி எழுந்த பூசகர்கள் மருளாடி குறி சொல்வர்.

வாழ்க்கை முறை

பிசாயா மக்கள் ஆற்றோரங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். நிலத்தை எரித்து சுத்தப்படுத்தி பின் பயிரிடும் செயல்முறையைப் பயன்படுத்தி பாரம்பரியமாக அரிசி, சாகோ பனை, காய்கறிகள் போன்றவற்றை பிசாயா மக்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.மேலும், விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமின்றி கோழி, வாத்து, ஆடு, எருமை, மாடுகள் மற்றும் பலவகையான கால்நடைகளை வளர்க்கும் வழக்கமும் பிசாயா மக்களிடம் உண்டு. பிசாயா மக்கள் ஆறு மற்றும் கடலில் இருந்து மீன் பிடிப்பதில் திறமைவாய்ந்தவர்கள். இவர்களால் மற்ற பழங்குடி மக்களைக் காட்டிலும் நீண்ட நேரம் நீருக்கடியில் மூச்சைப் பிடித்து நீந்த முடியும்.

கலை/கருவி

இசைக்கருவிகள்

குளிந்தங்கன் (Kulintangan), காங் (gong) ஆகியவை பிசாயா பழங்குடியின் பாரம்பரிய இசைக்கருவிகள். இந்த இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கியவுடன் ஆண் பெண், பெரியவர்கள், சிறியவர்கள் என பேதம் இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர நடனம் ஆடத் தொடங்கிவிடுவார்கள். திருமண விழா மற்றும் முக்கிய நபர்களை கொண்டாடும் நிகழ்வுகளில் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன.

கோங்

சரவாக் மாநிலத்தின் மிக முக்கியமான இசைக்கோர்வையாகக் கருதப்படும் கம்பிட் கதுஞ்சாங் (Kambit Katunjang) எனப்படும் கோங் தாளக்கருவியை முதன்மையாகக் கொண்டு இசைக்கப்படும் இசைக்கோர்வையை இசைப்பதில் பிசாயா இன மக்கள் தேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த இசைக்கோர்வை வெண்கலத்தால் ஆன ஒரு பெரிய தாளக்கருவியையும் குலிந்தாங் எனப்படும் சிறிய தாளக்கருவியையும், வயலின்களைக் கொண்டும் இசைக்கப்படுகிறது. இவற்றைத் தவிர உடும்புத் தோலால் ஆன தாளக்கருவி, செங்குரோங் (Sengkurong), காலிட்(Kalid), அகோங் (Agong), கெலெந்தாங்கான் (Kelentangan), தவாக் (Tawak), பெபான்டில் (Bebandil) மற்றும் பாண்டில் தெரெதேக் (Bandil Teretek) ஆகிய இசைக்கருவிகளும் பின்னணி இசைக்கருவிகளாக இசைக்கப்படுகின்றன.

ஆயுதம்

பிசாயா பழங்குடி மக்கள் இசைக்கருவிகள் மட்டுமின்றி பலவிதமான ஆயுதங்களை செய்வதிலும் வல்லவர்கள். இவர்கள் மானாவ் அல்லது மெனாவ் (Manao/Menou) என்றழைக்கப்படும் கத்திகளைச் செய்வதிலும் தேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். வெண்கலப் பூணிட்ட கத்தியைப் பிசாயா இனத் திருமணத்தின் போது மணமகன் கையிலேந்தியிருப்பான். தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படும் ங்காயாவ் (Ngayau) மற்றும் சண்டோங் (Sandong) எனப்படும் கத்திகளைச் செய்வதிலும் பிசாயா இன மக்கள் தேர்ந்தவர்கள்.

பண்டிகை

எருமைப்பந்தையம்

'பாபுலாங்' என்னும் திருவிழா பிசாயா பழங்குடி மக்களால் முக்கியமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இப்பண்டிகையின் போது பிசாயா பழங்குடியின் இசை, பாடல்கள், நடனங்கள், பாரம்பரிய உடைகள், அலங்காரங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. பாபுலாங் போட்டி மற்றும் நீர் எருமை பந்தயம் ஆகியவை இந்நிகழ்வின் மிக முக்கிய அங்கங்களாகும்.

திருமணச் சடங்குகள்

பிசாயா இனத் திருமணம் ஐந்து முதன்மையான சடங்குகளைக் கொண்டது. நுலசோ (Nulasoh) எனப்படும் சடங்கில் திருமண வயதை எட்டிய மணமகனின் குடும்பத்தார் மணமகளைக் கண்டு திருமணத்துக்கான ஏற்பைப் பெறுவர். அதன் பின்பான பசுருஹ் சடங்கில் (Basuruh / Barian) மணமகளின் பெற்றோரும் உறவினர்கள் சிலரும் பரிசுப்பொருட்களை எடுத்துக் கொண்டு மணமகன் குடும்பத்தாரிடம் அளித்துத் திருமணத்தை உறுதிச் செய்வர். மணமகளின் பொருளியல் பின்னணிக்கேற்ப பரிசுபொருட்கள் அல்லது மோதிரத்துடன் பணமும் அளிக்கப்படும். ங்காடாபிட் மன்சோ சடங்கின் போது மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறும். மணமகள் குடும்பத்தினர் சூழ மணமகன் வீட்டைச் சுற்றி வருவான். மணமகனின் கையில் புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான அடையாளமாய் கூடையொன்றும் புஜாக் என்றழைக்கப்படும் குறுவாள் ஒன்றும் இருக்கும். திருமண உறுதிச் சடங்கின் போது ஒப்புக்கொள்ளப்பட்டதைப் போன்று பரிசுப்பொருட்கள் அளிக்கப்படும். அடுத்ததாக நடைபெறும் பகு அத்திஸ் சடங்கு திருமணம் முடிந்த மூன்றாவது நாள் நடைபெறும். மணமக்களை பகோட் எனப்படும் துர் ஆவி நெருங்காமல் இருக்க அவர்களின் கால்பாதங்கள் தூய்மை செய்யப்படும். பகு அத்திஸ் (Bagu Atis) சடங்கு நடைபெற்று இரண்டாவது நாளன்று ங்குலி அங்காய் (nguli angai ) சடங்கு நடைபெறும். மணமக்கள் புதிய வீட்டுக்குக் குடியேறுவதை ஒட்டி இச்சடங்கு நிகழும்.

உசாத்துணை


✅Finalised Page