under review

பா. நாகமணிப்போடி அண்ணாவியார்

From Tamil Wiki
பா. நாகமணிப்போடி அண்ணாவியாருடன் பேராசிரியர் மெளனகுரு

பா. நாகமணிப்போடி அண்ணாவியார் (ஜூலை 22, 1910) ஈழத்தமிழ் கூத்துக் கலைஞர். கூத்தில் முக்கியமான கதாநாயகியாக ஆடும் "குமாரத்தி" வேடத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டார். தன் வாழ்நாளில் இருபத்தியெட்டு கூத்துக்களை அரங்கேற்றம் செய்துள்ளார். மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழர்கள் வாழும் கிராமமான கன்னன்குடாவில் பாலகப்போடிக்கு மகனாக ஜூலை 22, 1910 அன்று நாகமணிப்போடி பிறந்தார். தந்தை பாலகப்போடி மத்தள அடிகாரர். தன் ஐந்து வயதிலிருந்து நாகமணிப்போடி மத்தளம் கற்றார். தந்தையுடன் கூத்துக்கலை பார்க்கச் சென்று தாளக்கட்டுகளைக் கற்றார். கன்னன்குடாவிற்கு அருகிலுள்ள சாளம்பக்கேணியிலுள்ள பெண்ணைத் திருமணம் செய்து அங்கே குடியேறியதால் "சாளம்பக்கேணி நாகமணிப்போடி" என்றழைக்கப்பட்டார். நாகமணிப்போடியின் பெண்வேடமிட்டு ஆடும் கூத்திற்கு ரசிகையானவரையே அவர் திருமணம் செய்து கொண்டார். நாகமணிப்போடி, சீனித்தம்பி அண்ணாவியிடம் தென்மோடி பயின்றார். நாகமணிப்போடி தென்மோடி, வடமோடி இரண்டிலும் வல்லவர்.

தோற்றம்

வெற்றுடம்பு, வட்டமான முகம், எதையும் ஊடுருவும் ஆர்வம் தெரியும் கண்கள், கள்ளமற்ற குழந்தைச் சிரிப்பு, காதில் கடுக்கன், தலைமயிரை வாரிக்கட்டி சின்னக் குடும்பி, நெற்றி நிறைய திருநீறு எனவும், பண்டைய கிராமியத்தோற்றம், பார்த்ததும் மரியாதை வரும் தோற்றம் எனவும் நேரில் கண்டவர்கள் பதிவு செய்துள்ளனர்

கலை வாழ்க்கை

நாகமணிப்போடி ஐம்பது வருட காலம் தொடர்ச்சியாக கூத்து பழகினார். ஆடுதல், பாடுதல், மத்தளம் வாசித்தல் போன்ற திறமைகளைக் கொண்டிருந்தார். தென்மோடி பெண்ணாட்டம் ஆடக்கூடியவர். முப்பத்தி ஐந்து விடிய விடிய ஆடும் முழுநீளக் கூத்துகள் பழகியுள்ளார். பதினாறாம் வயதில் வள்ளியம்மன் நாடகம் என்ற முதல் கூத்தை தன் தந்தையின் உதவியோடு அரங்கேற்றினார்.

நாகமணிப்போடியின் திறமையைக் கண்டுகொண்ட கன்னன்குடா வலையறவின் பெரும் அண்ணாவியரான சீனி அண்ணாவியார் தான் பழக்கிய கூத்தில் நாகமணிப்போடியை குமாரத்தியாக தேர்வு செய்தார். ஒருவர் அண்ணாவியாக வேண்டுமென்றால் அந்த அண்ணாவியார் முக்கியமான கதாநாயகியாக (குமாரத்தி) ஒரு பெண் கூத்து பாத்திரம் ஆடியிருக்க வேண்டும். மென்மையான் குரல் வளமும், உச்சத்தில் பாடக்கூடிய திறமையும், ஒற்றை நாடி உடம்பு, அழகான தோற்றமும் கொண்ட நாகமணிப்போடி தன் இளம் வயதிலேயே குமாரத்தியாக ஆடி சீனி அண்ணாவியாரின் மதிப்பைப் பெற்றார். இவரின் பெண் ஆட்டம் மக்களாலும், குறிப்பாக பெண்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.

தான் பழக்கிய கூத்துகளில் தனக்கு விருப்பமான கூத்துகளாக மதுரவாசகன், அலங்கார ரூபன், வீரகுமாரன் ஆகிய நாடகங்களை நாகமணிப்போடி குறிப்பிடுகிறார். கற்பனைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு ஈழத்துக் கூத்துப் புலவர்கள் இலக்கிய நயமும் சந்த சிறப்பும் கொண்டு பாடப்பட்ட மிகப்பழைய நாடகங்கள் இவை. இந்த நாடகங்களைப் பின்பற்றியே உள்ளூர் புலவர்கள் வேறு கூத்து நூல்களை எழுதினர். கூத்து நூல்களில் தலையாயதாகக் கருதப்படுபனவற்றை தெரிவு செய்யும் நுணுக்கத்தையும் ரசனையும் பெற்றிருந்தார். பேராசிரியர் சி. மெளனகுருவின் "மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்" ஆய்வு நூலில் பதிவு செய்துள்ள தென்மோடித் தாளக்கட்டும், ஆட்டகோலங்களும் நாகமணிப்போடி அண்ணாவியாரும், ஆறுமுகப்போடி அண்ணாவியாரும் வாயால் சொன்ன தாளக்கட்டுகள் என மெளனகுரு குறிப்பிடுகிறார்.

அவர் பழக்கிய நாடகங்களில் "அல்லி நாடகம்" குறிப்பிடத்தகுந்தது. அல்லி நாடகத்தை நாகமணிபோடி 1994-ல் அரங்கேற்றினார். பல சீடர்களைப் பெற்றிருந்தாலும் நாகமணிப்போடி தனக்கு மிகவும் விருப்பமானவராக பாலகப்போடி அண்ணாவியாரைக் குறிப்பிடுகிறார்.

சீடர்கள்
  • பாலகப்போடி அண்ணாவியார்
  • யோகேந்திரன்
  • பசுபதி
  • அழகிப்போடி
  • சின்னத்தம்பி
  • பொன்னம்பலம் மாநாகப் போடி

விருதுகள்

  • 1996-ல் இலங்கை அரசு தேசிய அளவில் "கலாபூசண விருது" அளித்தது.
  • 2003-ல் நாட்டிய மயில் விருதும், பணப்பரிசும் பெற்றார்.
நாகமணிப்போடி அண்ணாவியார் நிறுவப்படாத சிலை (நன்றி: மெளனகுரு)

விவாதம்

நூற்றாண்டு கண்ட கூத்துக் கலைஞரான நாகமணிப்போடிக்கு சிலை அமைக்கும் முயற்சியில் பேராசிரியர் மெளனகுரு தொடர் முயற்சியில் இருந்தார். சொந்தமுயற்சியில் சிற்பி சுமன்ராஜைக் கொண்டு செய்த நாகமணிப்போடியின் சிலை செய்து வைத்தும் கூட அதற்கான இடம் கிடைக்காமல் அவதிப்படுவதாக "பழையதும் புதியதும்" நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அரங்கேற்றிய கூத்துகள்

வடமோடி
  • வள்ளியம்மன் நாடகம்
  • வீரகுமாரன் நாடகம்
  • சூர சம்ஹாரம் நாடகம்
  • மாடுபிடி சண்டை நாடகம்
  • ஆரவல்லி சூரவல்லி
  • தரும புத்திரன்
  • பரிமழகாயன்
  • 17-ம் 18-ம் போர்
தென்மோடி
  • மதுரவாசகன் நாடகம்
  • அல்லி நாடகம்
  • அலங்கார ரூபன் நாடகம்
  • பவளவள்ளி நாடகம்
  • மதுர வாழன் நாடகம்
  • மயிலிராவணன்
  • லீலாவதி நாடகம்
  • நரேந்திரபூபதி நாடகம்
  • சாரங்கதாரன்
  • தம்பதி
  • புவனேந்திரன்
  • சித்திரசேனன்
  • அனுருத்திரன்
  • செட்டி வர்த்தகன்
  • பவளக்கொடி
  • அழகேந்திரன்
  • அரிச்சந்திரன்
  • புரூரவச் சக்கரவர்த்தி
  • தக்கன் யாகம்
பிற
  • மதன துரந்தன் நாடகம்

உசாத்துணை


✅Finalised Page